புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2012

இளையராஜாவின் எங்கேயும் எப்போதும் நிகழ்ச்சி நடக்கும்! - அமைப்பாளர்கள் உறுதி

நவம்பர் மூன்றாம் தேதி நடக்க இருக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றன என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களான ட்ரினி ஈவண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.

 
இந்த இசை நிகழ்ச்சிக்கான வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கையில் நிகழ்ச்சி நடக்காது என்றும் அதனை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் சிலர் சொல்லிவ் வருகிறார்கள். இந்தப் பொய்யான தகவல்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் இந்த பொய்த்தகவல்களால் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்த்து வைக்க டிரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனம் விரும்புகிறது என்று பத்திரிகை குறிப்பில் குரிப்பிட்டிருக்கும் அவர்கள் மேலும், ‘டிரினிட்டி ஈவெண்ட்ஸ் நிறுவனம் இரண்டு வெற்றிகரமான கனடிய தமிழர்களால் துவக்கப்பட்டது. டிரினிட்டி டெக் என்ற சகோதர நிறுவனமும் இவர்களுக்கு உண்டு, இதில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளில் பணியாற்றுகிறார்கள். 
சமீபத்தில் IFFA மற்றும் ஏ,ஆர்.ரஹ்மான் நிகச்சிகள் வட இந்தியர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பல கனடிய தமிழர்கள் கலந்துக் கொண்டு கண்டு களித்தனர். இதன் அடிப்படையில் இதே போன்ற ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்னத்திலேயே மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைத் திட்டமிட்டோம். இதில் உதவுவதற்காக சிலரை ஆலோசகர்களாக பணியில் அமர்த்தினோம். அவர்கள் ஆலோசகர்கள் மட்டுமே. 
ட்ரினிட்டி ஈவெண்ட்சின் ஊழியர்கள் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் பல காரியங்களைச் திரைக்குப் பின்னால் செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வேறு சிலர்தான் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. இப்போது அது சரி செய்யப்பட்டுவிட்டது. அந்த தனிப்பட்ட நபர்கள் அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். 
 
‘மாவீரர் தினத்தை பாதிக்காத வகையில்தான் நிகழ்ச்சியின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நவம்பர் மூன்று என்று நாங்கள் தேர்ந்தெடுத்த தேதி தமிழ் சமூகத்தின் மூத்தவர்களுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுத்த தேதி என்பதையும் சொல்ல விரும்புகிறோம். இந்த ஆலோசனையில் தமிழ் போராட்டத்தை ஆதரிக்கும் இயக்கங்களும் கலந்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதத்தில் மாவீரர் தினம் வரும் வாரத்தை தவிர்த்து மற்ற நாட்களில் நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அப்போது எடுத்த முடிவாக இருந்தது. தமிழரின் போராட்ட வரலாற்றில் நவம்பர் மாதத்தை மாவீரர்கள் மாதம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் உறுதி செய்திருக்கிறோம்.
 
இந்த நிகழ்ச்சி லாப நோக்குடன் நடத்தப்பட்டாலும் இதில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை சேவைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி கனடிய மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சங்கத்துக்கு நிதி உதவி செய்யப்படும். இந்த நிறுவனம் இங்கும் இலங்கையிலும் மருத்துவ சேவைகள் செய்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி மேலும் அறிய www.cmdda.ca என்ற இணையதளத்தை பார்க்கவும்.  
 
இந்த இசை நிகழ்ச்சி மூலம் தமிழ் இசையை பெருமை வாய்ந்த இசை மேதை மூலம் வெளிப்படுத்த முயல்கிறோமே தவிர இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று டிரினிட்டி ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் பத்திரிகை தொடர்பாளருமான கிஷன் நித்தி தெரிவித்துள்ளார்.  
 
“தேவையில்லாத சர்ச்சையும் நிகழ்ச்சியை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழர்கள் அனைவரையும் காயப்படுத்துவது மட்டுமில்லாமல் தமிழர்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது’ என்று அவர் மேலும் கூறுகிறார்.
 

ad

ad