புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2022

சுவிஸ் தூதரக அதிகாரி கானியாவுக்கு எதிரான வழக்கு : தற்போதைய நிலை என்ன ?

www.pungudutivuswiss.com
கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,  பின்னர் பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது என அடிப்படை ஆட்சேபனம் முன் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது,  பிரதிவாதி கானியா பெனிஸ்டர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ இந்த ஆட்சேபனத்தை முன் வைத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது  மன்றில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் ஆஜராகியிருந்தர்.

இதன்போது அவர் சார்பில் மன்றில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ,  பிரதிவாதிக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 189, 190 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில்,  அந்த அத்தியாயங்களை நோக்கும் போது, குறித்த குற்றப் பத்திரிகையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என வாதிட்டார்.

இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார மன்றில் ஆஜரான நிலையில்,  பிரதிவாதிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை முன் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என அவர் வாதிட்டார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி நாமல் பலல்லே,  அடிப்படை ஆட்சேபனம் தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும்  நவம்பர் 8 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு  இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக சுவிஸ்லாந்து தூதரங்கத்தில் பணிபுரியும்  சிரேஷ்ட  குடிவரவு அதிகாரியான பெண்ஊழியரை , கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கறுவாத்தோட்டம்  பொலிஸ் பிரிவில் பாடசாலை ஒன்றுக்கு  அருகில் ஐவரால் கடத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு நிலையில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கு  வீசா பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு பாலியல் சித்திரவதை செய்ததாக  சி.ஐ.டி. க்கு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.  

இந் நிலையில் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் பம்பலபிட்டி, பெல் மயூரா தொடர்மாடி குடியிருப்பில் தனது மகளின் வகுப்பாசிரியாக கடமையாற்றியிருந்த ஆசிரியை ஒருவரின் வீட்டில் தான் அச்சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக சுவிஸ் தூதரக அதிகாரி சி.ஐ.டி.யிடம் கூறியிருந்தார். 

எனினும் இவை எதற்கும் சான்றுகள் இல்லை என சி.ஐ.டி. தரப்பில்   கொழும்பு பிரதன நீதிவான் நீதி மன்றுக்கு அறிவிக்கப்பட்டே குறித்த அதிகாரியான கானியா பெனிஸ்டர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையிலேயே தற்போது அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில்  வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

ad

ad