2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை இலங்கை கால்பந்து அணி பெற்றுள்ளது. குறித்த இரண்டு தொடர்களுக்குமான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி மக்காவு அணியை வெற்றிகொண்டதன் மூலம் அடுத்த சுற்றில் ஆடுவதற்கு தகுதி பெற்றது.
இந்த சுற்றில் தலா ஐந்து அணிகள் கொண்ட எட்டுக் குழுக்கள் மோதவுள்ளன. இதற்கான அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை (17 ஆம் திகதி) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், இலங்கை அணி எச் குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இலங்கையுடன் துர்க்மெனிஸ்தான், லெபனான், தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய அணிகள் மேதவுள்ளன.
இலங்கை அணிக்கான போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 4ஆம் திகதிக்கு வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளன.
இந்த தகுதிகாண் சுற்றின் எட்டுக் குழுக்களிலும் வெற்றி பெறும் அணிகள் மற்றும் இரண்டாவது இடத்தை பெறும் சிறந்த நான்கு அணிகள் மூன்றாவது சுற்று போட்டிகளுக்கு தகுதி பெறுவதோடு 2023 ஆசிய கிண்ண போட்டிகளுக்கு தமது இடத்தை உறுதி செய்து கொள்ளும். எஞ்சிய அணிகளுக்கு ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறே தொடர்ந்து வாய்ப்பு இருப்பதோடு, அதற்கு அந்த அணிகள் பிளே ஓப் சுற்று ஒன்றிலிருந்து முன்னேற்றம் காண வேண்டும். இதன்போது சீனாவில் நடைபெறும் ஆசிய கிண்ணத்தில் மேலும் 24 அணிகளை தேர்வு செய்வதற்காக இந்த அணிகள் வேறாக தகுதிகாண் போட்டிகளில் ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குலுக்களின் பிரகாரம் நடப்பு ஆசிய சம்பியனான கட்டார் ஈ குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குழுவில் இந்தியா, ஓமான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் நாடு என்பதால் கட்டார் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுகின்றபோதும், ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு இந்த தகுதிகாண் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமானதாகும்.
ரஷ்யாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபா உலகக் கிண்ண போட்டியில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் எப் குழுவில் கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், மியன்மார் மற்றும் மொங்கோலிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது