செவ்வாய், ஜூன் 23, 2015

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு[ பி.பி.சி ]தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இன்று செவ்வாய்க்கிழமை இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் பெரும் தவறு உள்ளதாக அந்த மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, தீர்ப்பை நியாயப்படுத்த காட்டப்பட்ட காரணங்கள் பொருத்தமற்றவை என்றும், கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை, விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது நெருங்கிய தோழி சசிகலா நடராஜன், அவர் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பெங்களூரில் இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இவர்கள் தங்களின் தண்டனைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த மே மாதம் 5ம் தேதி வழங்கிய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகாலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அதேசமயம் கர்நாடக அரசின் சட்டத்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கர்நாடக அமைச்சரவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஜூன் முதலாம் திகதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்படுவார் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய்க்கிழமை தனது மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.