ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரியநேத்திரன் கடிதம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார |
வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விடயத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொடரும் பேரவையின் தாமதம், சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக்குள் நடைமுறைச்சாத்தியமான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முற்றுமுழுதாக சர்வதேசமயப்படுத்தி விரிவுபடுத்தல், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறிமுறையொன்றைப் பரிந்துரைத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது |
-
9 ஆக., 2025
www.pungudutivuswiss.com