22 அக்., 2019

கஜேந்திரகுமாருக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றுகொள்ளும் முயற்சியாக தான் ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் யாருடைய சொல் பேச்சையும் கேட்டு அந்த முடிவை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் பேச்சினை கேட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

'அப்படி அவர்கள் சொல்லும் பாஷையில் சொல்ல வேண்டுமானால். இவர்கள் சீனாவிடம் கேட்டுவிட்டு தான் மலசலம் கழிக்க செல்கின்றார்களா என்ற கேள்வி எங்களாலும் கேட்கமுடியும்.

இந்த பொது இணக்கப்பாட்டு வேலைதிட்டமானது தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட பட்டறிவினை அடிப்படையாக வைத்தே ஆறு கட்சிகள், பல்கலைகழக மாணவர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளுடன் இணைந்து இந்த கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.

நடைபெற்ற 5 கூட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினரும் கலந்து கொண்டார்கள். அந்த கோரிக்கைகள் கைச்சாத்திடுவதற்கான இறுதி சந்தர்ப்பத்திலே தான் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து, விலகினார்கள்.

இடைக்கால அறிக்கை என்பது செயலிழந்து போன விடயம். அதனை விட தயாரிக்கபட்ட 13 அம்ச கோரிக்கைகளில் அவர்களது கட்சி முன்வைத்த பல்வேறு விடயங்களும் உள்வாங்கபட்டிருக்கிறது.

தற்போது தமிழ் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட 13 அம்ச கோரிக்கைகளை தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கோத்தபாய நேரடியாக தெரிவித்துள்ளதுடன் எந்த ஒரு உடன்படிக்கைகளிற்கும் இணங்கி வரமாட்டோம் என்று சஜித் பிரேமதாசவும் கூறியிருக்கிறார்.

வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பை ஏற்கமாட்டோம் என்று மக்கள் விடுதலை முண்ணனியும் கூறியிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் சஜித்திற்கு வாக்களிக்கும் நிலைமை இருக்குமானால் நிச்சயமாக நாம் அவருடன் தான் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் இந்த 13 அம்சக் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு ஏனைய வேட்பாளர்களை விட அவருக்கு தான் மிக அதிகமாக இருக்கிறது.

எனவே, அவருக்கு வாக்கு வேண்டும் என்றால் எமது கோரிக்கையை ஏற்க வேண்டும். இதேவேளை, எமக்கு தேவையான விடயங்களை நிராகரித்து விட்டு தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் சஜித் பிரேமதாச கோருவதில் எந்தவித நியாயமும் இல்லை.

எனவே, இந்த 5 கட்சிகளும் இணைந்து எடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக நாம் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த தேர்தல்களில் நிபந்தனைகளற்ற ஆதரவினை கூட்டமைப்பு வழங்கியிருந்தமையால் தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்.இதனால் எமது கோரிக்கைகளினை நிராகரிப்பவர்களிற்கு ஆதரவு வழங்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருப்பதாக இன்றைய தினம் சிங்கள ஊடகமொன்றில் இருந்து செய்தி வந்திருப்பதாக அறிந்தேன். அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும், நாம் பலதரப்பட்டோரின் வேண்டுகோளிற்கு இணங்க, ஒவ்வொரு கட்சிகளின் முன்மொழிவுகளை பல்கலைக்கழக மாணவர்களிடம் சமர்ப்பித்து, அது தொகுக்கப்பட்ட பின்னரே 13அம்ச கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டது.பொது உடன்படிக்கையின் படி, அனைத்து கட்சிகளும் தீர்மானித்ததன் பின்னர் இவ்வாறான சந்திப்புகள் அந்த கோரிக்கைகளை பலம் இழக்க செய்யும் வேலையாகவே அமையும்.

அத்துடன் தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு தரப்பிற்கு ஆதரவு வழங்கும் செயற்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தன்னிச்சையாக செயற்பட்டால் இந்த பொது இணக்கப்பாடு என்பது செயலிழக்கும் நிலைமையே ஏற்படும். எனவே, கூட்டமைப்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அத்துடன் எங்களை சந்திக்க விரும்புபவர்களை சந்தித்து இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம். பேச விரும்பாதவர்களோடு பேசவேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய நேரடியாகவே நிராகரித்திருக்கிறார். எனவே, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய முண்ணனி ஆகிய இரண்டு கட்சிகளிற்கிடையிலுமே எமது சந்திப்பு இருக்கிறது.

அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எங்களது பிரச்சினைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள் என்பதை பார்த்து, இந்த 5 கட்சிகளும் மீண்டும் கலந்துரையாடி எடுக்கவேண்டிய நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்போம்.

இதேவேளை எம்.கே.சிவாஜிலிங்கம் வேட்பாளராக நிற்பது தொடர்பாக அவரது கட்சியான ரெலோவிற்குள் பேசப்படவில்லை, ஏனைய கட்சிகளுடனும் பேசப்படவில்லை. எனவே அவருக்கு ஆதரவு தெரிவிப்பதா என்று 5 கட்சிகளும் இணைந்தே தீர்மானிக்கும்.

ஜனாதிபதி தேர்தலிற்கான பொது உடன்படிக்கையில் தான் இந்த ஐந்து கட்சிகளும் கைச்சாத்திட்டிருக்கின்றது. எனவே, இந்த தேர்தல் தொடர்பில் எடுத்து கொண்ட பொது உடன்படிக்கையின் படி நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் அடுத்தக் கட்ட நிலைப்பாடு தொடர்பாக பின்னர் யோசிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.