செவ்வாய், மார்ச் 10, 2015

ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை


இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள 6 மாத காலப்பகுதி அவகாசத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான தேவையுள்ளமையை தாம் வலியுறுத்தியதாக கமரூன் தெரிவித்துள்ளார்.
தமிழ் காடியனுக்கு அனுப்பியுள்ள எழுத்துமூல அறிக்கை ஒன்றில் கெமரோன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை 6 மாதங்களுக்கு பிற்போட்டமையை இலங்கையின் எதிர்காலம் கருதிய ஒவ்வொருவரும் வரவேற்கவில்லை.
குறிப்பாக தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறும் வடக்கு கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் குறித்த மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக கமரூன் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இராணுவ சூன்ய நிலை ஏற்படுத்தப்படவேண்டும். இராணுவம் பிடித்து வைத்திருக்கும் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்
இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை தாம் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சந்தித்த முகங்களை தம்மால் மறக்க முடியாது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்
எனவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்கள் அடங்கியிருக்கும் என்று கமரூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதன்போது இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவும் விருத்தியடையும் என்று கமரூன் தெரிவித்துள்ளார்