தமிழரசுக் கட்சியை சந்திக்கத் தயார்! [Saturday 2025-08-09 07:00] |
![]() வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. |
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் கடந்த முதலாம் திகதி கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கவிருந்த (அனுப்பிவைக்கப்பட்டு விட்டது) கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையெழுத்திடுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின்போது மேற்படி கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்தோடு அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு இருதரப்பினரும் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 3 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அக்கட்சி உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் காத்திருந்த தமது கட்சியினரை சந்திக்கவில்லை எனவும், அதுபற்றித் தமக்கு அறியத்தரவில்லை எனவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அதன் நீட்சியாக கடந்த 7 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்த சந்திப்பு இறுதிநேரம் வரை உறுதிப்படுத்தப்படாததன் காரணமாக, அச்சந்திப்பும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், தமிழரசுக்கட்சி விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் சந்திப்பொன்றை நடாத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர்களுக்கு அறியத்தந்திருப்பதாகவும் கூறினார். |
-
9 ஆக., 2025
www.pungudutivuswiss.com