புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வுகாண அரசுக்கு ஆதரவு வழங்க தயார்

* தமிழர் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எந்த நாடும் தலையிடுவதை விரும்பமாட்டோம்
* 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியம்
ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம்
முயற்சிக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குப் பூரண ஆதரவை வழங்கத் தயாரென ஆர். சம்பந்தன் எம். பி. நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பந்தன் எம்.பி; தமிழர்கள் எந்த இனத்துக்கோ சமூகத்துக்கோ எவ்விதத்திலும் பங்கம் விளைவிப்பவர்களல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான ஐந்தாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத, இன ஒற்றுமை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி தனது உரையில் கூறியிருந்தார். இதனை மேலும் பலப்படுத்துதாயின் அரசாங்கம் உறுதியளித்த பல்வேறு விடயங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையானது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் உட்பட அனைவருக்கும் உரித்தான நாடு.
தமிழர்களாகிய நாம் எமது நாட்டுக்கோ அல்லது ஏனைய இன மக்களுக்கோ பங்கம் ஏற்படுத்த மாட்டோம். அனைவரும் எமது சகோதர, சகோதரிகள். அவர்களுடன் நட்புடன் வாழவே விரும்புகின்றோம். தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு எமது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டால் எமது உள்நாட்டு விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதை நாம் விரும்பமாட்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல நாட்டுத் தலைவர்களும், அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியுள்ளனர். அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 13வது திருத்தச்சட்ட மூலத்தில் மாற்றம் செய்வதற்கோ அல்லது அதனை நீக்குவதற்கோ நடவடிக்கை எடுத்தால் அது 13வது திருத்தச்சட்ட மூலத்தினால் ஏற்படக் கூடிய நன்மையை இல்லாமல் செய்துவிடும். எனவே, 13வது திருத்தச்சட்ட மூலத்தை அமுல்படுத்தி அதனை மேலும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ad

ad