புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012

காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
முன்பெல்லாம் 'கண்டதும் காதல்' என்பதுதான் பெரும்பாலான காதல்கள் உருவான கதையாக இருந்தது. ஆனால் இன்று பார்க்காமலே காதல் என்பது அதிகமாகிவிட்டது. செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவையே இதற்கு காரணம்.
 
கண்டதும் காதல் உருவாகுவதைவிட பார்க்காமல் உருவாகும் காதலுக்கு சக்தி குறைவே என்றே கூறவேண்டும். ஏனென்றால் பார்க்காமல் காதலிக்கும் போது காதலிப்பவர்களின் தனிப்பட்ட குறைகள் தெரியவதில்லை. தேன்ஒழுக பேசுவதே அவர்களுக்கு இனிமையாக இருக்கும். எவ்வளவு நாள் பார்க்காமல் காதலித்தாலும் என்றாவது ஒருநாள் பார்த்துதானே ஆகவேண்டும்.
 
அப்படி பார்க்கும்போது, ஏதாவது குறைபாடு இருந்தால் பெரும்பாலானோரால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் பார்க்காமல் காதலிக்கும் பலரது காதல் உடைந்துவிடுகிறது. பார்க்காமல் காதலித்த வாலிபரை வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்தபிறகு, காதலன் ஊனமுற்றவர் என்பது தெரிந்ததும் காதலி தப்பியோடி தலைமறைவான சம்பவம் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரங்கேறி உள்ளது.
 
அதன் விவரம் வருமாறு:-
 
ஆலங்குளம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது23). இவரது செல்போனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுக்கு முன்பு மிஸ்டுகால் ஒன்று வந்தது. அது யார்? என்பதை அறிவதற்காக அந்த எண்ணுக்கு போன்செய்தார். அப்போது எதிர்முனையில் வாலிபர் ஒருவர் பேசினார்.
 
அந்த வாலிபர் முக்கூடல் அருகே உள்ள ஓ.துலுக்கப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (27). இருவரும் ஒருவரையொருவர் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதில் இருவருக்கும் இடையே பிடித்துப்போகவே அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தனர். நாளடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதனை இருவரும் போனில் தெரிவித்துக் கொண்டனர். தினமும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்துவந்தனர்.
 
என்னதான் போனில் பேசிவந்தபோதிலும், கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கட்டுப்பாட்டான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நேரில் சந்தித்து பேசாமலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி என்ன செய்வதென்று தவித்தார்.
 
தனது காதலை வீட்டில் கூற பயப்பட்டார். தனக்கு மாப்பிள்ளை பார்த்துவருவது பற்றி காதலனிடம் கூறினார். அதற்கு அவர், வீட்டைவிட்டு வந்துவிடு. துலுக்கப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஐடியா கூறினார். அதற்கு ராஜேஸ்வரி சம்மதம் தெரிவித்தார்.
 
காதலன் கூறியபடி கடந்த 3-ந்தேதி ராஜேஸ்வரி வீட்டிலிருந்து வெளியேறினார். காதலனை முதன்முதலில் பார்க்கப்போவது மற்றும் திருமணம் ஆகிய இரட்டிப்பு சந்தோஷத்தில் காதலன் வருமாறு கூறிய கோவிலுக்கு தனியாக வந்தார்.
 
அங்கு பட்டு வேட்டி- சட்டை உடுத்திக்கொண்டு மாப்பிள்ளை தோரணையில் சக்திவேல் இருந்தார். அவருடன் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தனர். சக்திவேலை முதன்முதலில் பார்த்த ராஜேஸ்வரி சந்தோஷத்தில் துள்ளி மகிழ்ந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. காரணம் சக்திவேல் இரு கால்களும் ஊனமுற்ற வாலிபர். அவரால் சரியாக நடக்க முடியவில்லை. நண்பர்கள் உதவியுடனேயே நடந்தார்.
 
இதனைப்பார்த்த ராஜேஸ்வரி மிகவும் அதிர்ந்துபோனானர். அவரால் எதுவும் பேசமுடியவில்லை. செல்போனில் கேட்ட குரலை வைத்து காதலன் அழகாக இருப்பான் என்ற கற்பனையில் வந்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிச்சம். இருந்தபோதிலும் அதனை அவர் காட்டிக்கொள்ளவில்லை. காதலனுடன் மணமேடையில் அமர்ந்தார். சிறிதுநேரத்தில் ராஜேஸ்வரியின் கழுத்தில் சக்திவேல் தாலிகட்டினார்.
 
இருந்தபோதிலும் சக்திவேலுடன் குடும்பம் நடத்த ராஜேஸ்வரிக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தார். காதலனை கரம்பிடித்த சந்தோஷம் இல்லாமல் ராஜேஸ்வரி சோகமாக இருப்பதை சக்திவேல் கவனித்தார். அதுபற்றி அவரிடம் கேட்டார்.
 
அதற்கு ராஜேஸ்வரியோ, எனது பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்துகொண்டது கவலையாக இருக்கிறது. அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் . ஆகவே எனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்து சக்திவேல், காதலியை ஆலங்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.
 
அங்கு சென்றதும், நான் வீட்டினுள் சென்று பெற்றோரிடம் அனுமதி பெற்று வருகிறேன். அதுவரை வெளியே நில்லுங்கள் என்று கூறிவிட்டு ராஜேஸ்வரி மட்டும் வீட்டிற்குள்சென்றார். அவர் சென்று வெகுநேரமாகியும், திரும்பிவரவில்லை. இதனைத்தொடர்ந்து சக்திவேல் தனது ஊருக்கு திரும்பினார். ராஜேஸ்வரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரது போன் கிடைக்கவில்லை. ஆகவே தனது மனைவியை காணவில்லை என்று ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் செய்தார்.
 
அதன்பேரில் போலீசார் ராஜேஸ்வரியை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு ராஜேஸ்வரி இல்லை. அவரைப்பற்றி பெற்றோரிடம் விசாரித்தனர். திருமணம் பிடிக்காமல் ராஜேஸ்வரி எங்கோ சென்றுவிட்டார். ஆனால் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை எனக்கூறிவிட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் தேடிவருகின்றனர். திருமணமான சில மணி நேரத்தில் காதல் மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்ட அதிர்ச்சியில் இருந்து சக்திவேல் மீளாமல் உள்ளார்.

ad

ad