புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2021

அதிகார மாற்றத்துக்கு உடன்பட்ட ட்ரம்ப்... நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com
US Capitol Unrest
US Capitol Unrest ( AP )

"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத்தான் தூண்டுவார்.

"

"ஒரு சுயநலவாதியின் வரட்டு வீராப்புக்கான விலை இது. இரண்டு மாத காலமாக அவர் சொல்லிக்கொண்டிருக்கும் தவறான தகவல்களை நம்பி வந்தவர்களின் போராட்டம்தான் இது. இன்று நடந்தது அமெரிக்க அதிபர் தூண்டிவிட்ட கிளர்ச்சி..."- இன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றி ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சியின் உட்டா மாகாண செனட்டர் மிட் ரோம்னி உதிர்த்த வரிகள்தான் இவை!

2019-ம் ஆண்டு உலகெங்கும் ஒலித்த ஒரு குரல் மீண்டும் ஒலிக்கத்துவங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே அது. அப்போது, "இன்னொரு அதிபருக்கு இந்த நிலை வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள்" என ட்வீட் செய்தார் ட்ரம்ப். ஆனால், இந்த முறை அதற்குக் கூட வழியில்லை. ட்ரம்பின் ட்விட்டர், இன்ஸ்டா, ஃபேஸ்புக் என எல்லாவற்றுக்கும் அந்தந்த நிறுவனங்களே தாமாக முன்வந்து தடை விதித்திருக்கின்றன.

Capitol Protests
Capitol Protests
John Minchillo
ஜனவரி 20-ம் தேதி வரை பொறுத்திருக்காமல், ட்ரம்ப்பை அதற்கு முன்பே ஆட்சியில் இருந்து அகற்ற முடியுமா என ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ட்ரம்புக்கு எதிராக அவர் நியமித்த நீதிபதிகள், அவர் கட்சியைச் சார்ந்த தலைவர்களே குரல் எழுப்பி வருகிறார்கள். துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்கூட ட்ரம்ப்பின் பின்னால் இல்லை.

நன்றியுரையுடன் இந்த நான்காண்டுகளை முடிக்க மாட்டார் ட்ரம்ப் என்பது அனைவரும் யூகித்ததே! அதிபர் தேர்தலுக்கு முன்பு போட்டியிட்டு, கடைசி நேரத்தில் விலகிய பெர்னி சாண்டர்ஸ் கூட, இதைத்தான் அப்போதே சொல்லியிருந்தார். இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதென்பது எளிதான விஷயம். ஆனால், ட்ரம்ப்பை அங்கிருந்து அகற்றுவதென்பது லேசுபட்ட காரியம் அல்ல எனப் பேட்டியளித்திருந்தார்.

US protests
US protests
Andrew Harnik

தந்தையைப் போல் பிள்ளையென அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் ட்ரம்பின் ஆதரவாளர்கள். அவர்கள் தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று அமெரிக்கத் தலைநகரில் இந்தக் கலவரங்கள் உச்சம் தொட்டன. நூற்றுக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் டிசியில் இருக்கும் நாடாளுமன்ற வளாகமான US Capitol-ல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்கும் பணிகளைத் தடுக்கும் முயற்சியாக இதை அவர்கள் மேற்கொண்டனர். பாதுகாப்பு கருதி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாஷிங்டன் டிசியின் மேயர் முரியல் போவ்சர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். FBI அதிகாரிகள் இரண்டு வெடிகுண்டுகளைக் கண்டெடுத்திருக்கின்றனர். US Capitol தற்போது பாதுகாப்பாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர்.
Trump Supporters
Trump Supporters
Jacquelyn Martin

ஜார்ஜியாவின் செக்ரட்டரியிடம் முடிவுகளை மாற்றி அறிவிக்கும்படி, ட்ரம்ப் கட்டளையிட்ட ஆடியோ ஒன்று கடந்த வாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜியாவின் செக்ரட்டரி பிராட் ரேஃப்ன்ஸ்பெர்கரிடம், "நான் இன்னும் 11,780 ஓட்டுகளைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு இன்னமும் ஒன்றுதான் தேவைப்படுகிறது. நான் இதை வென்று விட்டேன்" என ஒலித்தது அந்த ஆடியோ. ஒரு ஜனநாயகத்தில் ஓட்டுக்களை கண்டுபிடிக்கவோ, தேடவோ முடியாது. மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிகாரிகள் அந்த வாக்குகளை எண்ண வேண்டும். முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் நம்புவது இதற்கு நேரெதிர். தேர்தல் முடிவுகளின் போதே, சில இடங்களில் அவர் முன்னிலை வந்தபோது, எண்ணுவதை நிறுத்தச் சொன்ன மாமேதை அவர்.

ஜனவரி 20-ம் தேதியுடன் ட்ரம்பின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆனால், 2024-ம் தேர்தலுக்கு மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுவார். கால்பந்து போட்டியைவிட குழப்பமான விதிகளை வைத்துச் சென்றிருக்கும் அமெரிக்க முன்னோர்கள், இதற்கும் வழிவகை செய்திருக்கிறார்கள். ஆர்ட்டிகள் 1, செக்ஷன் 3ன் படி ட்ரம்பை அதிபர் பதவியிலுருந்து நீக்குவதோடு, இனி ஒருக்காலமும் அவரால் அந்தப் பதவியில் அமர முடியாமல் அவர்களால் பார்த்துக்கொள்ள முடியும்.

Donald Trump
Donald Trump
Jacquelyn Martin

இதற்கான அதிகாரம் காங்கிரஸ் அவைக்கு உண்டு. அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வான போதும், அதை இன்னமும் ட்ரம்ப்பால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் எல்லா தகிடுதத்தம்களையும் செய்து பார்த்துவிட்டார். தொடர்ச்சியாக அவர் எழுப்பிய பல சந்தேகங்களுக்கு, எல்லா நீதிமன்றங்களும் எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதில், சில நீதிபதிகள் ட்ரம்ப்பாலேயே நியமிக்கப்பட்டவர்கள் என்பதுதான் நகைமுரண்.

ராணுவ அதிகாரத்தை வைத்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாதா என்று கூட யோசிப்பவர்தான் ட்ரம்ப் என்கிறார்கள். ரஷ்யாவில் தொடர்ச்சியாக புதின் அதிபராக இருக்கிறார், சீனாவிலும் அதே சூழல்தான். அமெரிக்காவுக்கு மட்டும் ஏன் ஒருவர் இரண்டு முறை மட்டும் அதிபராக இருக்க வேண்டும். 'ட்ரம்ப் வாழ்நாள் முழுக்க அதிபராகவே தொடர முடியாதா' என மக்கள் ஆதங்கப்படுவதாக ட்ரம்ப்பே முன்னர் பேசியிருக்கிறார். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் பால்டன், தன் புத்தகமான, 'The room where it all happened'ல் பதிவு செய்த வரிகள் இவை. ட்ரம்ப் விரும்பும் அந்த மக்கள்தான், ட்ரம்ப்பை விரும்பும் அந்த மக்கள்தான் தற்போது தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

Joe Biden
Joe Biden
AP Photo/Carolyn Kaster
"ஒரு மிகச்சிறந்த அதிபர் அவர்தம் மக்களை நற்செயல்களுக்காக ஊக்குவிப்பார். அதன் எதிர்த்திசையில் பயணிக்கும் அதிபர் அவர்தம் மக்களை இப்படியாகத் தான் தூண்டுவார்" என தற்போது பேசியிருக்கிறார் அடுத்த அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன்.

இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. ஆனால், இந்தக் கலவரம்போல ட்ரம்ப் நாளுக்கு நாள் ஏற்படுத்தும் காயங்கள் எளிதில் ஆறும் தன்மையுடையது அல்ல. ஜோ பைடன் தேர்வான போது டைம் பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன் ஏனோ நினைவுக்கு வருகின்றது. அதை இன்னும் அழுத்தமாக நிரூபித்துவருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதென்பது காலத்தின் கட்டாயம். இதற்காக அனைத்து கைகளும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸை நோக்கிச் சென்றிருக்கிறது. தேசத்தின் நலன், கட்சியின் நலன் இரண்டையும் எப்படி சமன் செய்யபோகிறார் பென்ஸ் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தற்போது ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சான்றிதழ் அளித்துள்ளனர். தற்போது, பதவியில் இருந்து வெளியேறும் குடியரசுக் கட்சியின் அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவாக 232 வாக்குகளும், ஜனநாயகக் கட்சியின் பைடனுக்கு ஆதரவாக 306 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. உடனே, ட்ரம்ப்பும் கீழறங்கி வந்து அடுத்த அதிபரான ஜோ பைடனுக்கு வழிவிட்டுள்ளார். இதில் தனக்கு உடன்பாடில்லை என்றாலும், ஜனவரி 20-ம் தேதி சட்டப்பூர்வமாக அதிபர் மாற்றம் நிகழும் என அவரே அடிப்பணிந்துள்ளார்

ad

ad