புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2022

ராஜபக்சாக்களுக்கு அதிகாரம் தேவை ; மக்களுக்கு ராஜபக்சாக்கள் தேவையா ?

www.pungudutivuswiss.com
ராஜபக்ச குடும்பத்துக்கு இலங்கை மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் வேறு எந்த குணாதிசயத்தை விடவும் அவர்களது மறதியில் மிகவும் கூடுதல் நம்பிக்கை இருக்கிறது போலும்.

சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமான தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியடித்தார்கள் என்பதையெல்லாம் பற்றி கொஞ்சமேனும் சிந்திக்காமல் ராஜபக்சாக்கள் மீண்டும் அரசியலில் செல்வாக்கான நிலைக்கு வரமுடியும் என்ற நம்பிக்கைகொண்டவர்களாக தங்களை மீள அணிதிரட்டிக்கொண்டு மக்கள் முன்னிலையில் வர ஆரம்பித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. 

பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் (அக்.8) முதற்தடவையாக தங்களது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.ராஜபக்சாக்களுக்கென்று ராஜபக்சாக்களினால் உருவாக்கப்பட்ட அந்த கட்சியின் சிதைந்துபோன செல்வாக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பல பாகங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் தொடர்ச்சியான பல கூட்டங்களில் இது முதலாவது என்று கூறப்படுகிறது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தீவிர ராஜபக்ச விசுவாசியுமான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த " களுத்துறையில் இருந்து ஆரம்பித்து ஒன்றாக எழுவோம்' என்ற தொனிப்பொருளிலான இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான மூத்த உறுப்பினர்களும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டனர்.மக்கள் பெருமளவில் வரமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டவர்களாக பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் பெரிய மைதானம் எதையும் தெரிவுசெய்யவில்லை.

நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் அவற்றுக்கான காரணங்களையும் விளக்கிக்கூறப்போனால் மக்களின் கேலிக்கு ஆளாக வேண்டிவரும் என்று தெரிந்தோ என்னவோ  மகிந்த ராஜபக்ச தனது உரையின் தொடக்கத்தில், "நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து நான் உங்களுக்கு விளக்கவேண்டிய தேவையில்லை.உங்களுக்கு எல்லாமே நன்றாக தெரியும்" என்று கூறினார்.அரசாங்கத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  செயற்திட்டங்களையும் ஆதரிக்கவேண்டியது  பொதுஜன பெரமுனவின் பொறுப்பு.

ரணிலை நாம் முன்னர் கண்டனம் செயதோம்.ஆனால் இப்போது அவர் எங்களுடன் இருக்கிறார்.அதனால் அவரை புகழ்கிறோம்.இப்போது தான் அவர் சரியான பாதையை தெரிவுசெய்திருக்கிறார் என்று நம்புகிறேன்  என்றும் முன்னாள் ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி என்று விளிக்கும்போது பல தடவைகள் அவர் கோட்டாபய என்றே குறிப்பிட்டார்.பின்னால் நின்ற உதவியாளர்தான் ' 'ரணில்' என்று நினைவுபடுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

ராஜபக்சாக்களின் ஆட்சிக்கு நேர்ந்த கதிக்கு ' சதிகாரர்களின் ' செயற்பாடுகளே காரணம் என்று கூட்டத்தில் உரையாற்றிய பலர் குற்றஞ்சாட்டினர்.பொதுஜன பெரமுன தொடர்ந்தும் அசைக்கமுடியாத ஒரு தேர்தல் சக்தியாக விளங்குகிறது.தற்போது அமெரிக்காவில் இருக்கும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கட்சியின் ஒழுங்கமைப்பு முயற்சிகளுக்கு தலைமைத்துவத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இந்த பொதுக்கூட்டம் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின்  தோல்விக்குப் பிறகு சில வாரங்களுக்கிடையில்  அவரின் அரசியல் மீள் எழுச்சிக்காக கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தை நினைவுபடுத்துகிறது.அப்போது  மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தபோதிலும் அந்த கட்சியின் தலைமையில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பகுதியின் ஆதரவைக்கொண்டவராக விளங்கினார்.அந்த கூட்டத்தை முன்னணியின் சிறிய அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.

அந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன வெற்றிபெற்றிருந்தாலும்கூட,சிங்கள மக்களின் வாக்குகளை மகிந்த ராஜபக்சவே கூடுதலாக பெற்றிருந்தார்.சிறிசேனவின் வெற்றிக்கு சிறுபான்மையின மக்களின் அமோக ஆதரவே பெரிதும் உதவியது.

தோல்வியை அடுத்து அலரிமாளிகையை விட்டு வெளியேறி தனது அம்பாந்தோட்டை மெதமுலானவுக்கு சென்ற ராஜபக்சவின் வீட்டின் முன்பாக அணிதிரண்ட பெருந்திரளான  மக்கள் அவரை தொடர்ந்தும் அரசியலில் இருக்கவேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.வீட்டு வாசலில் நின்று அவர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜபக்ச சிறிசேனவை ஈழம் வாக்குகளே வெற்றிபெற வைத்தன என்று இனவாத தொனியில் கூறினார் என்பது நன்றாக நினைவிருக்கிறது.அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என்றும் மக்கள் முன்னிலையில் அவர் உறுதியளித்தார்.

அன்று நுகேகொடை கூட்டத்தை தொடர்ந்து ' மகிந்த காற்று ' (மகிந்த சுலங்) என்ற தொனிப்பொருளில் நாட்டின் பல பாகங்களிலும் மகிந்த ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன.அவற்றில் எல்லாம் இலங்கையின் தேசியக்கொடியில் சிறுபான்மையினங்களை பிரதிபலித்த வர்ணவரிசைகள் நீக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட கொடிகளையே அவரின் ஆதரவாளர்கள் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர்.தங்களது  மீள் எழுச்சிக்காக அவரும் நேச அணியினரும் எத்தகைய பெரும்பான்மையினவாத அணிதிரட்டலை முன்னெடுக்க திட்டமிட்டார்கள் என்பதை அந்த கொடிகளின் கோலம்  வெளிக்காட்டியது.

அவர்களின் தொடர்ச்சியான தீவிர பிரசாரங்களுக்கு பிறகு 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலுக்கு  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மகிந்த ராஜபக்ச தலைமையில்தான் முகங்கொடுத்தது.தனது சுதந்திர கட்சியை பிரதான அங்கத்துவக்கட்சியாக கொண்ட அந்த முன்னணியின் தேர்தல் பிரசாரங்களை வெளியே நின்று பார்க்கும் ஒருவராகவே ஜனாதிபதி  சிறிசேனவின் பரிதாப நிலை இருந்தது. 

ராஜபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 90 ஆசனங்களைப் பெற்றது.அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையான எம்.பி.க்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் சிறிசேன அமைத்துக்கொண்ட 'தேசிய அரசாங்கத்தில் ' இணைந்துகொண்டபோதிலும், பெரும்பான்மையான எம்.பி.க்கள் ராஜபக்சவுடனேயே நின்றனர்.அன்றைய சபாநாயகர் கரு ஜெயசூரிய ராஜபக்ச தலைமையிலான அணியை பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை.ஆனால் அவர்கள் கூட்டு எதிரணி என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான அரசியல் கட்சிகளான  ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் சேர்ந்து அமைத்த அந்த ' தேசிய அரசாங்க' பரீட்சார்த்தம் படுதோல்வியில் முடிந்தது.அரசியலமைப்புக்கான 19 திருத்தத்தையடுத்து ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரினதும் பாராளுமன்றத்தினதும் அதிகாரங்கள் ஓரளவு வலுப்படுத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் தங்களது அரசியல் நலன்களைை முன்னிறுத்தி இரு அதிகார மையங்களாக செயற்பட்டதால் அரச நிருவாகம் சீர்குலைந்தது.அதன் விளைவாக தோன்றிய அவலமான அரசியல் நிலைவரங்களே மீண்டும் நான்கு வருடங்களுக்கிடையில் 2019 ராஜபக்சாக்களின் ஆட்சியை மீண்டும் மக்கள் தெரிவுசெய்வதற்கு வழிவகுத்தது.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கும்  ராாஜபக்சாக்களின் அரசியல் ஆதிக்கத்துக்கும் இரண்டரை வருடங்களுக்குள் நேர்ந்த கதி அண்மைய மாதங்களின் வரலாறு.

2015 தோல்விக்கு பிறகு ராஜபக்சாக்கள் மீள் எழுச்சி பெற்ற சூழ்நிலையும் இன்று மீண்டும் எழுச்சிபெற அவர்கள் பிரயத்தனங்களைச் செய்கின்ற சூழ்நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவை.அன்று மக்கள் மெதமுலான வீடுநோக்கி அணிதிரண்டு மகிந்த ராஜபக்சவை அரசியலை விட்டு விலகக்கூடாது என்று கேட்டுக்கொண்டதைப் போன்று இன்று மக்கள் கேட்கவில்லை.பொலிசாரினதும் படையினரதும் அடக்குமுறை இல்லாவிட்டால் ராஜபக்சாக்களின் வீடுகளுக்கு சென்று மக்கள் நீங்கள் இனிமேல் அரசியல் பக்கம் தலைகாட்டவே வேண்டாம் ; நாங்கள் அனுபவித்தது போதும் என்றுதான் கேட்பார்கள் எனலாம். அன்று போன்று ' மகிந்த காற்று ' எதுவும் இன்று வீசவில்லை.ராஜபக்சாக்களுக்கு எதிரான புயல்தான் வீசி ஓய்ந்திருக்கிறது.

ஆனாலும், தங்களால்  மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கையை ராஜபக்சாக்களும் அவர்களின் விசுவாசிகளும் கைவிடவில்லை. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த தங்களது தவறான ஆட்சிமுறைக்கு எதிரான அண்மைய மக்கள் கிளர்ச்சி கூறிய அரசியல்  செய்தியை  அவர்கள்  புரிந்துகொள்ளவில்லை.    ஒரு அரசியல் புரட்சியின் பரிமாணத்தை எடுத்த அந்த கிளர்ச்சியை ஒரு பிறழ்ச்சியாக அல்லது தற்செயல் நிகழ்வாக அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

நாம் ராஜபக்சாக்களுடனேயே இருந்தோம்.இருக்கிறோம்.எதிர்காலத்திலும் அவர்களுடனேயே இருப்போம்.ராஜபக்சாக்களுடன் மீண்டெழுவோம் " என்று ராஜபக்ச விசுவாசிகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும்  சூளுரைக்கின்ற  அதேவேளை, ராஜபக்சாக்களைப் பற்றி  கீழ்த்தனமாக பேசவேண்டாம் ;  அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தான் அவர்களின் அருமையும் பெருமையும் புரியும் ; எதிர்கால தேர்தல்களில் பொதுஜன பெரமுன மீண்டும் வெற்றிபெறும் என்று அண்மையில்  மகிந்த ராஜபக்ச கூறினார். 

கோட்டாபயவை எவரும் நாட்டை விட்டு விரட்டவில்லை ; அவர் பயந்து நாட்டைவிட்டு வெளியேறவும் இல்லை ; தான் தொடர்ந்தும் நாட்டில் இருந்தால் குழப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்பதால் அரசியல் உறுதிப்பாட்டின் நன்மை கருதி அவராகவே வெளிநாடு சென்றார்.அமைதி திரும்பிய பின்னர் அவர் நாடு திரும்பியிருக்கிறார் என்று சகோதரர் பசில் ராஜபக்ச கூறினார்.

தன்னைப் பற்றி மக்கள் மத்தியில் எத்தகைய அபிப்பிராயம் இருக்கிறது ? தனது செல்வாக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று அறியும் முயற்சிகளில் கோட்டாபய இறங்கியிருப்பதாகவும் அது விடயத்தில் ஒரு ஊடக நிறுவன உரிமையாளரும் பெரிய தொழிலதிபரும் அவருக்காக செயற்படுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் தயவிலேயே தனது ஆட்சியை தொடருகிறார்.ராஜபக்சாக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயற்பட முடியாதவராக அவர் இருக்கிறார். தாங்கள் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இல்லையென்றாலும் திரைக்குப் பின்னால் இருந்து அரசாங்கத்தை தங்களது பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் இயக்கக்கூடியதாக இருப்பதால் இன்னமும் தாங்களே அதிகாரத்தில் இருப்பது போன்ற ஒரு பிரமையில் ராஜபக்சாக்கள் இருக்கிறார்கள் என்று  தெரிகிறது.

இந்த நூற்றாண்டின் இரு தசாப்தங்களில்   கூடுதல் காலப்பகுதியில் ஆட்சியதிகாரத்தில் இருந்த ராஜபக்சாக்கள் ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலதையும் உருவகப்படுத்தி நிற்பதாக நாடும் மக்களும் மாத்திரமல்ல முழு உலகமுமே நம்புகின்ற நிலையில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்து அவர்கள் எதைச்சாதிக்க பார்க்கிறார்கள்?.ராஜபக்சாக்களுக்கு அதிகாரம் தேவையாக இருக்கலாம், ஆனால் நாட்டு மக்களுக்கு மீண்டும் ராஜபக்சாக்கள் தேவையா?

ராஜபக்சாக்களினால் ஆட்சியதிகாரத்தை அனுபவிக்காமல் வாழ முடியாது.எதிர்காலத்தில் அவர்கள் ஒன்றில் அதிகாரத்துக்கு வர முயற்சிப்பார்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை ஆட்டிப்படைக்கக்கூடிய வலுவான அரசியல் செல்வாக்கு நிலையில் இருக்க விரும்புவார்கள்.ஏனென்றால் அவர்களின் ஆட்சிமுறையின் படுமோசமான தவறுகள் அவர்களை ஓயாது  மிரட்டிக்கொண்டேயிருக்கும் .அதில் இருந்து தப்பி வாழ்வதே அவர்களின் நோக்கமாக இருக்கும்.

ராஜபக்சாக்களின் மீள் எழுச்சிக்கான பிரயத்தனங்கள் குறித்து இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட அவர்களிடம் கருத்து கேட்டபோது அவர் மிக சுருக்கமாகச்  சொன்னார் ; 

" ராஜபக்ச ஆட்சியும் அவர்களின் குடும்பமும் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களும் ஜே.ஆர்.ஜெயவர்தன தொடக்கிவைத்த அரசியலினதும் ஜனநாயகத்தினதும் சிதைவு, சீரழிவு , கீழ்நிலை ஆகியவற்றின் உச்சநிலையை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்றன.மீண்டும் இலங்கையில் எவரும் காணவிரும்பாத படுமோசமான அரசியலை ராஜபக்சாக்கள் உருவகப்படுத்தி நிற்கிறார்கள்.

" அவர்களிடம் பணம் இருக்கிறது. அரசியல் சூழ்ச்சியும் வஞ்சகத்தனமும் இருக்கிறது.' ஜனநாயக ' வழிமுறைகளின் ஊடாக மீண்டும் வருவதற்கு அவர்களுக்கு ஆழ்நிலை அரசின் ( Deep State ) ஆதரவு இருக்கிறது."

ad

ad