புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2019

பேரறிவாளன் விடுதலை கோரிக்கை: சஞ்சய் தத் வழக்கை பின்பற்றக் கோருகிறார் அற்புதம் அம்மாள்


மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சை தத்தை எந்த அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்தார்களோ அதே விதிமுறையைப் பின்பற்றி பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என்று அவரது தாயார் அற்புதம் அம்மாள் கோரியுள்ளார்.

சஞ்சய் தத்தை முன்கூட்டி விடுதலை செய்ய மத்திய அரசு இசைவு தெரிவிக்காதபோதும், மாநில அரசு முன்வந்து முன்கூட்டியே அவரை விடுதலை செய்தது என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் தெரிவிக்கிறது என்கிறது பேரறிவாளன் தரப்பு.

1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் தத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் தண்டனை காலத்திற்கு முன்னதாக, அதாவது எட்டு மாதங்களுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது, சஞ்சய் தத் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை ஏன் ஏழு பேர் விடுதலையில் பின்பற்றக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பியுள்ளது. இது நடந்து ஒன்பது மாதங்கள் ஆன பிறகும் ஆளுநர் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தமது மகன் விடுதலைக்காக மாநிலம் முழுதும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள். இதனிடையே சஞ்சய் தத் விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார் பேரறிவாளன்.

பேரறிவாளன்
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதில்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேரறிவாளனின் வழக்குரைஞர் சிவக்குமார், ''எங்களுக்கு கிடைத்த ஆவணங்களில், சஞ்சய் தத்தை முன்கூட்டி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை த்திய அரசு 2015 டிசம்பர் மாதம் நிராகரித்தது. 55 நாட்கள் கழித்து மகாராஷ்டிர மாநில அரசு தங்கள் சிறை விதிகளை பயன்படுத்தி, 2016 பிப்ரவரி மாதம் தண்டனை கழிவு வழங்கி முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அதே வழிமுறைகளை பின்பற்றி, ஏழு பேரை விடுதலை செய்யமுடியும். நாடு முழுவதும் எல்லா சிறைவாசிகளுக்கும் ஒரே விதமான சட்டம் பின்பற்றவேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது,'' என்றார்.

சிறைத்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் சட்டத்தின் அடிப்படியில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கமுடியும் என்று கூறும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், '' என் மகனின் விடுதலைக்காக ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்து 270 நாட்கள் ஆகிறது. இது தொடர்பாக ஒரு பதிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்தால், எங்களுக்கு இதில் ஒரு தெளிவு கிடைக்கும். கடந்த 28 ஆண்டுகளாக என் மகன் சிறையில் இருக்கிறான். விடுதலைக்கான சாத்தியங்கள் இருந்தும் அவன் சிறையில் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,'' என்கிறார் அற்புதம் அம்மாள்.

மேலும் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரறிவாளனின் விடுதலையில் அக்கறையுடன் செயல்பட்டார் என்றும், அவர் இருந்திருந்தால், தனது மகன் விடுதலை பெற்றிருப்பார் என்றும் கூறுகிறார் அவர்.

ad

ad