புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 நவ., 2023

உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு

www.pungudutivuswiss.com
உத்தராகண்ட்: சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பிழைத்திருக்க உதவிய தமிழ்நாடு மீட்புக் குழு

பட மூலாதாரம்,RAVIKUMAR

படக்குறிப்பு,

கடந்த 13 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணியின்போது தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றியதில் நாமக்கல் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

கடந்த 13 நாட்களுக்கும் மேலாக அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அனுப்புவதற்காக 6 இன்ச் பைப் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகத்தான் கேமரா அனுப்பப்பட்டு தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாட்டு சேர்ந்த இயந்திரங்கள் மற்றும் குழுக்கள் முயற்சி செய்தும் துளைக்க முடியாமல் இருந்த இடிபாடுகளுக்குள் தங்களது அதிநவீன இயந்திரங்களின் உதவியோடு துளையிட்டு 41 தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றப் பேருதவி செய்துள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்நிறுவனம்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நேரடியாக களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதன் ஊழியர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களைப் பார்க்கலாம்.

உத்தரகாசி சுரங்க விபத்து

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVI KUMAR

படக்குறிப்பு,

சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு பைப் வழியாக உணவு வழங்கப்படுகிறது.

நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் 41 சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டனர்.

‘ஆல் வெதர்’ சாலை திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நவயுகா இன்ஜினியரிங் நிறுவனம் உத்தரகாசி சில்க்யாரா - தண்டல்கான் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையைக் கட்டி வருகிறது.

இதில்தான் தற்போது சில்க்யாரா முகப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்தை மூடிக் கிடக்கும் இடிபாடுகளுக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மீட்புக்குழுவின் பணிகள்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVI KUMAR

படக்குறிப்பு,

சில்க்யாரா முகப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 12ஆம் தேதி முதலே மீட்புக்குழு வேகமான மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது. இருப்பினும் மலைப் பாறைகள் மற்றும் இடிபாடுகளின் தன்மை காரணமாகத் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வந்தது. முதலில் அமெரிக்காவை சேர்ந்த ட்ரில்லிங் இயந்திரம் ஒன்று இடிபாடுகளுக்குள் துளையிட பயன்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடியவே அதற்காக முதல்நாளே வரவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அணியான தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனம் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம்தான், அதே பகுதியில் உள்ள பிஆர்டி ரிங்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள PRD GD 5 RIG என்ற இயந்திரத்தின் மூலம் 6 இன்ச் அளவுள்ள முதல் குழாயை 54 மீட்டருக்கு வெற்றிகரமாகப் பொறுத்தியுள்ளது.

இந்த 6 மீட்டர் பைப் வழியாகவே உள்ளே சிக்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உயிர்காக்கும் குழாயை எப்படி உள்ளே பொறுத்தினார்கள்? எப்படி வெளிநாட்டு இயந்திரங்களால் சாதிக்க முடியாததை இந்திய தயாரிப்பு நிறுவனம் சாதித்தது?

முதல்நாளே களமிறங்கிய தமிழ்நாடு டீம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,RAVIKUMAR

படக்குறிப்பு,

இரண்டு முயற்சியில் தோல்வியடைந்த தமிழ்நாடு மீட்புக்குழு மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றது.

விபத்து நடந்த நவம்பர் 12ஆம் தேதியே தரணி ஜியோடெக் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு நவயுகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூலம் மீட்பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்குள் சாரங்பூரில் நிறுத்தி வைத்திருந்த தங்களது இயந்திரத்தை திங்கள் காலையே சம்பவ இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். மேலும், திருச்செங்கோட்டில் இருந்தும் தேவையான உதிரிபாகங்களை விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வர வைத்துள்ளனர்.

சுரங்கத்தில் முதலில் அமெரிக்க இயந்திரம் மூலம் வேலை செய்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தரணி ஜியோடெக் குழுவினர் முதல் இரண்டு முயற்சியில் தோல்வி அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ள கடுமையான பாறை, இரும்பு போன்ற பொருட்களால் தொடர்ந்து இயந்திரம் சேதம் அடைந்ததால் இரண்டு துளைகள் போடும்போதே தோல்வியில் முடிந்துள்ளது.

ஆனால், “நல்ல வேளையாக ஒன்றுக்கும் அதிகமான இயந்திர பாகங்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததால் தங்கள் முயற்சியில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை,” என்று கூறுகிறார் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தரணி ஜியோடெக் நிறுவன பொறியாளர் ரவி.

உத்தரகாசி சுரங்க விபத்து

துளையிடுவதில் ஏற்பட்ட சிக்கல்கள்

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜியோடெக் நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் மீட்புக்குழு உத்தரகாசி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் முயற்சி செய்த அமெரிக்க இயந்திரம் தோல்வியுறவே, இரண்டாவதாக தாங்கள் தொடங்கியதாக கூறுகிறார் அவர்.

“நாங்கள் துளையிடத் தொடங்கி இடிபாடுகளின் கடுமை முதலில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மீண்டும் அமெரிக்க நிறுவனத்தின் இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. அவர்கள் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டதால் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அதற்குப் பின் மீண்டும் எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் இரண்டு முறை துளையிடும்போது குறுக்கீடு செய்த இரும்பு மற்றும் பாறைகளால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுத் தோல்வியடைந்தோம். அதன் பிறகு மூன்றாவது முயற்சியில்தான் முன்னெச்சரிக்கை அளவீடுகளை எடுத்துத் துளையிட்டு 8ஆம் நாள்வாக்கில் 54 மீட்டர் துளையை வெற்றிகரமாகப் போட்டு முடித்தோம்,” என்று கூறியுள்ளார் ரவி.

PRD GD 5 RIG இயந்திரம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,PRD RIGS ENGINEERING

படக்குறிப்பு,

இந்தியாவிலேயே திருச்செங்கோட்டில் மட்டுமே இது போன்ற இயந்திரம் இருக்கிறது.

சம்பவ இடத்திற்குப் பல இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டும்கூட எப்படி பிஆர்டி நிறுவனம் மட்டும் இதைச் செய்ய முடிந்தது என்ற கேள்விக்கு, “தங்களிடம் மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி இருப்பதுதான் காரணம்,” என்று கூறியுள்ளார் அவர்.

அந்த இயந்திரம் குறித்துப் பேசிய பிஆர்டி ரிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.டி.பரந்தாமன், “PRD GD 5 RIG இயந்திரம் என்பது ஒரு பரப்பின் மீது கிடைமட்டமாக அல்லது செங்குத்தாகத் துளைகளைப் போடக்கூடிய அதிநவீன ராட்சத இயந்திரம். மற்ற இயந்திரங்களில் இருக்கும் ட்ரில்லர் மூலம் ஒரு பரப்பின் மீது துளையைப் போட்ட பின்பு அதை வெளியே எடுத்துவிட்டுத்தான் அதற்குள் குழாய் போன்ற பொருட்களைச் செலுத்த முடியும்.

ஆனால், இந்த PRD GD 5 RIG இயந்திரம் தன்னுடைய டிரில்லருடன் சேர்த்தே ஒரு குழாயைக் கொண்டிருக்கும். இதனால், இது எத்தனை மீட்டருக்கு துளையிடுகிறதோ அத்தனை மீட்டருக்கு தேவையான குழாயைத் துளையிட்டு முடித்த பின்பு அந்தத் துளைக்குள்ளேயே விட்டுவிட்டு வந்து விடும். இப்படித்தான், உத்திரகாசி சில்க்யாரா சுரங்கத்திலும் 54 மீட்டர் வரை துளையிட்டுத் தற்போது கேமரா, உணவு உள்ளிட்டவை சென்று வரும் பைப்லைன் போடப்பட்டது,” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் “இந்தியாவிலேயே தங்களிடம் மட்டுமே இதுபோன்ற இயந்திரம் இருக்கிறது. இதைத் தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தான் இது கிடைக்கும்,” என்று கூறியுள்ளார் அவர்.

இதில் முக்கியமே 25% வெளிநாட்டு உதிரிபாகங்களை இறக்குமதி செய்தும், இதர 75% உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டும் இந்திய தயாரிப்பாக இந்த இயந்திரங்கள் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஒரேநாளில் மீட்புக்குழுவை ஒருங்கிணைத்த நிறுவனம்

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,JAYAVEL KALIANNAN

படக்குறிப்பு,

ஒரே நாளில் மீட்புக்குழுவை ஒருங்கிணைத்த தரணி ஜியோடெக்

இந்தியா முழுவதும் சுரங்கம் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனமான தரணி ஜியோடெக் நிறுவனம் இந்தச் சம்பவம் நடந்த அன்றே மீட்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு வந்த அடுத்த நாள் காலையே பல்வேறு மாநிலங்களில் இருந்த தங்களது பணியாளர் குழுவை உத்தரகாசி பகுதியில் ஒருங்கிணைத்து விட்டதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயவேல் காளியண்ணன்.

“முதலில் துளையிடும் பணியில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக நாங்கள் அதிகமான இயந்திர பாகங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு வந்திருந்ததால் தொடர்ந்து பணியாற்றி அந்த 6 இன்ச் குழாயை எங்களால் பதிக்க முடிந்தது.

அதன் மூலமாகவே 41 தொழிலாளர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் , உணவு என எல்லா அடிப்படைத் தேவைகளும் வழங்கப்பட்டது. அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. நாங்கள் பெரிய நிறுவனம் இல்லை என்றாலும் இந்தக் காரணத்திற்காகவே பெரிய அளவிலான மனிதவளம் ஒருங்கிணைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பணிகளைச் செய்துள்ளோம்,” என்று கூறுகிறார் அவர்.

அடுத்த கட்டம் என்ன?

உத்தரகாசி சுரங்க விபத்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படலாம்.

ரவி மற்றும் ஜெயவேல் காளியண்ணன் கூற்றுப்படி, “8வது நாளே 6 இன்ச் குழாய் பொறுத்தப்பட்டு தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக அமெரிக்க இயந்திரம் மூலம் ஆள் உள்நுழையும் அளவிற்கான பைப்பை பொறுத்துவதற்கான துளையிடும் பணி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துளையிடும் இயந்திரத்தின் முன்பகுதி மீண்டும் உள்ளே உடைந்துள்ளது. அதேபோல் அது பொறுத்தப்பட்டுள்ள அமைவும் சேதமடைந்துள்ளது.

தொழிலாளர்களை அடைய வெறும் 10-13 மீட்டர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உள்ளே சேதமடைந்த பகுதியை வெட்டி எடுத்து மீண்டும் துளையிடல் தொடங்கி இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் 41 தொழிலாளர்களும் மீட்கப்படலாம்,” என்று கூறியுள்ளனர்.

மீட்புக்குப் பின் என்ன நடக்கும்?

ஏற்கெனவே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 41 தொழிலாளர்களுக்குத் தேவையான ஆம்புலன்ஸ் வசதி, தற்காலிக மருத்துவமனை மற்றும் இதர அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிலாளர்களாக மீட்கப்பட்டு உடனடி மருத்துவ சேவை வழங்கப்படும் என்று மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

ad

ad