புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 ஜூன், 2020

பறிபோகும் வடமராட்சி கிழக்கு: நீதிமன்ற கட்டளைகள் உதாசீனம்

யாழ்.வடமராட்சி கிழக்கில் பிரதேச செயலரின் அறிவுறுத்தல் மற்றும் நீதிமன்ற கட்டளையை மீறி வாடி அமைத்து கடலட்டை பிடிப்பதற்காக தென்னிலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் 18 படகுகள் சகிதம் பலர் வாடிகள் அமைத்து தொழில் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் குடாரப்பு கிராம மக்களும் குடாரப்பு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மருதங்கேணி பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக குறித்த வாடி அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்த வழங்கியிருந்தார்.

எனினும் அவரின் அறிவுறுத்தலையும் மீறி நேற்று பிற்பகல் வரை கடல் அட்டை தொழிலாளர்கள் வாடி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் திரு. சண்முகநாதன் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் நாகர்கோவில் வட்டார உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார், வேலுப்பிள்ளை பிரசாந்தன் உட்பட்ட பிரதிநிதிகள் குறித்த வாடிய அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடலட்டை பிடிப்பாளர்கள் தாம் உரிய முறையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றே குறித்த தொழிலில் ஈடுபடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததுடன். தமக்கு செம்பியன் பற்று பங்குத்தந்தையின் அனுமதியும் கடிதத்தின் அடிப்படையிலும்
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர் .

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு சண்முகநாதன் தமது மீன்பிடி தொழிலாளர்களின் ஜீவனாமோ பாயத்தை கருத்தில் கொள்ளாமல் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சகம் குறித்த கடலட்டை படிப்பதற்கான அனுமதியை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்த்து எதிர்வரும் திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்படகடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்
சமூக ஆர்வலர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும்

ஒருபோதும் இந்த கடல் அட்டை தொழிலில் ஈடுபடுவோரை பிரதேசத்திற்குள் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் குறித்த அனுமதியை வழங்கியி்ருப்பதனால் தமது தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக இத்தொழிலை மேற்கொள்வதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அங்கு சமூகமளித்திருந்த பருத்தித்துறை பிரதேசசபையின் நாகர்கோவில் வட்டார உறுப்பினர்ஆனந்தராசா ஹசுரேஷ்குமார் முறையற்ற விதத்தில் தமது வட்டாரத்தில் இந்த கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உரிய தரப்புகள் தடுத்து நிறுத்தி மீனவர்களின் ஜீவனோபாயம் உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கரைவலை தொழிலில் ஈடுபடும் பிரதேசத்தில் கடலட்டை பிடித்து கடைபிடிப்பது தடைசெய்யப்பட்ட ஒன்று என்றும், இதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே இன்று பிற்பகல் குடாரப்பு கிராம சேவகர் குறித்த கடல் அட்டை தொழிலாளர்கள்தான் வாடி அமைத்து தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அறிவித்திருந்தார்.ஆனாலும் அவர்கள் நிறுத்தாது தொடர்ந்தும் வாடிகளை அமைக்கும் பணிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு கடற்கரையோரத்தில் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதை தடுத்து நிறுத்துமாறு கோரி பிரதேச செயலரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் பிரதேச செயலரின் அனுமதியின்றி வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபடுவதைநிறுத்துமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்த நிலையில் குறித்த கடலட்டை தொழிலாளர்கள் பிரதேசத்திலிருந்து வெளியேற்ப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் குடாரப்பில் 18க்கு மேற்பட்ட படகுகள், வெளியிணைப்பு இயந்திரங்களை உட்பட அனைத்தும் இறக்கப்பட்டு கடலட்டை தொழிலில் ஈடுபடும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.www.pungudutivuswiss.com