புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்

”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியது.

இன்று ஆரம்பமான மூன்று நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் வலுப் பெற்றிருக்கின்றனர்.


போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற, சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் நாகேந்திரராஜா செளமியன், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மைதானச் சொந்தக்காரர்களான யாழ். மத்திய கல்லூரி அணிக்கு வழங்கினார்.

இதன்படி, போட்டியின் முதலில் துடுப்பாடிய யாழ். மத்திய கல்லூரி அணியினர் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் காட்டினர். யாழ். மத்தியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த திவாகரன் நாகேஸ்வரன் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, ஏனைய நம்பிக்கைக்குரிய ஆரம்ப வீரரான இயலரசன் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

தொடர்ந்து யாழ். மத்திக்காக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சன்சயனும் 20 ஓட்டத்துடன் வெளியேற, சாரங்கன் ஸ்ரீதரன் 25 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் யாழ். மத்திய அணியின் தலைவர் வியாஸ்காந்த் சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தினை காட்டிய போதிலும் அது நீண்ட நேரத்திற்கு நிலைக்காமல் போனது. பின்வரிசை வீரர்களை சென் ஜோன்ஸ் சுழல் பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்திருந்தனர்.

இதன் காரணமாக, முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவெளியில் 57.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யாழ்.மத்திய கல்லூரி அணி 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் வியாஸ்காந்த் 30 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.

இதேநேரம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளர்களான கரிஷன் 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, விதுஷன் யோகதாஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது.

சிறந்த முறையில் களத்தடுப்பைக் காண்பித்த சென் ஜோன்ஸ் வீரர்கள் 3 ரன் அவுட்களையும் ஒரு ஸ்டம்பிங்கையும் செய்திருந்தனர். குறிப்பாக இன்றைய நாள் ஆட்டத்தில் சென் ஜோன்ஸ் வீரர் சபேசனின் களத்தடுப்பு எதிரணிக்கு பெரும் அழுத்தம் கொடுத்திருந்தது.


இதன் பின்னர், போட்டியின் முதல் நாளிலேயே தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணிக்கு அரைச்சதம் கடக்கத் தவறிய சுகேதன் பலமளித்தார்.

இதனால், போட்டியின் முதல் நாள் நிறைவில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 30 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களை பெற்று வலுப்பெற்று காணப்படுகின்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் சிறப்பாக செயற்பட்ட சுகேதன் 49 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழந்தார். களத்தில் நிற்கும் வினோஜன் 19 ஓட்டங்களையும், டினோஷன் 15 ஓட்டங்களையும் எடுத்திருக்கின்றனர்.

யாழ். மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் விதுஷன் தனது சுழல் மூலம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, மத்திய கல்லூரியை விட சென் ஜோன்ஸ் வீரர்கள் முதல் இன்னிங்சில் 32 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளனர். நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறும்

ad

ad