புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஆக., 2019

ஷவேந்திர சில்வா நியமனம்! உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன! ஐ.நா அதிருப்தி

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெட்ச்லெட் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த பதவி வழங்கல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த யுத்தகால பகுதியில் ஷவேந்திர சில்வா, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனிதகுல சட்டங்களை மீறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அவ்வாறான பதவி வழங்கப்பட்டிருக்க கூடாது எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு வழங்கிய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் போன்ற உறுதிமொழிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த உதிதமற்ற நிலைமை ஐ.நா அமைதிகாக்கும் செயல் முறையையும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதத்தில் இராணுவப் சேவை பணியகத்தின் உறுப்பினராக ஷவேந்திர சில்வாவை நியமிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்தது.

ஆனால் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாட்டுக்கு தேசிய சுதந்திர முன்னணி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

இதன் மூலம் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் தனக்குள்ள இராஜதந்திர வரையறையை மீறி இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.