புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2025

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்!- சோமரத்ன ராஜபக்ச ஜனாதிபதிக்கு கடிதம். [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளா

அத்தோடு 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கப்டன் லலில் ஹேவாகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயரதிகாரிகளைப் பாதுகாத்துக்கொண்டு, கீழ்மட்ட வீரர்களைத் தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தாம் தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்ததாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளார்.

அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:

எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எனவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட எனது கணவர் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் 7 ஆவது காலணி இராணுவப்படையணியின்கீழ் செம்மணி பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டவந்தபோது இடம்பெற்ற மனிதப்படுகொலையுடன் தொடர்புடையவகையில் கைதுசெய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து மூவரடங்கிய நீதியரசர் குழாமின் முன்னிலையில் நடைபெற்ற விசேட வழக்கு விசாரணைகளின் பின்னர் 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 29 வருடங்களாக அவர் சிறையில் இருந்துவருகிறார்.

இருப்பினும் இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் எனது கணவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. மாறாக 7 ஆவது காலணிப்படை தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கப்டன் லலித் ஹேவாகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படும்.

அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த உடல்களைப் புதைக்குமாறு மேலே பெயரிட்ட கப்டன் லலித் ஹேவாகேயினால் ஆணையிடப்படும். அதன்பிரகாரம் எனது கணவர் உள்ளடங்கலாக ஐவரால் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்படும்.

வீதியில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செம்மணி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டுவந்த எனது கணவர் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஏனைய ஐவரினதும் வேலையாக இருந்தது.

செம்மணி சோதனைச்சாவடியானது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச்சாவடியாக இருந்தது. அச்சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கு மேலதிகமாக கப்டன் லலித் ஹேவாகேயின் ஆலோசனைக்கு அமைவாக காலை 9.00 மணி முதல் மாலை 4.00 - 6.00 மணி வரை மொழிபெயர்ப்பாளர்கள் என்ற ரீதியில் நாளாந்தம் இந்த சோதனைச்சாவடிக்கு வருகைதரும் லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளரான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் நஸார் ஆகியோரால் அங்கு அழைத்துவரப்படும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரால் அடையாளம் காண்பிக்கப்படும் வீதியில் செல்லும் சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படுவர்.

அவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7 ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்படுவர். அங்கு மரணிப்போர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்படுவர். அவர்களைப் புதைக்குமாறு எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுவிட்டு, வந்தவர்கள் மீண்டும் திரும்பிச்செல்வார்கள் என்றே எனது கணவர் கூறியிருக்கிறார்.

செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன. எனது கணவர் உள்ளடங்கலாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த ஐவரும் செய்தது உயரதிகாரிகளால் கொண்டுவந்து தரப்படும் உடல்களைப் புதைத்தமை மாத்திரமேயாகும். எனது கணவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான ஒரே சாட்சியாக இருந்தது அவர் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண்பித்தமை மாத்திரமேயாகும். எனது கணவருடன் தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய ஐவரும் உயரதிகாரிகள் கொண்டுவந்து தருகின்ற சடலங்களைத் தாம் புதைத்தாக நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள்.

கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாத்திரம் வெளிவந்தமைக்கான காரணம் என்ன? செம்மணி சோதனைச்சாவடியில் இதுவரையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் படுகொலை மாத்திரம் வெளியே வந்தமைக்கு இதுவே காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்கவின் கணவர் ளசர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளரான குமார் ரூபசிங்க ஆவார். குமார் ரூபசிங்க கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் உறவினர் என்பதனால், அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரம் தொடர்பில் மாத்திரம் கவனம்செலுத்தப்பட்டு, செம்மணி சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளிட்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்ட முறைமையில் கப்டன் லலித் ஹேவாகே குழுவினராலேயே கைதுசெய்யப்பட்டனர். செம்மணி சோதனைச்சாவடியில் இறுதியாகக் கைதுசெய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், கைதான அன்றைய தினம் மாலை 4.00 மணியின் பின்னர் 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு இரண்டு தினங்களில் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய இராணுவத்தினரிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டதுடன், அவற்றைப் புதைக்குமாறு உத்தரவிட்ட கப்டன் லலித் ஹேவாகே, அங்கிருந்து வெளியேறினார்.

தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கணவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைவாக 1999 ஆம் ஆண்டு கப்டன் லலில் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளர்களான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் அப்துல் ஹமீட் நஸார், லெப்டினன் துடுகல ஆகிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களில் அவர்கள் பிணையில் விடுதலையானதன் பின்னர், அந்த வழக்குக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

இச்சம்பவத்தின் பின்னர் எனது கணவர் சார்பில் முன்னிலையாவதற்கு விருப்பம் தெரிவித்து, போகம்பரை சிறைச்சாலைக்கு வருகைதந்து அவரைச் சந்தித்த ஜனாதிபதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், எனது கணவரிடம் விடயங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும் திடீரென குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் என்பது கணவரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் உயர்நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து, எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு மீண்டும் மரண தண்டனை விதிக்கச்செய்தவர் அப்போதைய ஜனாதிபதியாவார். செம்மணி சோதனைச்சாவடி குறித்த சகல தகவல்களையும் மேல்நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியமையே அதற்குக் காரணமாகும். அந்தப் பழிவாங்கல்கள் இன்றுவரை தொடர்கின்றன.

1998 ஆம் ஆண்டு எனது கணவர் உள்ளடங்கலாக இராணுவத்தினர் ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து தற்போதுவரை பதவியிலிருந்த ஜனாதிபதிகளுக்கு மேன்முறையீட்டுக்கடிதங்களை அனுப்பிவைத்திருந்தாலும், இன்னமும் எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியமையினால் எனது கணவர் உள்ளிட்ட சாட்சியாளர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெறுமனே 5 - 10 வருடங்களுக்குக் குறைந்த ஆண்டுகள் மாத்திரம் சிறையில் இருந்த பலர் கடந்த 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் உங்களுக்கோ அல்லது உங்களது அரசாங்கத்துக்கோ எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதனாலாகும். எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை உள்ளடங்கலாக செம்மணி சோதனைச்சாவடியில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். 1998 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை செம்மணி சோதனைச்சாவடியை அண்மித்த பகுதிகளில் 5 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

உங்களுக்கு இக்கடிதத்தை எழுதும் 2025 ஆம் ஆண்டுலும் அங்கு மனிதப்புதைகுழியொன்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே 1998 ஆம் ஆண்டு மேல்நீதிமன்றத்தில் எனது கணவர் கூறிய சகல விடயங்களும் உண்மையானவை என்பதை இப்போது ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொண்டிருக்கிறது. இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் இராணுவத்தின் உயரதிகாரிகளைக் காப்பாற்றி, கீழ்மட்டத்தில் இருந்தவர்களைத் தண்டித்துவிட்டு, குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தாம் தண்டனை அளித்திருக்கிறோம் என்று சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்திருக்கிறார்கள்.

இப்போது தண்டனையை அனுபவித்துவரும் இராணுவ வீரர்கள் தண்டனை பெறும்போது கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, டி.எம்.ஜயதிலக, ஜே.எம்.ஜயசிங்க, ஏ.எஸ்.பி.பெரேரா ஆகியோர் இராணுவத்தில் இணைந்து முறையே 7, 5, 2 மற்றும் ஒரு வருடங்களே கடந்திருந்தன. அதேபோன்று பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் இணைந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அவர்களால் 250 - 300 பேரை கைதுசெய்து, படுகொலை செய்திருக்க முடியுமா? இவ்வாறானதொரு பின்னணியில் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல படுகொலைகள் மற்றும் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கு எனது கணவர் தயாராகிவருகிறார்.

இந்நிலையில் எவ்வித சாட்சியங்களுமின்றி குற்றவாளிகளாக்கப்பட்ட எனது கணவர் உள்ளிட்ட இந்த இராணுவத்தினருக்கு நியாயமான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடியவகையில் ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் அன்புக்குரியவர்களை இழந்த தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடைய சகல இராணுவ உயரதிகாரிகளினது பெயர் விபரங்களை எதிர்வருங்காலங்களில் வெளியிடுவதற்கு எனது கணவர் தயாராகிவருகிறார். எனவே எனது கணவரால் என்னிடம் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் தொடர்பில் உரியவாறு அவதானம் செலுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எனவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார்.

1999 - 2024 ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தினர் என சந்தேகிக்கப்படும் பலரை விடுதலை செய்திருப்பதுடன் இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு, புறக்கோட்டை குண்டுவெடிப்பு, நாட்டின் தலைவர்கள் படுகொலை, பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல், பிக்குகள் மீதான தாக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறையில் இருந்துவரும் எனது கணவர் உள்ளிட்ட ஐவருக்கு மன்னிப்பு வழங்குமாறு உரிய கட்டமைப்புக்களுக்குப் பரிந்துரைக்கமுடியாதது ஏன் என்பது புரியவில்லை என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad