புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


 சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.

1980களின் பின்னர் இந்நிலை மாற்றமடைந்து வெளிநாடுகளிலிருந்து அனுப்பபடும் உண்டியல் பொருளாதாரமாக மாற்றம் கண்டது. இதன் விளைவாக குடும்பத்தில் ஒருவரையாவது மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி விட வேண்டும் என பெற்றோர் வீடு வளவு சொத்துக்களை விற்கு பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சிலர் உயிராபத்து காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றாலும் பலர் தங்கள் பொருளாதார கஷ்டங்களை போக்கிக்கொள்வதற்காகவே வெளிநாடுகளுக்கு சென்றனர் என்பது தான் உண்மை. 1980களிலிருந்து 2000ஆம் ஆண்டுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து அகதி தஞ்சம் கோரியவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைந்த போதிலும் 2000ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நிலை முற்றாக மாற்றமடைந்துள்ளது.
அதுவும் கடந்த இரு வருடங்களாக இந்நிலை மிக மோசமடைந்துள்ளது. அகதிகள் விடயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்த நாடுகள் இப்போது மிக இறுக்கமான போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இலங்கையிலிருந்து வருபவர்கள் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பிரச்சினைகள் பற்றி வெளியில் சொல்வதும் இல்லை. தனது பிள்ளை வெளிநாட்டிற்கு சென்று சேர்ந்து விட்டான் என்றவுடன் வெளிநாட்டிலிருந்து வரும் உண்டியில் பணத்தை பெற்றோரும் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். வெளிநாட்டிற்கு சென்ற தனது பிள்ளை அனுபவிக்கும் துன்பங்கள் அவலங்கள் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி போன்ற நாடுகள் இப்போது அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, நோர்வே போன்ற நாடுகளே தற்போதும் ஓரளவுக்கு அகதிகளை ஏற்றுக்கொள்கின்றன. ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இப்போது வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
ஆனால் இலங்கையிலிருந்து வருபவர்களில் 99வீதமானவர்களின் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
பிரித்தானியாவிலும் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திரும்பி அனுப்பபட்டு கொண்டிருப்பதாலும், பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் அகதிகளை ஏற்றுக்கொள்வது மிக குறைவாகவே காணப்படுகிறது.
இதில் சுவிட்சர்லாந்து மட்டுமே அகதிகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதிலும் சுவிட்சர்லாந்தின் அகதி சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பெரும்பாலான இலங்கையர்கள் அகதி விண்ணப்பத்தையும் அவர்களுக்குரிய பிரச்சினையையும் சமர்ப்பிக்காததால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
சில தினங்களுக்கு முதல் சுவிட்சர்லாந்திற்கு அண்மையில் அகதியாக வந்த ஒரு இளைஞரை சந்தித்தேன். அவர் 24இலட்சம் ருபா இலங்கை பணத்தை முகவர் ஒருவருக்கு கொடுத்து சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்தார். அவர் அகதிகள் தங்க வைக்கப்படும் மாநில முகாம் ஒன்றில் தன்னுடைய எதிர்காலம் எப்படி அமையப்போகிறது, 24 இலட்சத்தையும் எப்போது உழைத்து ஊருக்கு அனுப்புவேன் என்ற ஏக்கத்தோடு நின்றார்.
அதே முகாமில் முகவர் எவருக்கும் பணம் கொடுக்காது கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் அகதி தஞ்ச கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்து அங்கிருந்து விசா வழங்கப்பட்டு எந்த பணச்செலவும் இன்றி சுவிஸிற்கு வந்திருந்த ஒருவரும் இருந்தார். கொழும்பில் சுவிஸ் தூதரகத்தின் ஊடாக அகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்து வந்தவருக்கு அகதி தஞ்சம் ஏற்கப்பட்டு அவருக்கான வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என்பது உறுதி.
ஆனால் 24 இலட்சம் கொடுத்து வந்தவர் பெரும்பாலும் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடலாம்.
பிள்ளைகளை சுவிஸ் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இலங்கையில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வெளிநாடு சென்றுவிட்டார்கள் இனி எந்த பிரச்சினையும் இல்லை. இனி உண்டியலில் பணம் வந்து கொண்டிருக்கும் என எண்ணிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான எண்ணமாகும்.
கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் 20இலட்சத்திற்கும் 30 இலட்சத்திற்கும் இடைப்பட்ட தொகையை முகவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இவர்கள் பெரும்பாலானவர்கள் இத்தாலிக்கு விசா பெற்று வந்து அங்கிருந்தே சுவிட்சர்லாந்திற்கு வருகின்றனர். இவர்களில் ஒருவரின் விண்ணப்பம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதேவேளை சுமார் 42பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அங்கு விசா வழங்கப்பட்டு இங்கு வந்தவர்கள். கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்கப்பட்டவர்கள் இவர்கள் மட்டும் தான்.
கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். . முகவருக்கு கொடுத்த 25 இலட்சம் பணத்தை அவர்கள் எப்படி உழைக்கப்போகிறோம் என்ற ஏக்கத்தில் திருப்பி அனுப்பபடும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.
இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகிறது. சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டவிரோதமாக தன்னுடைய நாட்டிற்கு வருபவர்களை விரும்பவில்லை. உண்மையாக ஒருவருக்கு பிரச்சினை இருக்குமாக இருந்தால் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையில் அவருக்கு உயிராபத்து இருக்கிறது என கண்டால் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவிஸிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
சுவிஸிலிருந்து தினசரி இரண்டு மூன்று பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். அல்லது எந்த நாட்டிலிருந்து வந்தாரோ அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஒருவர் இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்திற்குள் வந்தார் என்பதை கண்டறிந்தால் இத்தாலிக்கு அனுப்ப படுகிறார்கள். பிரான்ஸிலிருந்து அல்லது மலேசியாவிலிருந்து வந்தால் அந்தந்த நாடுகளுக்கு திரும்பி அனுப்பபடுகின்றனர்.
இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் நிலையில் சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். வேறு சிலர் வெளியில் உள்ளனர்.
அதேவேளை வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது. அவர்கள் எந்த ஒரு பணத்தையும் செலவழிக்காது சுவிஸிற்கு வருகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்களில் பி கார்ட் எனப்படும் வதிவிட அனுமதி வழங்கப்படுகிறது. சகல வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் வாழ்க்கை செலவு தொகை அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. நேர்வழியில் வந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ முடியும் என்பதற்கு இது உதாரணமாகும்.
ஆனால் முகவர்களுக்கு இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்து சட்டவிரோதமான முறையில் குறுக்கு வழியில் சுவிட்சர்லாந்திற்குள் வருபவர்கள் பணத்தையும் இழந்து சிறைகளிலும் வாடுகின்றனர். பலர் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழ்ந்து கொண்டு கொண்டிருக்கின்றனர்.
சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கை உட்பட சில நாடுகளிலிருந்து வருபவர்கள் சுவிஸில் பணம் சம்பாதிப்பதற்காகவே வருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தது. இலங்கையில் உயிராபத்து இருப்பவர்கள் வாழ முடியாது என கருதுபவர்கள் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து நேர் வழியில் சுவிஸிற்கு வரலாம் என தெரிவித்திருந்தது.
துரதிஷ்ட வசமாக இந்த நேர்வழியை பெரும்பாலான இலங்கை தமிழர்கள் பாவிப்பதில்லை. சட்டவிரோதமான முறையில் முகவர்களுக்கு இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்து வெளிநாடு செல்லும் குறுக்கு வழியை தான் நாடுகின்றனர்.
சுவிஸிற்கு வரும் பெரும்பாலான அகதிகள் விடும் தவறுகளில் மிக முக்கியமானது தங்களுக்கு எவ்வாறான உயிராபத்து இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க தவறிவிடுகின்றனர்.
பெரும்பாலானவர்கள் இலங்கையில் இன்னமும் கடத்தல் கொலை நடக்கிறது. இராணுவ நெருக்கடி இருக்கிறது என கூறி அகதி தஞ்சம் கோருகிறார்கள். இந்த பிரச்சினைகள் இலங்கையில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் சுவிஸ் குடிவரவு திணைக்களம் எதிர்பார்ப்பது பொதுவாக நாட்டில் இருக்கும் பிரச்சினை அல்ல. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நபருக்கு நேரடியாக என்ன பிரச்சினை என்பதைதான். அதற்கான ஆதாரங்களை தான் அவர்கள் கோருகிறார்கள்.
ஒவ்வொருவரும் 20 இலட்சம் 30 இலட்சம் முகவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள் என்ற விடயமும் சுவிஸ் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் அகதி விண்ணப்பத்தை கையளிக்க கூடிய ஏற்பாடு இருக்கும் பட்சத்தில் ஏன் இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்து வருகிறார்கள் என்பதும் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று.
இலங்கையில் இருக்கும் மேற்குலக தூதரகங்களில் சுவிஸ் தூதரகம் மட்டுமே கொழும்பில் வைத்தே அகதி தஞ்ச கோரிக்கை விண்ணப்பத்தை ஏற்று விசாரணைகளை மேற்கொண்டு உண்மையில் அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் இருக்கிறது என கண்டறியும் பட்சத்தில் அவர்களை சுவிட்சர்லாந்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது கொழும்பில் உள்ள தூதரகத்தின் ஊடாக விண்ணப்பம் செய்த ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவிஸ் அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியிருக்கிறது.
தமிழ் சிங்கள முஸ்லீம் ஊடகவியலாளர்கள் சுமார் 45பேருக்கு சுவிஸ் அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியிருக்கிறது. அது தவிர அண்மைக்காலத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிலருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அகதி தஞ்சம் வழங்கியிருக்கிறது. ஆகவே உண்மையான அகதிகளை சுவிஸ் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் முகவர்கள் மூலம் சுவிஸிற்குள் வருபவர்கள் பெரும்பாலும் அனைவரின் அகதி தஞ்ச கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் சுவிட்சர்லாந்து ஒரு செய்தியை சொல்ல விளைகிறது. சட்டவிரோதமாக தமது நாட்டிற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டும் எங்கள் நாட்டிற்குள் வாருங்கள் என்பதுதான் அது.
மேற்குலக நாடுகளிலிருந்து அகதிகள் திருப்பி அனுப்பபடுகின்ற போதிலும் இந்த நாடுகளை நோக்கி இலட்சக்கணக்கான பணத்தை முகவர்களுக்கு கொடுத்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் தமிழர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் குறையவில்லை என்பதுதான். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு இது அதிகமாக காணப்படுகிறது.
இதற்கு காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் தான். வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பெருமை காட்டுவதற்காக தாங்கள் வெளிநாடுகளில் வசதியாக இருக்கிறோம் என போலித்தனத்தை காட்டுவதற்காக பணத்தை அனுப்புவதால் அவர்கள் ஊரில் உள்ளவர்கள் ஆடம்பரமாக வாழ்கின்றனர்.
இதனால் வெளிநாடு சென்றால் பணப்புதையலை எடுக்கலாம் என்ற பெரும் நம்பிக்கையோடு எத்தனை இலட்சம் செலவழித்தாலும் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என மேற்குலக நாடுகளுக்கு ஓடி வருகின்றனர்.
வந்ததன் பின்னர்தான் இங்குள்ளவர்கள் படும் கஷ்டங்கள் பலருக்கு புரிகிறது.
சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை 90வீதமானவர்கள் ரெஸ்ரோரன்ட் எனப்படும் உணவு விடுதிகளில் பாத்திரம் கழுவும் வேலைகளையும் சுத்தம் செய்யும் வேலைகளையும் தான் செய்கின்றனர். அவற்றில் இரவு பகலாக உழைத்துதான் அங்கு அனுப்புகிறார்கள் என்பதும் இலங்கையில் உள்ள பலருக்கு தெரிவதில்லை.
அது மட்டுமல்ல மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது சுய அடையாளத்தை இழந்து வருகிறார்கள். தமிழ் உணர்வு, தமிழீழ விடுதலை என்றெல்லாம் பேசுகிறார்கள், ஆனால் இங்குள்ள மூன்றாவது தலைமுறை தமிழர்கள் தமிழ் தெரியாத தமிழர்களாகத்தான் இருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சுய அடையாளத்தை இழந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
அது பற்றி இன்னொரு சந்தரப்பத்தில் விரிவாக பார்ப்போம்.
இரா.துரைரத்தினம்

ad

ad