-

24 டிச., 2025

தையிட்டி விகாரை அமைக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை! [Wednesday 2025-12-24 18:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது என , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் தெரிவித்துள்ளார். 
காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, பொதுமக்களுக்கு சொந்தமானது என , நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதலகல பத்ம தேரர் தெரிவித்துள்ளார். காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

தற்போது தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியானது காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சொந்தமானதாகும். யுத்த காலத்தின் போது சிவில் மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் அங்கு சட்டவிரோதமாகவே திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை, இங்கு யுத்த காலத்திலிருந்து மிக நீண்டகாலமாக வாழும் நாக விகாரையின் விகாராதிபதியான எனக்கு மட்டுமே தெரியும். ஆகவே எமது நாட்டில் உள்ள மக்கள் இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. விடயங்களை ஆராய்ந்து நாம் செயற்பட வேண்டும்.

இந்த நிலையில் வடக்கு பிராந்தியத்திற்கான பிரதான சங்கநாயக்க தேரருக்கான பதவியை, போலியாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பௌத்த தர்மத்திற்கு மாறாக அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

நான் 53 வருடங்களாக இங்குள்ள தமிழ் மக்களுடனேயே நயினாதீவிலேயே தங்கியுள்ளேன். மிகவும் சமாதானமாகவும் அன்பாகவும் தமிழ் சகோதரர்களுடன் நாங்கள் ஒன்றாக வாழ்கின்றோம்.

எனினும், தற்போது தையிட்டி பகுதிக்குத் தேரர் ஒருவர் வருகைதந்து, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி, விகாரைக்கான புதிய கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

எனவே இலங்கைவாழ் அனைத்து மக்களும் எவ்வித சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்ளாது, சிந்தித்து செயற்பட வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை எடுப்பது சிறந்தது என்பது எனது கருத்தாகும். இந்த விடயம் தொடர்பில் தேவையற்ற வகையில் கருத்துக்களைப் பகிர வேண்டாம் என ஏனைய தேரர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடித் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அல்லாவிடின், இந்த விடயம் பெரும் பூதாகரமாகும்.

அதன்போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படும் என்பதைக் கூறிக் கொள்கிறேன், என அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்

ad

ad