புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2021

தி.மு.க Vs அ.தி.மு.க-கருணாநிதிக்குப் போடப்பட்ட ஊசி... ஜெயலலிதா மரண விசாரணை

www.pungudutivuswiss.com
கருணாநிதி - ஜெயலலிதா
கருணாநிதி - ஜெயலலிதா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை

நடத்தப்படும்’ என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ பேசுகிறாரா?

``எங்கள் ஆட்சி அமைந்ததும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிவந்த நிலையில், இப்போது ``அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்று திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மத்தை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கண்டுபிடிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப,

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

``மு.க.அழகிரி தெளிவாக வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். கடந்த தேர்தலின்போது கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாததால், தேர்தலில் நிறுத்த வேண்டாம் என்று சொன்னேன். அதை மீறி கருணாநிதியைத் தேர்தலில் நிறுத்தினால் வெற்றிபெறலாம் என்று கூறி, ஸ்டாலின் தன் சுயலாபத்துக்காக நிறுத்தியிருக்கிறார். கருணாநிதி மரணத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என நேரடியாகக் கூறியிருக்கிறார். வருகிற 2021-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கருணாநிதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். ஸ்டாலின் மீது விசாரணை வரும். அதற்கு மு.க.அழகிரிதான் சாட்சி சொல்ல வருவார்'' என தடாலடியாகக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குப் போட்டியாகவே, `கருணாநிதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என அ.தி.மு.க எம்.எல்.ஏ பேசுகிறாரா?

அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்.

கோவை செல்வராஜ்:

``அழகிரி பேசிவிட்டார் என்பதற்காக மட்டுமல்ல, ஏற்கெனவே எங்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன. ஆனால், அரசியல் நாகரிகம் கருதி அதை நாங்கள் பேசாமல் இருந்தோம். ஆனால், எங்கள் அம்மாவின் மரணத்தைப் பற்றி ஸ்டாலின் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதால், நாங்களும் பேச வேண்டிய தேவை எழுகிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர் உடம்புக்கு ஒத்துவராத ஊசி ஒன்றைப் போட்டார்கள். அதனால் அவர் உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்துதான் அவரை வீட்டுக்கு வந்து யாரும் பார்க்க வரக் கூடாது என அறிக்கை வெளியிட்டனர். அவருக்கு வழக்கமாக வைத்தியம் பார்க்கும் குடும்ப மருத்துவர் இந்தச் செயலால் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

பிறகு அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தார்கள். தொண்டையில் டியூப் சொருகும் அளவுக்கு அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவரால் வாயால் இயல்பாகவே சாப்பிட முடிகிற நிலைதான் இருந்தது. ஆனால், அவர் இந்தத் தகவல்களை வெளியில் சொல்லிவிடுவார் என்பதற்காகவே அவருக்குத் தொண்டையில் டியூப் சொருகினர். அவர் இன்னும் நான்கைந்து ஆண்டுகள் உயிருடன் இருந்திருப்பார். ஆனால், தான் தலைவராக முடியாது என்பதற்காகவே ஸ்டாலின் இப்படியொரு செயலில் ஈடுபட்டிருக்கிறார்'' என்றார் தடாலடியாக.

கோவை செல்வராஜின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

கான்ஸ்டைன்டைன் ரவீந்திரன்:

``ராஜன் செல்லப்பா முதலில் அடிப்படையான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா மரணிக்கும்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதனால்தான் நாங்கள் கேள்வியெழுப்புகிறோம். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் எப்படி இறந்தார் என்பது நாட்டு மக்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தமிழகத்தின் தற்போதைய துணை முதல்வரே குற்றம்சாட்டியிருக்கிறார். மரணத்தில் மர்மம் இல்லையென்றால் எதற்காக இந்த அரசின் சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டது... ஆனால், கலைஞரின் மரணம் குறித்து இது போன்று ஏதாவது கேள்வி எழுந்ததா... அவரின் மரணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னால்கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்து பார்த்தார். அந்தப் புகைப்படங்கள் வெளியாகின. அதேபோல, எங்கள் தலைவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனை அவ்வப்போது அவரின் உடல்நிலை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

எந்தவொரு மனிதருக்கும் மாற்று மருந்து கொடுக்கும்போது அலர்ஜி உண்டாகலாம். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. அப்படி, கலைஞருக்கும் அலர்ஜி உண்டானதே தவிர, அந்த மருந்து வேண்டுமென்றே கொடுக்கப்பட்டது அல்ல. ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணான பல தகவல்களை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சொன்னார்கள். சில நாள்கள் கழித்து அதையும் மாற்றிச் சொன்னார்கள். பொய் சொன்னோம் என்று தன் குழந்தை மீது சத்தியம் செய்த அமைச்சரெல்லாம் உண்டு. அடுத்ததாக, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையே, `விசாரிக்கக் கூடாது’ என ஸ்டே ஆர்டர் வாங்குகிறது. அதனால்தான், அந்த அம்மையாரின் மரணத்தில் மர்மம் இருக்கலாம் என எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. அவர், அ.தி.மு.க-வின் தலைவராக மட்டுமே இறந்திருந்தால் நாங்கள் எந்தக் கேள்வியையும் எழுப்பியிருக்க மாட்டோம். நியாயமாக இந்த விசாரணையை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவர் சரியாகச் செய்யாததால்தான் நாங்கள் வந்து செய்வோமென எங்கள் தலைவர் சொல்கிறார்'' என்கிறார் அவர்.

ஸ்டாலினும் சரி, தற்போது அ.தி.மு.க-வினரும் சரி... தலைவர்களின் மரணங்களைவைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனரா... இதன் மூலம் தேர்தலில் ஏதாவது லாபம் அடையலாம் என நினைக்கின்றனரா?

மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்,

ஜெ., மரணத்தை ஏன் முன்னிறுத்துகிறது தி.மு.க? - அதிர்ச்சி கொடுக்குமா 5 சி.டி-க்கள்?

``ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் முதலில் குரல் எழுப்பவில்லை. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்தான் அந்தப் பிரச்னையைக் கிளப்பினார். அவர் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், மாநில அரசின் சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. குற்றம் சொன்ன ஓ.பி.எஸ்ஸே விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் இருப்பதும், அப்போலோ மருத்துவமனை வாங்கிய ஸ்டேவுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் தொடர்கின்றன. அரசு சார்பில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த முடிவும் இன்னும் வெளியாகவில்லை. அதனால், அது குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு முழு உரிமை இருக்கிறது. இதனால், அந்தக் கட்சிக்கு அரசியல்ரீதியாகவும் சில பலன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ப்ரியன்
ப்ரியன்

ஆனால் அழகிரி, கருணாநிதியின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லவில்லை. உடல்நிலை சரியில்லாதவரை தேர்தலில் நிற்கவைத்து, கூட்டங்களில் பேசவைத்து சங்கடப்படுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்கிறார். `ஸ்டாலின் சுயநலமாக நடந்துகொண்டார்’ என்பதே அழகிரியின் குற்றச்சாட்டு. ஸ்டாலினுக்குக் குடைச்சல் கொடுப்பதற்காகவே அழகிரி இப்படிப் பேசிவருகிறார். ஆனால், இதுவும், ஓ.பி.எஸ் சொன்னதும் ஒன்றல்ல'' என்கிறார் அவர்.

ad

ad