தற்காலிக விசா பெற்றவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப முடியாத நிலை
கொரோனா கிருமித் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அங்கமாக, சர்வதேச பயணத்தடை ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சூழலில், ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான விசா பெற்ற வெளி நாட்டினர்களும் ஆஸ்திரேலிய முன்பு பணியாற்றி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் இருப்பவர்களும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமொன்றில் கிடைத்திருக்கும் புதிய பணியில் இணைவதற்காக ஆஸ்திரேலியா சென்ற, Alessando Mannini எனும் புவி இயற்பியலாளரான இத்தாலியர் தனது குடும்பத்தை எப்போது காண்பேன் என்ற தவிப்பில் இருக்கிறார். மலேசியாவில் உள்ள இவரது குடும்பம் குழந்தைகளின் கல்விக்காலம் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த நிலையில், கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட எல்லைக்கட்டுப்பாட்டினால் இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் எப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம் எனத் தெரியாது கூறியுள்ள Mannini, “டிசம்பர் அனுமதிக்கப்படலாம் அல்லது அடுத்த ஆண்டு கூட ஆகக்கூடும்,” எனத் தெரிவித்திருக்கிறார்.
இவரைப் போல், ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற வெளிநாட்டினர்கள் பயணத்தடை காரணமாக பல விதமான சிக்கல்களை, இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
“இந்த வகையில்(தற்காலிக விசாவில் வந்தவர்கள்) வந்த பெரும்பாலான மக்கள் (வெளிநாட்டினர்) வரி செலுத்துபவர்கள்,” எனக் கூறுகிறார் Mannini. இந்த நிலையில், “எல்லைகளை வலுவாக வைத்திருப்பதில் தற்போது கவனம் செலுத்துகிறோம்,” எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் துட்ஜ்.
ஆஸ்திரேலியாவில் இன்றைய நிலையில் தற்காலிக விசா பெற்ற வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இதில் எவ்வளவு வெளிநாட்டினர் எல்லை மூடப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.