இரண்டு திராவிட கூட்டணி, பாஜகவின் மத்திய அரசு.. ஒரே நேரத்தில்
தைரியம் வந்தது? வேறு யாரோ பின்னணியில் இருக்கிறார்களா?
நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ தொடங்கியதில் இருந்து, தமிழக அரசியல் களம் அவரை சுற்றியே சுழன்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலைத் தனித்து சந்திப்பேன் என்று அவர் அறிவித்திருப்பது, ஆழமாக வேரூன்றியிருக்கும் திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அல்லது அமித்ஷா தலைமையிலான பாஜக என யாரோடும் கூட்டணி சேரமாட்டேன் என்று விஜய் பிடிவாதமாக இருப்பது ஏன்? இரண்டு திராவிடக் கட்சிகள் மற்றும் மத்திய அரசின் அழுத்தத்தை ஒரே நேரத்தில் சமாளிக்க அவருக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?
விஜய் தனது அரசியல் நகர்வுகளில் கடைப்பிடிக்கும் ‘தனித்து இயங்கும்’ அணுகுமுறைக்கு முக்கியமான மூன்று காரணங்கள் இருக்கலாம்:
1. தமிழகத்தில் இப்போது திராவிட கட்சிகள் மீதும், மத்திய அரசின் மீதுமான ஒருவித சோர்வு மக்களிடம் காணப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், குடும்ப அரசியலுக்கும் ஆளாகியிருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு விமர்சனம் உள்ளது. இந்த சூழ்நிலையில், எவருடனும் கூட்டணி வைத்தால், த.வெ.க.வும் அதே அமைப்பின் ஒரு பகுதியாகிவிடும் என்று விஜய் நினைக்கிறார். விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே இந்த தவறை செய்து தான் அரசியலில் பின்னடைவை சந்தித்தனர்.
தமிழக மக்கள் ஒரு புதிய தலைமைக்காக ஏங்குகிறார்கள். விஜய், “நான் வேறுபட்டவன், நான் மாற்றத்தை விரும்புபவன், இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் நான் எதிரானவன்” என்ற பிம்பத்தை உருவாக்கவே, கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி நிற்கிறார். இதன்மூலம், அரசியல் தலைவர்கள் மீது வெறுப்படைந்த பொதுமக்களின் வாக்குகளை தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறார் என்று கூட இருக்கலாம்.
திமுக மற்றும் பாஜக ஆகியவை அரசியல் ஆதாயத்திற்காக ரகசியமாக கூட்டணியாக செயல்படுகின்றன என்றும், மக்கள் இந்த ‘நாடகத்தை’ ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் விஜய் நேரடியாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே அவர் இரு தரப்பிலிருந்தும் விலகி நிற்பதை உறுதிப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது ஓரளவுக்கு விஜய்யின் கொள்கையுடன் ஒத்து போகும். ஆனால் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் ஒரு கூட்டணியில் இருந்து விலகி ஒரு புது கூட்டணி வைக்க காங்கிரஸ் மிக ஆழமாக யோசிக்கின்றது. எனவே காங்கிரஸ் கட்சிக்கும் விஜய் தனது கதவை மூடிவிட்டதாக தெரிகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைப்பது, தமிழ்நாட்டில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஜய் நினைத்திருக்கலாம். பாஜக-வின் ‘காவி’ சித்தாந்தத்தை ஏற்காத கணிசமான திராவிட வாக்கு வங்கிகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் விஜய்யை விட்டு விலகி செல்ல வாய்ப்புள்ளது. தனது கட்சியை தமிழகத்தின் தட்பவெப்பத்திற்கேற்ப நிறுவ, தேசிய கட்சிகளின் சித்தாந்த அழுத்தங்களில் இருந்து அவர் விலகி நிற்பது அவசியம் என்றும் நினைத்திருக்கலாம்.
விஜய்யின் உண்மையான இலக்கு, 2026-ல் ஆட்சியை பிடிப்பது. அதற்கு அனைத்து எதிர்ப்பு ஓட்டுக்களையும் மொத்தமாக அறுவடை செய்ய வேண்டும் என விஜய் நினைத்திருக்கலாம். திராவிட கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டு, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டு, சிஸ்டம் சரியில்லை என்று சொல்பவர்களின் ஓட்டு, இளைஞர்களின் ஓட்டு, மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களின் ஓட்டு என அனைத்து தரப்பு ஓட்டுக்களை பெற பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால் மட்டுமே சாத்தியம் என விஜய்க்கு அறிவுரை கூறப்பட்டு இருக்கலாம்.
தனியொருவராக போட்டியிடும் போதுதான், அவரது கட்சியின் உண்மையான பலம் மற்றும் மக்கள் செல்வாக்கு வெளிப்படும். இந்த பலம்தான், 2031 தேர்தலில் அவர் கூட்டணி அமைத்தாலும், பேச்சுவார்த்தையில் அதிக செல்வாக்குடன் இருக்க உதவும்.
ஆனால் ஒரே நேரத்தில் இத்தனை சவால்களை விஜய் சமாளிப்பாரா? பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்வியும் எழுகிறது. திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மாநில அரசின் அழுத்தங்களையும், பாஜக மத்தியில் இருப்பதால் மத்திய அரசின் அழுத்தங்களையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கடினமான காரியம். ஆனால், விஜய் இந்த சவால்களை எதிர்கொள்ள என்ன வியூகங்களை பயன்படுத்த போகிறார்? அவருக்கு பின் இவ்வள்வு தைரியம் கொடுப்பது யாராக இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பொதுமக்களின் ஆதரவு விஜய்க்கு மிக அதிகமாக இருப்பதால் மாநிலத்தில் ஆளும் கட்சியும் மத்தியில் ஆளும் கட்சியும் வெளிப்படையாகக் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள். ஒரு சிறிய தவறு நடந்தால்கூட அது அரசுக்கு எதிராக திரும்பும் நிலை உள்ளது என்பதும் விஜய்க்கு தெரியும்.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன், வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை தீவிரமாகப் பெற்றுள்ளார். அவர் தனது பேச்சுக்களில் ‘ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி’ மற்றும் ‘பிரச்சனைக்கான தீர்வு’ ஆகியவற்றை பற்றி மட்டுமே பேசுவதை பார்க்கும்போது, அவர் சட்டரீதியாக தன்னை தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறார் என்பது தெரிகிறது.
மத்திய அரசு அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும்போது, அவர் தனது அரசியல் நிலைப்பாட்டால் மட்டும் அல்லாமல், சட்ட ரீதியான பலத்தாலும் அதை சமாளிக்க வேண்டியிருக்கும்.விஜய்யின் பின்னணியில் அவருக்கு நிதி மற்றும் சட்டரீதியான உதவிகளை செய்ய, பெரிய அரசியல் அனுபவமோ, அல்லது பெரும் தொழில் முதலீடுகளோ கொண்ட ஒரு ‘பின்னணி ஆளுமை’ இருக்க வாய்ப்பில்லை. மாறாக, அவரது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான தொழில் வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் நிதி நிர்வாகிகளை அவர் நம்பியிருக்கவே அதிக வாய்ப்புள்ளது. அவரது பலம் தனது பிராண்ட் மதிப்பிலும், தனது ரசிகர்கள் மத்தியிலும் தான் இருக்கிறது.
மொத்தத்தில் விஜய்யின் இந்த பிடிவாதமான ‘தனித்து இயங்கும்’ நிலைப்பாடு, ஒருபுறம் அவருக்கு புதிய வாக்காளர்களை ஈர்க்க உதவுகிறது. மறுபுறம், அரசியல் களத்தில் அவர் பல எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். ஆனாலும், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு, விஜய்யின் தைரியமான நகர்வுகளுக்கு ஒரு உந்துசக்தியாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்தான், இந்த தைரியம் வெற்றியடையுமா அல்லது இரண்டு திராவிட கட்சிகள் மற்றும் மத்திய அரசின் கூட்டு அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் அரசியலே வேண்டாம் என்று சென்றுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.