கட்சிக்குக்கூடத் தெரியாமல் கரைத்துறைப்பற்று விடயத்தை சுமந்திரன் மட்டுமே கையாள்கிறார் என்று தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் தவராசா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “ஜக்கிய தேசியக் கூட்டமைப்போடு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கிறது. அது எழுத்து வடிவிலான ஒப்பந்தந்தமாகவும் நாங்கள் கைச்சாத்திடுவோம்.அதில் என்ன விடயங்கள் இருக்கவேண்டுமென்பது குறித்து வரைபொன்றும் ஏற்கனவே வரையப்பட்டிருக்கின்றது. கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான ஜக்கிய தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுவிலே 24 நபர்களுடையபெயர்கள் இருந்தது. அதில் ஹிஜிராபுரம் என்ற ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரை தவிர மற்றைய 23 பேரும் ஏற்கனவே தேர்தலில் இருந்து விலகி தெரிவத்தாட்சிஅலுவலருக்கு அறிவித்துவிட்டார்கள். 21 நாள்களின் பின்னர் அந்த விவரம் தெரிவத்தாட்சி அலுவலரால் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். அதன்படி ஜக்கிய தேசிய கூட்டமைப்பின் அந்த வேட்புமனுவிலே ஒரே ஒருவரின் பெயர்தான் மிஞ்சியிருக்கும்.தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெறும் தொகுதிகளுக்கு அந்தக் கட்சியில் ஒருவர் தவிர வேறு எவரும் இல்லாதபட்சத்தில் அதன்செயலாளர் வேறு யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். அப்படித்தான் தமிழ் அரசுக்கட்சியினர் அந்த இடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள். இதுதான் எங்களுக்கு இடையிலான இணக்கப்பாடு.இந்தப் பேச்சுவார்த்தை அல்லது புரிந்துணர்வு தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடவில்லை. அரசியல்.குழுவும் கூடவில்லை. ஆனால் கட்சியின் மனு நிராகரிக்கப்பட்ட பொழுது மீளவும் கட்சியினர் போட்டியிடுவதற்கு இரு வழிமுறைகள் இருப்பது எமக்கு தெரிய வந்தது. அதனைப் பற்றி நான் கட்சித் தலைவரோடு தான்பேசினேன். அதற்கமைய இந்தச் செயற்பாட்டை உடனடியாக செய்யுமாறு கட்சித்தலைவர் என்னைப் பணித்திருந்தார். அதற்குப் பிறகுதான் நாங்கள் நீதிமன்றத்தை முதலில் நாடுவோம் என்ற தீர்மானத்தை எடுத்தோம். நீதிமன்ற செயற்பாட்டை செய்து பார்ப்பது அது தவறினால் அடுத்தபடியாக இந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்று பேசியிருந்தோம். அதற்கமைய நீதிமன்றம் சென்றது பயனளிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாவது தெரிவு குறித்து கட்சித் தலைவருக்கும் பொதுச்செயலாளருக்கும் தெரியப்படுத்தினேன். அது மட்டுமல்லாமல் அந்த மாவட்ட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இது சம்பந்தமாக நடந்த கூட்டத்தில் கூட கட்சித் தலைவரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அரசியல் குழு கூட்டப்படவில்லை என்பது உண்மை. மத்திய செயற்குழுவும் கூட்டப்படவில்லை என்பதும் உண்மை. ஆனால் கட்சியின் தலைவர் பொதுச் செயலாளர் மட்டுமல்லாமல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கட்சியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் சிவமோகனும் இதனைச் செய்யுமாறு கேட்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் உள்ளவர்களாலேயே இந்தக் கோரிக்கைகள் வந்த போது கட்சியின் வேண்டுகோளின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது – என்றார். |