புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2023

World Cup 2023: `மேக்ஸ்வெல் முதல் மேத்யூஸ் வரை!' டாப் 5 பேட்டிங் & பௌலிங் பெர்ஃபாமன்ஸ்கள்!

www.pungudutivuswiss.com
சிறந்த ஸ்கோர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் அடிப்படையில் செய்யப்பட்ட
தேர்வுகள் அல்ல. போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்ஃபாமன்ஸ்கள் இவை.

2023 ஐசிசி உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
பல முன்னணி அணிகள் தடுமாறிக்கொண்டிருக்க, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் அப்சட் மேல் அப்செட் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் பெரும் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இப்படி அனைத்தும் நடந்துகொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பையின் ஐந்தாவது சுற்றில் டாப் 5 பேட்டிங் மற்றும் பௌலிங் செயல்பாடுகளைப் பார்ப்போம். இவை சிறந்த ஸ்கோர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் அடிப்படையில் செய்யப்பட்ட தேர்வுகள் அல்ல. போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்ஃபாமன்ஸ்கள் இவை.

மஹமதுல்லா
மஹமதுல்லா
பேட்டிங் டாப் 5

1. மஹமதுல்லா (வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா): 111 (111)

382 என்ற மாபெரும் இலக்கை சேஸ் செய்த வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் நோக்கி நடைபோட்டார்கள். 31-3 என ஸ்கோர் இருந்தபோது களமிறங்கினார் மஹமதுல்லா. சில நிமிடங்கள் தன் அணியினர் எப்படியெல்லாம் அவுட் ஆகிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அவர், பௌலர்களை ஒருபுறம் வைத்து தனக்கான ஒரு இன்னிங்ஸை ஆட ஆரம்பித்தார். கிடைக்கும் சரியான பந்துகளை பௌண்டரிக்கு அனுப்புவது, ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுப்பது என்று ஐம்பது ஓவர்கள் நிற்கும் நோக்கில் ஆடினார் அவர். தன் ஒட்டுமொத்த அனுபவத்தையும் பயன்படுத்திய அவர், உலகக் கோப்பை அரங்கில் தன் மூன்றாவது சதத்தை நிறைவு செய்து ஒட்டுமொத்த அரங்கையும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவைத்தார்.

2. கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து): 106 (44)

ஒரு வீரர் ஒருநாள் போட்டியின் நாற்பதாவது ஓவரில் தான் களம் காண்கிறார். 41வது ஓவரில் தான் முதல் பந்தை எதிர்கொள்கிறார். அப்படியொரு கட்டத்தில் அவர் அரைசதம் கடப்பதே கடினம். ஆனால், அது மற்ற பேட்ஸ்மேன்களுக்குத்தான். மேக்ஸ்வெல்லுக்கு இல்லை! 40.3ல் தன் முதல் பந்தை எதிர்கொண்ட அவர், 49.3ல் 106 ரன்கள் அடித்து வெளியேறினார்.

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்
அந்த 9 ஓவர்கள் இடைவெளியில் 9 ஃபோர்களும், 8 சிக்ஸர்களும் விளாசி, உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 48 ஆண்டுகால வரலாற்றின் அதிவேக சதத்தை (40 பந்துகள்) பதிவு செய்து வெளியேறியிருந்தார் மேக்ஸ்வெல். இந்த சுற்றில் மட்டுமல்ல, இந்த உலகக் கோப்பையில் மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது விளங்கும்.

3. குவின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா vs வங்கதேசம்): 174 (140)

இந்த உலகக் கோப்பையில் தன் மூன்றாவது சதத்தை இந்தப் போட்டியில் நிறைவு செய்தார் டி காக். ஆரம்பத்தில் அவர் சூறாவளி ஆட்டம் ஆடிவிடவில்லை. ஆடுகளத்தை உணர்ந்திருந்த அவர், பந்துகளை தேர்ந்தெடுத்தே ஆடினார். ஆங்காங்கே வந்த பௌண்டரிகளுக்கு நடுவே சிறப்பாக ஸ்டிரைக் ரொடேட் செய்தார். 47 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 101 பந்துகளில் சதமடித்தார். முந்தைய இரண்டு போட்டிகளிலும் அவர் சதமடித்த பிறகு அதை இன்னும் பெரிய இன்னிங்ஸாக ஆடவில்லை.

குவின்டன் டி காக்
குவின்டன் டி காக்
இந்த இன்னிங்ஸில் அதை நிவர்த்தி செய்தார் அவர். 40வது ஓவருக்கு மேல் கிளாசன் தான் மிரட்டுவார் என்று நினைத்திருந்தார்கள் வங்கதேச வீரர்கள். ஆனால் டி காக்கின் விஸ்வரூபத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சதமடித்த பின் அடுத்த 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசி வெளியேறியிருந்தார் அவர். தென்னாப்பிரிக்கா 382 என்ற மாபெரும் ஸ்கோரை எடுக்க காரணமாக இருந்தார்.

4. ரஹ்மத் ஷா (ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்): 77*(84)

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 283 என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, அனைத்து பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுத்தார்கள். ரஹ்மானுல்லா குர்பாஸ் தன் அதிரடி அரைசதம் மூலம் நல்ல அடித்தளம் அமைத்து வெளியேறினார். இப்ராஹிம் ஜத்ரான் நிதானமான இன்னிங்ஸ் மூலம் 87 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஆனால் அவர்கள் இருவரும் வெளியேறும்போது ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டது. சுத்தமாக எடுபடாத அந்த அணியின் மிடில் ஆர்டர் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை.

ரஹ்மத் ஷா
ரஹ்மத் ஷா
ஆனால் ஆட்டம் கையை மீறிப் போகாத வகையில் விளையாடினார் ரஹ்மத் ஷா. ஆரம்பத்தில் விக்கெட் போகாமல் பார்த்துக்கொண்டவர், ரன் ரேட் ஆறைத் தாண்டி போன போதும் கூட பதற்றப்படவில்லை. போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார். சில மோசமான பந்துகளை பாக் பௌலர்கள் வீசியது அவருக்கு ஏதுவாகப் போக, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதியோடு கடைசி வரை களத்தில் நின்று ஒரு மிகப் பெரிய அப்செட்டை அரங்கேற்றிக் கொடுத்தார்.

5. டேரில் மிட்செல் (நியூசிலாந்து vs இந்தியா): 130 (127)

தரம்சாலாவில் இந்திய பௌலர்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் தவிர ஒரு இணை கூட அந்த அணிக்கு 40 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. ரச்சின் ரவீந்திரவோடு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த டேரில் மிட்செல், அவர் அவுட்டான பிறகும் கூட தன் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

டேரில் மிட்செல்
டேரில் மிட்செல்
8.2ல் களமிறங்கிய அவர், கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒன்பதாவது விக்கெட்டாக வெளியேறினார். விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தபோது ஒரு முணையில் உறுதியாக விளையாடியதோடு மட்டுமல்லாமல் 100+ ஸ்டிரைக் ரேட்டிலும் ஆடியது சாதாரண விஷயம் இல்லையே! இந்த உலகக் கோப்பையில் நான்கே இன்னிங்ஸ்களில் 268 ரன்கள் குவித்து சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் மிட்செல்.

பௌலிங் டாப் 5

ஏஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை vs இங்கிலாந்து): 5-1-14-2

ஆரம்பத்தில் அவர் உலகக் கோப்பை அணியிலேயே இடம்பெறவில்லை. அதன்பின் ரிசர்வ் வீரராக இந்தியா வந்தார். பின்னர் பதிரானாவுக்கு பதிராக் ஸ்குவாடில் இடம்பெற்றார். பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக வாய்ப்பும் பெற்றார். இங்கிலாந்தின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்ததால், சீக்கிரமே பந்துவீசவும் அழைக்கப்பட்டார். தன் மீதான இந்த நம்பிக்கையை அவர் நிரூபிக்க தேவைப்பட்டது என்னவோ மூன்றே பந்துகள்தான்.

ஏஞ்சலோ மேத்யூஸ்
ஏஞ்சலோ மேத்யூஸ்
தான் வீசிய மூன்றாவது பந்திலேயே டேவிட் மலானை வெளியேற்றி அசத்தினார் மேத்யூஸ். அடுத்தது ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்கிக்கொண்டிருக்க, மேத்யூஸை இரண்டாவது ஸ்பெல் வீச அழைத்தார் குஷல் மெண்டிஸ். இப்போது நான்காவது பந்தில் விக்கெட்! திடீரென உலகக் கோப்பையில் விளையாட அழைக்கப்பட்டபோது மேத்யூஸ் வீசியிருக்கும் இந்த ஸ்பெல் அபாரமானது.

முகமது ஷமி (இந்தியா vs நியூசிலாந்து): 10-0-54-5

4 போட்டிகள் பெஞ்சில் அமர்ந்துவிட்டு, கிடைத்த முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வாங்கி தன் திறனை நிரூபித்திருக்கிறார் முகமது ஷமி. இந்த உலகக் கோப்பையில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார் அவர். அதன்பின் 159 ரன்கள் எடுத்திருந்த டேரில் மிட்செல் - ரச்சின் ரவீந்திரா பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். கடைசி கட்டத்தில் நியூசிலாந்து அதிரடி காட்டாத வகையில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியை 273 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவினார் அவர். தன் அசத்தல் சீம் மூவ்மென்ட் மூலம் தரம்சாலா சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தான் ஏன் பிளேயிங் லெவனில் இருக்கவேண்டும் என்பதை நிர்வாகத்துக்கு உணர்த்தினார்.

முகமது ஷமி
முகமது ஷமி
லஹிரு குமாரா (இலங்கை vs இங்கிலாந்து): 7-0-35-3

மெண்டிஸ் பார்ட்னர்ஷிப்களை உடைத்தார் என்றால், லஹிரு குமாரா மாபெரும் வீரர்களை சாய்த்தார். இவரது முதல் விக்கெட்டே இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர். சரியான லென்த்தில் தொடர்ந்து நான்காவது ஸ்டம்ப் லைனில் வீசிக்கொண்டிருந்தவர், எந்நேரமும் போட்டியை மாற்றக்கூடிய லிவிங்ஸ்டனை தன் அடுத்த ஓவரிலேயே அனுப்பிவைத்தார். அவரது மூன்றாவது விக்கெட் இன்னும் பெரியது. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருக்க, தனி ஆளாகப் போராடிய இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 43 ரன்களுக்கு வெளியேற்றி இங்கிலாந்து நம்பிக்கையை மொத்தமாக உடைத்தார் குமாரா. அதனால் தான் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நூர் அஹமது (ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்): 10-0-49-3

உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு நூர் அஹமதுக்கு வாய்ப்பு கிடைப்பது எளிதான விஷயமில்லை. ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் ரஷீத் கான், ஆறாவது இடத்தில் இருக்கும் முகமது நபி, பத்தாவது இடத்தில் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை மீறி அவருக்கு இடம் கிடைக்காது. ஆனால் சென்னை ஆடுகளம் என்பதால், அவர்களோடு சேர்த்து இவரும் வாய்ப்பு பெற்றார்.

நூர் அஹமது
நூர் அஹமது
ஆனால் அன்று அவர்களை விடவுமே இவர் பிராகசமாக ஜொலித்தார். அரைசதம் அடித்து பெரிய இன்னிங்ஸை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அப்துல்லா ஷஃபீக், பாபர் ஆசம் மற்றும் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் என மூன்று பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் நூர் அஹமது. இந்த விக்கெட்டுகள் மூலம் மிடில் ஓவர்கள் பாகிஸ்தான் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் பார்த்துக்கொண்ட அவர், அந்த அணியின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து vs இந்தியா): 10-0-37-1

இந்த உலகக் கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கும் சான்ட்னர், வழக்கமாக ரன்கள் கொஞ்சம் அதிகமாகவே வாரி வழங்குவார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினார் அவர். இந்திய அணி சேஸிங்கை சரியாக செய்துகொண்டிருக்க, நியூசிலாந்துக்கு விக்கெட் தேவைப்பட்டது.

மிட்செல் சான்ட்னர்
மிட்செல் சான்ட்னர்
ஆனால் நியூசிலாந்து வேகங்கள் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார்கள். அந்த நிலையில் மிகவும் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்தார் சான்ட்னர். தன் பெர்ஃபெக்ட் பந்துவீச்சின் மூலம் கே எல் ராகுல் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர்.

ad

ad