புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012


கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி

நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி
கலைத்தனர்.
ஆங்கிலப் படங்களுக்கு இணையான தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ள இந்த படத்தில் முதல் முறையாக ‘ஆரோ 3டி’ என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
கமலஹாசனுடன் நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி உள்ள இந்த படத்தை ஜனவரி 11-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் பாடல் சி.டி. மற்றும் கேசட் வெளியீட்டு விழா மதுரையில் இன்று காலை நடந்தது.
மதுரை ரிங் ரோடு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் கமலஹாசன் காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் விழா திடலுக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் கரவொலி எழுப்பினர். பதிலுக்கு கமலஹாசனும் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.
விழாவில் நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜாகுமாரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழா மேடையில் படத்தின் ஆடியோ சி.டி.யை நடிகர் கமலஹாசன் வெளியிட, அவரது நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ரசிகர் பத்ரிநாத் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து கமலஹாசன் பேசியதாவது:-
எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள பரமக்குடிதான். நான் சிறு வயதாக இருந்தபோது சென்னையில் இருந்து ரெயிலில் இங்கு வந்து பின்னர் சொந்த ஊருக்கு பஸ்சில் செல்வேன். அதேபோல் சொந்த ஊரில் இருந்து பஸ்சில் வந்து மதுரையில் இருந்து ரெயில் மூலம் சென்னை செல்வேன்.
ஆனால் இன்றைக்கு ஹெலிகாப்டரில் வந்தேன். இப்படி வருவேன் என நான் நினைத்து பார்த்தது இல்லை. இப்படி செல்வதற்கு காரணம் ரசிகர்களாகிய உங்களின் பலம்தான். உங்களால் கிடைத்த வெற்றிதான்.
விரைவில் திரைக்கு வரவுள்ள விஸ்வரூபம் படத்தில் என்ன ‘ரூபம்’ என்பது எனக்கு தெரியாது. ரசிகர்களாகிய உங்களை நம்பிதான் எங்கள் திறமைகளை காட்டி இருக்கிறோம். இதற்கு சிறப்பு சேர்க்க வேண்டியது உங்களது கடமையாகும்.
மதுரை மண்ணில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. இது மாபெரும் வெற்றியின் தொடக்கம். எனவே உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை. விஸ்வரூபம் படத்தில் இசை நன்றாக அமைந்துள்ளது. பாடல் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவிற்கு யாரையெல்லாம் அழைத்து இருக்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள்.
நான் அவர்களிடம் சொன்னேன், வழக்கம்போல் எனது ரசிகர்களில் ஒருவரைதான் ஆடியோ கேசட் பெறுவதற்கு அழைக்கப் போகிறேன் என்றேன். அந்த வகையில் ஒரு ரசிகரே முதல் ஆடியோ கேசட் பெற்று பெருமை சேர்த்துள்ளார். ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றி.
கோவை ரசிகர்களை, உங்கள் சகோதரர்களை சந்திக்க செல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ரசிகர்கள் வற்புறுத்தியதால் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள உன்னை காணாது நானில்லை… என்ற பாடலை பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமலஹாசன் பாடினார். அப்போது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். தொடர்ந்து விழா மேடையில் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் காட்சிகள் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டன.
விழா முடிந்து கமலஹாசன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜாகுமார் இருவரும் காருக்கு சென்றபோது ரசிகர்கள் அவர்களை பார்க்க முண்டியடித்து சென்றனர். சிலர் அவர்களுடன் கைகுலுக்க முயன்று சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். பின்னர் நடிகைகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழா நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஞானசம்பந்தன் தொகுத்து வழங்கினார். தியேட்டர் அதிபர் ரமேஷ், மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் மற்றும் கமலஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் விழா வில் திரளாக கலந்து கொண்டனர்.

ad

ad