தவெக தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகள்.. திமுக எடுத்த ரகசிய
சர்வேயில் ஆச்சரிய தகவல்.. கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு
எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவாரா விஜய்? அல்லது கூட்டணியுடன் துணை முதல்வர் ஆவாரா? விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?
பிரபல ஆங்கில இதழான ‘தி பிரின்ட்’டில் வெளியான ஒரு கட்டுரை தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பின் முடிவுகளை அடிப்படையாக கொண்ட அந்தக் கட்டுரை, வரவிருக்கும் தேர்தலை மையப்படுத்தி, விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு வங்கியை பற்றிய அதிர்ச்சி தரும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
திமுக நடத்திய இந்த ஆய்வில், விஜய்யின் நிலைப்பாடு குறித்து இரண்டு முக்கிய காட்சிகள் ஆய்வு த.வெ.க தனித்துப் போட்டியிட்டால், அதன் வாக்கு வங்கி 23% வரை இருக்கும். த.வெ.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு சுமார் 35% வாக்குகள் கிடைக்கும். ஆனால், இதற்கு எதிராக நிற்கும் திமுக கூட்டணி 50% வரை வாக்குகளை பெறும் என்றும் இந்த சர்வே கணித்துள்ளது.
அண்மையில் கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகும், விஜய்யின் செல்வாக்கு குறையவில்லை என்றும், அவரது ரசிகர்கள் வாக்குகளை குறிக்கும் இந்த 23% வாக்கு வங்கி இன்னும் உறுதியாக உள்ளது என்றும் இந்த சர்வே சுட்டிக்காட்டுவது மிகவும் சுவாரசியமான தகவல். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்கூட விஜய்க்கு ஆதரவாகவே இருப்பதாக தகவல் வெளியானது, அவரது ரசிகர் பலத்தின் உறுதியை காட்டுகிறது.
அரசியல் வல்லுநர்கள் கருத்துப்படி, த.வெ.க, பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. விஜய் தனது அரசியல் நிலைப்பாடுகளில் பா.ஜ.க எதிர்ப்பை தெளிவாக பதிவு செய்து வருகிறார். மத்திய அரசின் கொள்கைகள், குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டம் போன்ற பல விஷயங்களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ஜ.கவை அவர் “பாசிச பா.ஜ.க” என்றும், “தாமரை இலை தண்ணீரில் ஒட்டாதது போல, தமிழக மக்கள் மனதில் பா.ஜ.க ஒட்டாது” என்றும் கூறி வருகிறார்.
இந்த ஆரம்பக்கட்டத்திலேயே, அவர் தனது அடிப்படை நிலைப்பாட்டிற்கு மாறாக கூட்டணி அமைத்தால், அது அரசியல் நேர்மையின்மை என நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும். மேலும், அவரது அரசியல் எதிர்காலத்திற்கு கூட அது பாதகமாக அமையும்.
த.வெ.க, பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியவை இணைந்தால், அது தமிழக அரசியல் களத்தை பா.ஜ.க ஆதரவு அணி மற்றும் பா.ஜ.க எதிர்ப்பு அணி என தெளிவாக பிரித்துவிடும். பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை தமிழ்நாட்டில் வலுவாக இருப்பதால், விஜய் அணி பா.ஜ.கவுடன் இணைந்தால், அவருக்கு போகக்கூடிய 13% – 14% வரையிலான வாக்குகள் நேரடியாக திமுக அணிக்கு திரும்பி செல்லும் வாய்ப்பு உள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக திமுகவின் பக்கம் சென்றுவிடும்.
மேலும், திமுக அரசின் நலத்திட்டங்கள், 28 லட்சம் புதிய பெண் விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்றவை மூலம் பயனடைந்த, பயனடைய போகும் வாக்காளர்களின் ஆதரவு, திமுகவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும். இந்த நல திட்டங்களால் பயனடைந்தவர்களில் ஒரு சிறிய பகுதியினர் வாக்களித்தால்கூட, அது பெரிய வாக்கு பலமாக மாறும்.
விஜய்க்கு 23% வாக்கு வங்கி இருப்பதாக இந்த சர்வே கூறுவதை பார்க்கும்போது விஜய் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு இவ்வளவு பெரிய வாக்கு வங்கி இருப்பதாக காட்டுவது, அவரை தனித்துப் போட்டியிட தூண்டி, திமுகவுக்கு எதிராக அமையும் வாக்குகளை பிளவுபடுத்தும் ஒரு தந்திரமாக இருக்கக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. ஏனெனில் அதிமுக, பாஜக, தவெக கூட்டணிக்கு 35% என்பது மிகவும் குறைவானதாக தெரிகிறது.
ஆனாலும் விஜய் எடுக்கும் முடிவே, அடுத்த தமிழக தேர்தலில் போட்டி பல முனை போட்டியாக அமையுமா அல்லது மீண்டும் இருமுனை போட்டியாக மாறி, பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையின் மூலம் திமுகவுக்கு சாதகமாக அமையுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை