புதன், ஜூன் 05, 2019

ஏழு பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் முஸ்லிம் தலைவரான காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஜெயக்குமார் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஆளுநரே அரசியலமைப்பின் தலைவர், அவரே எந்ததொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு அதிகாரமுடையவர்.

அந்தவகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது.

இதனாலேயே 7 பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதென நீதிமன்றம் அறிவித்தவுடன் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை கடிதமொன்றையும் அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு, விரைந்தே செயற்படுகின்றது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.