96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 91-96 வரையான ஜெ. ஆட்சியில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் போட்டது. ""எல்லா வழக்கிலும் நான் குற்றமற்றவள் என என்னால் நிரூபித்துவிட முடியும். ஆனால் இந்த சொத்துக்குவிப்பு வழக்குதான்...'' என தனது வழக்கறிஞர்களிடம் சந்தேகமாக அன்றே சொன்ன ஜெ., கடந்த 18 வருடங்களாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்.
ஆனால் கடந்த 17-ந் தேதி (செவ்வாய்) சுப்ரீம்கோர்ட்டில் நீதியரசர் விக்ரம்ஜித் சென், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த வாதங்கள்தான் "ஜெயலலிதாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.
ஜெ. முதலமைச்சராக இருந்த 91-96ம் ஆண்டுவரை ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்குபேரை இயக்குநர்களாக கொண்டு சுமார் 32 கம்பெனிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜெ. வீடான 36, போயஸ் கார்டன் என்ற முகவரியில் இயங்கிய இந்த கம்பெனிகளில் கோடிக்கணக்கான ரூபாய் புழங்கியது. ஒரு கம்பெனியின் பெயரில் போடப்படும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றொரு கம்பெனியின் பெயருக்கு மாற்றப்படும் என நடந்த இந்தப் பணப்புழக்கத்திற்குக் காரணம் இரண்டே நபர்கள். ஒருவர் பெயர் ஜெயராமன். இன்னொரு வர் ராஜன். இருவருமே போயஸ் கார்டன் வேலையாட்கள். இந்த இருவரும்தான் இந்த 32 கம்பெனிகளையும் பதிவு செய்தவர்கள். இவர்கள் கையெழுத் தில்தான் 32 கம்பெனிகளிலும் திடீர் திடீரென்று லட்சக்கணக் கில் பணப் பரி மாற்றம் நடக்கும்.