மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மதுபான சாலைகளையும், கள்ளு விற்பனை நிலையத்தையும் உடன் அகற்றக்கோரி மன்னாரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. பனங்கட்டுக்கோட்டு மீனவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7 கிராம மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
பதாகைகளை ஏந்தியவாறு குறித்த மதுபானச்சாலைகளை அகற்றக்கோரி கோசங்களை எழுப்பியவாறு சௌத்பார் பிரதான வீதியூடாக சென்றனர்.
பேரணியாக சென்ற மக்கள் ஏற்கனவே உள்ள மதுபானசாலை மற்றும் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய மதுபானசாலை ஆகியவற்றிற்கு முன் அமர்ந்திருந்து குறித்த மதுபானசாலைகளை குறித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டுமென கோசங்களை எழுப்பினர். கடும்மழையையும் பொருட்படுத்தாது அந்த மக்கள் தொடர்ந்தும் அவ்விடத்தில் அமர்ந்திருந்தவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நீண்ட நேரமாகியும் அரச அதிகாரிகள் எவரும் அந்த இடத்திற்கு சமுகமளிக்கவில்லை.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மற்றும் நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ், டிலான், மெரினஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் உரையாடினர். இதேநேரம் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் எ.சகாயம், ரெலோ இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு புதிய மதுபானசசாலை திறக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதனை மூடுவதற்காண நடவடிக்கையினை மேற்கொள்ள பொலிஸாருக்கு மன்னார் நகர சபை கடிதம் ஒன்றை உடன் அனுப்பி வைத்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட குறித்த மதுபானசாலை சகல தரப்பினருடைய அனுமதிகளை பெற்றுள்ள போதும் மன்னார் நகர சபையிடம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இதேசமயம் இந்த மக்களின் விருப்பத்திற்கு அமைவாக மட்டுமே மன்னார் நகர சபை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் உரையாடினார். இதன்போது மதுபானசாலைகளினால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இப்பகுதியில் உள்ள சிறுவர்களின் நிலை, எதிர்காலம் ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்று இது தொடர்பில் கதைப்பதற்கு முடிவு செய்தனர்.
இந்த நிலையில் மன்னார் ஆயர் உட்பட பல நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் கோசங்களை எழுப்பியவாறு மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் அமைந்துள்ள மது வரித்திணைக்களத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதுவரித்திணைக்களத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் இம்மாதம் 31 ஆம் திகதி வரை மட்டுமே குறித்த இரண்டு மதுபான விற்பனை நிலையங்களிலும், போத்தல் கள்ளு விற்பனை நிலையத்திலும் விற்பனை நடைபெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,எதிர்வரும் முதலாம் திகதி முதல் அவ்விடத்தில் மதுபானப்பொருட்கள் விற்பதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படமட்டாது என உறுதியளிக்கப்பட்டது.