-

24 டிச., 2025

அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.

www.pungudutivuswiss.comதமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பியுஷ் கோயல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சென்னையில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் பா.ஜ., போட்டியிட, 40 தொகுதிகள் ஒதுக்குமாறு, கோயல் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பழனிசாமி தரப்பில், 30 இடங்கள் மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 2026 ஏப்., இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ., இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.தி.மு.க., தலைமை வகிக்கிறது.

தலைமை அலுவலகம்



அக்கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பியுஷ் கோயல், நேற்று காலை சென்னை வந்தார்.

முற்பகல் 11:20 மணிக்கு, தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றார். முன்னதாக காலை 10:40 மணிக்கு, தேர்தல் இணை பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வால், கமலாலயம் வந்தாார். அவர்கள் இருவரையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

பின், கமலாலயத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், பியுஷ் கோயல் தலைமையில், தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர்கள் முருகன், அர்ஜுன் ராம் மேக்வால், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, 'ஏற்கனவே பழனிசாமியுடன் நடத்திய பேச்சில், பா.ஜ.,வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க விருப்பம் தெரிவித்தார்; அவரிடம் நீங்கள் பேச்சு நடத்தி, 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்' என, பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அதிக ஓட்டு


பியுஷ் கோயல் தரப்பில், 'தி.மு.க.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த வேண்டும். இதற்கு, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும். த.வெ.க., தலைவர் விஜய், ஓட்டுகளை பிரிக்கும் நபராக உள்ளார்.

'அந்த ஓட்டுகள், நம் கூட்டணி கட்சிகளின் வெற்றியை பாதிக்க கூடாது; அதற்கு ஏற்ப, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற வேண்டும்' என அறிவுரை கூறப்பட்டுள்ளது.

மதியம் 12:45 மணி வரை நடந்த இந்த ஆலோசனைக்கு பின், பியுஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முருகன், நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் ஆகியோர், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தனர். அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, சீனிவாசன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் பங்கேற்றனர்.

தாமரை சின்னம்


அப்போது, 'தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்; இந்த அதிருப்தி ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு தான் வரும். ஓட்டு சதவீதத்தை அதிகரித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க., உள்ளது.

'இதனால், அ.தி.மு.க., மட்டும் 175 தொகுதிகளுக்கு மிகாமல் போட்டியிட விரும்புகிறது; பா.ஜ., மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்பும் சிறு கட்சிகளுக்கு சேர்த்து மொத்தம், 30 தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறோம்' என, பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, மேலிட தலைவர்களுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக, மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மாலையில், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பன்னீர்செல்வம், பா.ஜ., மூத்த தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்க பியுஷ் கோயல் திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ad

ad