புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஏப்., 2020

இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்படட அமெரிக்க வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை


அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி (ஹெக் செய்து) சுமார் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் பிரதான தனியார் வங்கி ஒன்றில் உள்ள 36 வங்கிக்கணக்குகளில் வைப்பிலிட்டப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இணையத் தளம் ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் சர்வதேச வணிக நிறுவனம் ஒன்றின் வங்கி கணக்கிலேயே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாரிய மோசடி தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த இணையத்தளம் ஊடாக, தாம் கோரிய சேவையை வழங்க முடியாமல் குறித்த நிறுவனம் பெற்றுக்கொண்ட பணத்தொகையை மீள கையளிக்கும் விதமாக இந்த மோசடி புரியப்பட்டுள்ளது.

இது குறித்து 7 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசேட விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

உள்நாட்டின் குறித்த தனியார் வங்கி, தனது வங்கியின் 36 கணக்குகளுக்கு திடீரென வந்த ஒரே அளவான பாரிய தொகையையடுத்து, அதில் சந்தேகம் கொண்டு சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளிலேயே இந்த 1,400 மில்லியன் ரூபா மோசடி அம்பலமாகியுள்ளது.

சி.ஐ.டி.விசாரணைகளில் இந்த மோசடி வெளிப்படுத்தப்படும் வரை குறித்த அமெரிக்க வங்கியோ அல்லது சர்வதேச பொருள், சேவை நிறுவனமோ அது குறித்து அறிந்திருக்கவில்லை.

இந்த நிலையில், இலங்கையிலிருந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் பிரகாரமே அவர்கள் இதனை அறிந்து கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் சி.ஐ.டி. முன்னெடுத்துள்ள விசாரணைகளில், மோசடி செய்யப்பட்ட 1, 400 மில்லியன் ரூபாவில் 900 மில்லியன் ரூபாவை சி.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர்.

குரித்த 36 வங்கிக் கணக்குகளுக்கும், ஹெக் செய்யப்பட்டு அனுப்பட்டுள்ள பணம், பின்னர் அந்த கணக்குகளில் இருந்து பல்வேறு வங்கிகளில் உள்ள பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.