செவ்வாய், ஜூன் 23, 2015

என்னை பாராட்டி பேசியவர்கள்தான் சிபிஐ எம்எல்ஏக்கள்: ஆர்.கே,நகரில் ஜெயலலிதா பேச்சு
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். காசி மேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பேசிய அவர்,

என்னை எதிர்த்து சிபிஐ தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அவர்கள் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இதே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள் செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பாராட்டி சட்டமன்றத்தில் பேசியுள்ளனர். அம்மா உணவங்கள் ஏழைகளுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என்று சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

சிபிஐ உறுப்பினர் குணசேகரன் பேசும்போது, திறமையாக கல்வி கற்க எந்தவிதமான மனக்கவலையும் இல்லாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க வைக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை, திட்டங்களை இன்றைக்கு பள்ளி கல்வியிலும், உயர் கல்வியிலும் அறிவித்து அறிய வாய்ப்புகளை உருவாக்கி தந்திருக்கின்றார் என்று என்னை பாராட்டி பேசியிருக்கிறார். இதுபோன்ற பல காரணங்களை என்னால் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் இன்று என்னை எதிர்த்து போட்டியிடுவதால் வேறுவழியின்றி எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். 

மக்களால் நான், மக்களுக்காவே நான் என்ற அடிப்படையில் நான் எப்போதும் செயலாற்றி வருகிறேன். எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உங்களுக்காகவே எப்போதும்போல் ஓயாது பாடுபடுவேன் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் வகையில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.