புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 நவ., 2019

ஜனாதிபதி தேர்தல் -முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தனிடம்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தி இறுதி முடிவை அறிவிக்கும் அதிகாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளது.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான இரா சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சாந்தி சிறீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன், துரைரெட்னசிங்கம் உட்பட யாழ். மாநகர சபை மேயர் ஆர்னோல்ட், ஜனாதிபதி சட்டத்தரணி கே.தவராசா, வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஈ.சரவணபவன் சுகயீனம் காரணமாக கூட்டத்துக்கு சமூகமளிக்க முடியாதென அறிவித்திருந்தார். எனினும் சிவஞானம் சிறிதரன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமை தொடர்பில் அறிவித்திருக்கவில்லை.

காலை 10 மணிக்கு ஆரம்பமான மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டது.

இதில் ஏகமனதான ஆதரவு சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கே கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானித்தனர்.

அதன் அடிப்படையில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஏகமனதான ஆதரவு அளிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் அதிகாரம் இரா.சம்பந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்சியின் தீர்மானம் தொடர்பில் பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உத்தியோகப்பூர்வமாக இத் தகவலை அறிவித்தார். குறித்த ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் காலை 10.30 முதல் 4.30 வரை நடைபெற்றது. இதில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்றக் குழு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இது பற்றி ஆராயப்பட்டது. இன்று எமது கட்சியினுடைய உத்தியோக பூர்வ முடிவாக அன்ன சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டுமென்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை தமிரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய இரண்டு கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். நாங்கள் பிரதான இரு வேட்பாளர்கள் தொடர்பான பல விடயங்களை ஆராய்ந்தோம். அதனை குறிப்பிட்டு கூற முடியாது. அவர்களுடைய கடந்தகால செயற்பாடுகள், ஜனநாயகத்திற்கு அவர்கள் காட்டும் பங்களிப்பு, எங்களுடைய எதிர்பார்ப்புக்கள், அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இப்படியாக பல விடயங்களை ஆராய்ந்தோம்.

எங்களுடைய கருத்தையும் கேட்டு தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். மக்கள் சுயமாக வாக்களிப்பவர்கள். மக்கள் திறமைசாலிகள். மக்களுக்கு அரசியல் தெரியும். விசேடமாக தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. மக்களுடைய கருத்தையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். மக்களுக்குத் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதல்ல. நிதானித்து இருக்கின்ற அரசியல் நிலையில் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தோடும் நாட்டில் இருக்கும் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவது நாங்கள்தான். அந்த கடப்பாட்டை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் மக்களை சரியாக வழிகாட்ட வேண்டும்.



இந்த தீர்மானம் சம்மந்தமான விளக்கமான காரணங்கள் அடங்கிய அறிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பேசிய பின்னர் வெளியிடப்படும் என்றார்.