www.pungudutivuswiss.com
ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முயாத ஒன்றாக இருக்கின்றது. ஆகவே அந்த ஆயுதப் போராட்டத்தை எவராவது
கேலி செய்வதோ கொச்சைப்படுத்துவதோ விமர்சிப்பதோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முயாத ஒன்றாக இருக்கின்றது. ஆகவே அந்த ஆயுதப் போராட்டத்தை எவராவது
கேலி செய்வதோ கொச்சைப்படுத்துவதோ விமர்சிப்பதோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது தலைவர் சம்பந்தர் கட்சியில் இல்லையெனவும் பின்னரே அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாகவும் அதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் சம்பந்தன் ஐயாவுக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம் எனவும் இதன்போது தெரிவித்தார்.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பல அரசியல் பணிகளை செய்திருக்கின்றது. இந்த வரலாற்றை மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (11) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,
“எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனின் கருத்து தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டுவருவதை காண முடிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் தலைவர் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் பல கருத்துக்களை அவர் கூறியிருக்கின்றார். விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அவர் அவ்வாறான கருத்துக்களை கூறியிருப்பாராயின் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையில் ஒரு ஆயுதப் போராட்டத்தின் காரணமாகத்தான் கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்றுவரை அது ஜனநாயக ரீதியாக அரசியல் பணியை செய்து கொண்டிருக்கின்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தமாகவே புலம்பெயர்ந்து வாழ்கின்ற பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்று அங்கிருந்து ஏதோவொரு வகையிலே தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கருத்தை கூறியிருக்கின்றார். 2001ம் ஆண்டு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது புலிகள் இயக்கம் இருந்தபோதாகும். அது உருவாக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றோம். அதில் குறிப்பாக 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கூட்டமைப்பானது பல அரசியல் பணிகளை செய்திருக்கின்றது. இந்த வரலாற்றை மாற்ற முடியாது.
புலிகள் மௌனித்ததன் பிற்பட்ட காலப் பகுதியில் அவர்களுடன் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறுவதையோ மாற்றுக் கருத்துகளை கூறுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. சுமந்திரன் அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே நான் அதனை பார்க்கின்றேன். சிலர் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே சித்தரிக்கின்றனர்.
ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்பவனில்லை என்றும் ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை தான் ஏற்றுக்கொள்பவன் என்றும் அவர் கூறியிருக்கின்றார். அவர் ஏற்றுக்கொள்வதென்பது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். கூட்டமைப்பினர் அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தமட்டில் இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு தேசியக் கொடியை அங்கீகரிக்கவில்லை. சில விடயங்கள் காரணமாக 1972ம் ஆண்டுக்கான அரசியலமைப்பின்படி தமிழ் மக்களை அரசாங்கம் முற்றாக புறக்கணித்ததன் நிமித்தமாக இவ்வாறான நிலைப்பாடு தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கின்றது.
இன்று சர்வதேச ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினை சென்றிருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் மாவீரர்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். அவர்களின் பெற்றோர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தியாகங்களை நாங்கள் கொச்சைப்படுத்த முடியாது.
புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் காரணமாகவே தமிழர்கள் இன்று தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பிற்கு ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தமில்லை, அல்லது அதுதொடர்பில் அக்கறையில்லை என்று கூறுபவர்கள் கூட்டமைப்பில் இருந்து கொண்டு புலிகளை அல்லது போராளிகளை அல்லது மாவீரர்களை உதாசீனம் செய்யும் விதமாக கருத்துகள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
புலிகளின் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிபாகம் என்பது ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம். இன்று பல கட்சிகள் கூட்டமைப்பினை விமர்சிக்கும் செயற்பாட்டை மட்டுமே முன்னெடுக்கின்றது. அவர்கள் தமது கட்சி கொள்கைகள் பற்றிக் கூறுவதில்லை. இவர்களுக்கு கூட்டமைப்பு பற்றி கருத்து தெரிவிப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.
கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்கள்,தமிழ் தேசிய கொள்கை உடையவர்களுக்கு அது தொடர்பில் கருத்து கூறுவதற்கான சுதந்திரம் இருக்கின்றது. புலிகளின் போராட்டத்தினை நானாக இருந்தாலும் சம்பந்தன் ஐயாவாக இருந்தாலும் அந்த போராட்டத்தினை கொச்சைப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ அல்லது அந்த ஆயுதப் போராட்டம் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வளர்ந்துவிட்டது, அல்லது தமிழ் தேசியத்தினை நாங்கள் சர்வதேசம் வரையில் கொண்டு சென்றிருக்கின்றோம் என்று கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை.
எப்போதும் புலிகளின் போராட்டம், தியாகம், மாவீரர்களின் தியாகம் காரணமாகவே சர்வதேசத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை கூர்மைபெற்றுள்ளது. சர்வதேசத்தில் இருந்து இன்று எமது பிரச்சினை பார்க்கப்படுகின்றது என்றால் அது கூட்டமைப்பின் வகிபாகம் மட்டுமல்ல புலம்பெயர் மக்களின் வகிபாகமும் உள்ளது. புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் மக்கள் இவ்வாறு புலம்பெயர்ந்திருக்க முடியாது.
ஆயுதபோராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருந்திருந்தால் இவ்வாறு வெளியில் சென்றிருக்க முடியாது. சுமந்திரன் தான் கூறிய கருத்தினை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அவர் கூறியிருந்தால் அவர் தன் கருத்தினை மீளப்பெறுவது சிறந்ததாகும். – என்றார்.