புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013

ஜெனிவாவில் புதைகுழி நெருக்கடியில் இலங்கை; தோழமை நாடுகளும் இன்மையால் கலக்கத்தில் அரசு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலிருந்து சுழற்சி முறையிலான அங்கத்துவத்தின் அடிப்படையில் சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட இலங்கையின் மிக முக்கியமான தோழமை நாடுகள் வெளியேறியுள்ள நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத்
தொடர் இராஜதந்திரச் சமர் இலங்கைக்கு கடும் அக்கினிப் பரீட்சையாக அமையு மென இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
 
அத்துடன், அமெரிக்க சார்பு நாடுகளாக இருந்தும் கடந்த தடவை இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிராகரித்த கட்டார், குவைத் போன்ற நாடுகள் இந்தத் தடவை இலங்கைக்கு எதிராகத் திரும்பும் அபாயமிருப்பதால் ஜெனிவாத் தொடர் இலங்கைக்கு புதைகுழியாக மாறும்  எனக் கோடிகாட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜெனிவாத் தொடரில் தமக்கு ஏற்படும் கடும் அழுத்தங்களை முறியடிப்பதற்கான இராஜதந்திரக் காய்நகர்த்தலை தற்போதே முழுமூச்சுடன் ஆரம்பித்துள்ள இலங்கை அரசு, மேற்குலகிலுள்ள தமது இராஜதந்திரிகளூடாக இதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
 
அதேவேளை, அமெரிக்காவின் அனுசரணையுடன் கடந்த தடவை கொண்டுவரப்பட்ட பிரேரணை விடயத்தில் "மதில்மேல் பூனை' என்ற நிலைப்பாட்டில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருந்த மலேசியா, பொட்ஸுவானா ஆகிய நாடுகளும் இலங்கையின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளன.
 
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத ஜோர்தான் இம்முறை அங்கத்துவத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது எட்டு நாடுகள் இதில் கலந்துகொள்ளவில்லை.
 
குறிப்பாக, மனித உரிமை விவகாரங்களில் ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்னர் இலங்கை அரசு சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்தான் மேற்படி நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பிரேணையை எதிர்த்த 15 நாடுகளில் அநேகமானவை இந்த நிலைப்பாட்டிலேயே அதனை எதிர்த்தன.
 
எனினும், இலங்கையில்  மனித உரிமை மீறல்கள் தலைவிரித்தாடுதல், சிறுபான்மையினத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்தும் கட்டவிழ்த்து விடப்படுதல் போன்ற மோசமான நடவடிக்கைகளால் நட்பு நாடுகளும் இலங்கையைக் கைவிடும் அபாயமுள்ளது என மேற்குலக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இதற்கிடையில், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதால் இலங்கை விடயத்தில் தமது நிலைப்பாடு குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் முஸ்லிம் நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்று பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசு உரிய வகையில் அமுல்படுத்தாமையே மற்றுமொரு பிரேரணைக்கு வழிவகுத்துள்ளது என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முடியாத வகையிலேயே அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று உள்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 
 
எனினும், ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கத்திற்கு சர்வதேசக் கண்காணிப்பு அவசியமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த இலங்கை அரசு, ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படும் என்றும் அனைத்துலக சமூகத்துக்கு உறுதியளித்தது.
 
இந்நிலையில், ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இது விடயத்தில் அரசு எவ்வித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தத் தவறியுள்ளதால் கடந்த தடவை இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, இந்தத் தடவை காட்டமானதொரு பிரேரணையைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது என அறியமுடிகின்றது.
 
குறிப்பாக, கடந்த தடவை அமெரிக்காவின் பிரேரணையை வலுவிழக்கச் செய்த இந்தியா, இலங்கை விடயம் குறித்து தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதால் இம்முறை அது எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேசமயம், இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முஸ்தீபு செய்துள்ள அமெரிக்கா, அதன் ஓர் அங்கமாகவே மூவரடங்கிய இராஜதந்திரக்குழுவை குறிப்பு எடுப்பதற்கு இலங்கைக்கு அனுப்பியுள்ளது என வெள்ளைமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இலங்கை வந்துள்ள மேற்படி மூவரடங்கிய திரிசூலக் குழு வடக்குக்குச் சென்று தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து இராஜாங்கத் திணைக்களத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் அந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் என்றும் தெரியவருகின்றது.
 
அத்துடன், மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஜெனிவாத் தொடரின்போது அவை இலங்கை குறித்து எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த தடவை மேற்படி நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்பட்டன.
 
இவற்றுக்குப் புறம்பாக இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கடந்த தடவை ஆதரித்த பெல்ஜியம், கெமரூன், ஹங்கேரி, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து சுழற்சி முறையில் வெளியேறியிருந்தாலும் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள ஜேர்மனி, பிரேஸில் போன்ற நாடுகள் இலங்கையை எதிர்க்கும் என்பதில் துளியளவேனும் சந்தேகமில்லை.
 
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள்தான் அங்கம்வகிக்கமுடியும் என்பதால் சுழற்சிமுறையில் நாடுகளுக்கு அங்கத்துவம் வழங்கப்படுவது வழமையாகும். இதனடிப்படையிலேயே கடந்த ஜூன் மாதத்துடன் மனிதவுரிமைப் பேரவையில் அங்கம் வகித்த நாடுகள் அதிலிருந்து வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளை, 19ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 27 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
இலங்கைக்கு எதிராக எவ்வாறான தீர்மானம் வந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் சீனா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் மனித உரிமைகள் பேரவை அங்கத்துவத்திலிருந்து விலகியிருப்பது இலங்கைக்குப் பேரிடியாக அமையும் என்பது திண்ணம்.
 
பங்களாதேஷ், சவூதி அரேபியா போன்ற நாடுகளும் அங்கத்துவத்தை இழந்துள்ளதால் ஜெனிவாச் சமர் இலங்கைக்கு கடும் நெருக்கடியாக அமையும் என எதிர்வுகூறப்படுகின்றது.

ad

ad