புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2021

தவறும் பட்சத்தில் புதிய பொறிமுறை - மன்னிப்புச்சபை எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிகமுக்கியமான முன்நகர்வு என்பதுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற, 30 வருடகாலப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி புதிய பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் மன்னிப்புச்சபை, அதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று நிறுவப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் மிகமுக்கியமான முன்நகர்வு என்பதுடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவருகின்ற, 30 வருடகாலப்போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் சர்வதேசத்தின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவது மாத்திரமன்றி, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் திரட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சமிக்ஞையாக விளங்கும் இந்தத் தீர்மானம் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முக்கிய நகர்வாகும்.

இலங்கைக்குள் தேசிய ரீதியான செயற்பாடுகள் மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குப் பலவருடகாலமாக ஆதரவு வழங்கப்பட்டுவந்த போதிலும், அதனால் எவ்வித பயனும் கிட்டவில்லை.

கடந்த காலத்தில் இடம்பெற்ற மற்றும் தற்போது இடம்பெறும் மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது என்ற தெளிவாக சமிக்ஞை இந்தத் தீர்மானத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கண்காணிக்கப்படுவதுடன் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்படும்.

அத்தோடு இது ஐக்கிய நாடுகளின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலமான சர்வதேச விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கான அடித்தளமாக அமையும். கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருகின்றமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம், சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவை கடுமையாகக் கண்டனம் செய்திருந்த பின்னணியிலேயே இந்தப் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

புதிய தீர்மானம் தொடர்பில் ஜெனிவாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் அவற்றை முழுமையாக நிராகரித்தது.

அதேவேளை சிறுபான்மையினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகள் மூலமாக புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அரசாங்கமே தெள்ளத்தெளிவாக நிரூபித்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, புதிய பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணிப்பதற்கு அனுமதியை வழங்குமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று நிறுவப்படுவதற்கும் மேலும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்று மன்னிப்புச்சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad