www.pungudutivuswiss.com
கொரோனா கட்டுப்பாடுகளால் மார்ச் மாதம் 25ஆம் திகதி மூடப்பட்ட பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடனான சுவிட்சர்லாந்தின் எல்லைகள், மே 11 முதல் படிப்படியாக திறக்கப்பட உள்ளன.
ஆனால், நாட்டுக்குள் நுழைய எல்லோருக்கும் அனுமதி கிடையாது! எல்லைகள் மூடப்பட்டதிலிருந்தே, சுவிஸ் குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள், எல்லை தாண்டி பணி புரிவோர் என சில குறிப்பிட்ட மக்கள் மட்டுமே சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில், மே 11 முதல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்த சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக மாகாண புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
மே 11இலிருந்து யார் சுவிட்சர்லாந்துக்குள் நுழையலாம்?
மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேராதவர்கள், அதாவது நார்வே, ஐஸ்லாந்து மற்றும் Liechtenstein பகுதியைச் சேர்ந்தவர்கள், அதிலும் அவர்கள் சுவிட்சர்லாந்தில் பணியாற்ற ஏற்கனவே உரிமம் பெற்றிருக்கும் பட்சத்தில், இந்த கொரோனா குழப்பத்தால் அவர்களுக்கு விசா கிடைக்கவில்லையென்றால் கூட, அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழையலாம்.
அத்துடன், சுவிஸ் குடிமக்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்திலிருக்கும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துகொள்ளலாம்.
கூடுதல் வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
மார்ச் 25க்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் வாழிட உரிமங்கள் மற்றும் எல்லை தாண்டிய பணியாளர்கள் உரிமங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பணி வழங்குவோர், மூன்றாம் நாடுகளிலிருந்து பணியாளர்களை பணிக்கமர்த்துவது கோரி, அதே காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும்.
சுவிட்சர்லாந்துக்குள் நுழைய யாருக்குத் தடை?
அத்தியாவசியம் தவிர்த்த பிற பயணங்களுக்காக தடை ஏற்கனவே அமுலில் இருக்கும் நிலையில், சுற்றுலாப்பயணிகள் போன்றவர்களுக்கு, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களானாலும் சரி, மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களானாலும் சரி, சுவிட்சர்லாந்துக்குள் நுழைய இப்போதைக்கு அனுமதியில்லை.
இந்த தடை எல்லை தாண்டி ஷாப்பிங் செல்பவர்களுக்கும் பொருந்தும்.
விமானங்களில் சுவிட்சர்லாந்து நோக்கி வருபவர்களும், அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதியுடையவர்களாக இருந்தாலன்றி, மற்றபடி விமான நிலையங்களிலேயே வைத்து திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பிற கட்டுப்பாடுகள் எப்போது நெகிழ்த்தப்படும்?
ஜூன் 8இலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், கொரோனா பரவல் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்துதான் இதுவும் முடிவுசெய்யப்படும்.
அத்துடன், தற்போது ஜேர்மனியுடனான எல்லைகள் திறக்கப்படப்போவதில்லை, அவை மே மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.