இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு "விஸ்வரூபம்' படம் திரையிட்டு காட்டப்பட்டது. அவர்கள் தெரிவித்த "விஸ்வரூபம்' கதை இதுதான்.
இந்தியாவுக்குள் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் ஊடுருவுகிறார்களா... என்பதை கண்காணிப்பது, அவர்களின் திட்டங்களை உளவு பார்ப்பது... என செயல்படும் "ரா' அமைப்பின் தமிழக அதிகாரி கமல்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாத கும்பலின் திட்டங்களை உளவு பார்க்கும் பொறுப்பை ஏற்று ஆப்கான் போகிறார் கமல்.
"அரபியும் உருதும் தெரியாத நீ எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?' என அல்கொய்தாவினருக்கு சந்தேகம் வர...
"அம்மா தமிழ்நாடு.. அப்பா காஷ்மீர் ஜிகாதி. அம்மாவை அப்பா தலாக் பண்ணிட்டார். நான் முஸ்லிம். நான் தமிழ் ஜிகாதி. அதனால்தான் போலீஸ் என் தலைக்கு விலை அறிவித்துள்ளது' எனச் சொல்லும் கமல் அதற்கான செய்தித்தாள் ஆதாரத்தையும் தர... தீவிரவாதிகள் அவரை சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருமுறை பின்லேடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் முல்லா உமரை கமல் சந்திக்கிறார். அப்போது... "இவன் நடவடிக்கைகள் சந்தேகமா இருக்கு. காலி பண்ணிடலாமா?' என கும்பலில் இருப்பவன் கேட்க...
"இவன் தமிழ் ஜிகாதி. இவனோட உயிர் முக்கியம். இவன் நமக்குத் தேவை!' என முல்லா உமர் சொல்கிறார்.
அல்கொய்தா-தலிபான்களுக்கு கமல் டிரெயினிங் கொடுத்தபடியே அவர்களின் நடவடிக்கையை அமெரிக்க அரசுக்கு உளவு சொல்கிறார். இந்த தகவல் அடிப்படையில் பின்லேடனை அழிக்கிறது அமெரிக்கா.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாம் பிளாஸ்ட் நடத்தி நாசம் செய்ய திட்டமிடு கிறது அல்கொய்தா. இதை முறியடிக்க... ஆண் மைத்தன்மை குறைந்த, நளினம் நிறைந்த நடனக் கலைஞனாக அமெரிக்கா செல்லும் கமல், சதிச் செயலை முறியடிக்கிறார். அமெரிக்க அரசாங்கம் தனது நாட்டைக் காப்பாற்றிய தமிழக "ரா' அதிகாரி கமலை பாராட்டி கௌரவிக்க... இனி இந்தியாவில்... என்கிற டைட்டிலுடன் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்துடன் படம் முடிகிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் படத்தை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான படம் எனச் சொல்லுவது ஏன்? என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.
படத்தின் ஆட்சேபக ரமான காட்சிகளை நீக்கச் சொல்லலாம் என்று உள்துறை செக்ரட்டரி சொல்ல, ஒட்டு மொத்த படமும் இஸ்லாத்துக்கு எதிராகத்தான் இருக்கு. படம் ரிலீஸானால் நிச்சயம் முஸ்லிம் சமூகம் கொந்தளிக்கும். அது சட்ட- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால படத் துக்கு தடைவிதியுங்கள்னு வலியுறுத்தி புகார் தெரிவித்தோம். முதல்வரிடம் பேசுவதாக சொன்னார்கள்.
சமூக அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் சினிமாக்களால் பங்கம் வந்துவிடக்கூடாது. இதனை பொறுப்புடன் கவனிக்க வேண்டிய சென்சார் போர்டு அதிகாரிகள் பொறுப்புடன் தங்கள் கடமையை செய்திருந்தால், நாங்கள் போராட வேண்டிய அவசியம் வந்திருக்காது. தற்போது எங்கள் உணர்வுகளை மதித்து 15 நாட்களுக்கு தடை கொடுத்துள்ளது அரசு. இந்த தடை நீட்டிக்கப்பட வேண்டும்'' என்கிறார் ஜவாஹிருல்லா.
கொடநாட்டில் இருந்து திரும்பிய ஜெயலலிதா, மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதுபற்றி கோட்டையில் விசாரித்தபோது, ""முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையான விஸ்வரூபம் படத்திற்கு தடை குறித்துதான் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. உள்துறை செயலாளரும் டி.ஜி.பி.யும் முழுமையாக விவரித்தனர். அதை கேட்டறிந்த முதல்வர், "மிலாதுநபி நாளில் இப்படம் ரிலீஸாகிறது. மறுநாள் குடியரசு தினம். ஸோ... சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அனுமதிக்க முடியாது. படத்தின் காட்சிகளை நீக்கவோ, மாற்றி யமைக்கவோ வசதியாக படத்திற்கு 2 வாரம் தடை கொடுங்கள்' என்று சொன்னதை ஏற்று தமிழகம் முழுவதும் தடை கொடுக்கப்பட்டது'' என்று விவரித்தனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவை மற்றும் இலங்கையிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெ ரிக்காவிற்கு கிளம்பும் முன்பு கமல்,
25-ந்தேதி படம் ரிலீஸாகும் என்கிற பரபரப்பும் எதிர்பார்ப்பும் தமிழகம் முழுவதும் பற்றிக் கொண் டிருந்தது. சென்னை வேளச் சேரியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ஷாப்பிங் மாலில் உள்ள 11 ஸ்கிரீனிலும் விஸ்வரூபம் படம் ரிலீஸாகவிருந்ததால் அந்த பரபரப்பை வைத்து அன்றைக்கே ஷாப்பிங் மாலையும் திறந்து விடலாம் என்று திட்டமிட்டு வைத்திருந்தனர். அந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருந்தது விஸ்வரூபம்.
இந்த சூழலில், கமலின் ஆழ்வார் பேட்டை அலுவலகத்தை தேசிய லீக் பொதுச் செயலாளர் தடா ரஹீம் தன் அமைப்புகளுடன் முற்றுகைப் போராட்டம் நடத்த... கொந் தளிப்பான சூழல் உருவாகியிருந்தது.
இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி நான் சட்டத்தையும் எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்கு பல படி மேலே போய் குரல் கொடுத்திருக்கிறேன்'' என்று அறிக்கை வாசித்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவை வேகமாக தட்டி யுள்ளார்.
விஸ்வரூபத்திற்கு தடை கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் ரீதியாகவும் அலசப்படுகிறது. நம்மிடம் பேசிய கமலுக்கு ஆதரவான காங்கிரஸ் தலைவர்கள், ""சமீபத்தில் ப.சிதம்பரம் பற்றிய புத்தகத்தை கலைஞர் வெளியிட்டார். அந்த விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டவர் கமல். அதுவே ஆட்சி மேலிடத்திற்கு பிடிக்கவில்லை. அதனால்தான் கமலுக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சினை செய்தபோதும் தன்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கமல் நேரில் புகார் தெரிவித்த போதும் அதுகுறித்து எந்த ஆக்ஷனும் எடுக்கப்படவில்லை. மாறாக, கமல் ரசிகர்கள்தான் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், கமலின் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுக்க வந்ததும், முஸ்லிம்களிடம் சரிந்துள்ள செல்வாக்கை தூக்கி நிறுத்தவும் கமலின் மீது எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த போது எழுந்த கோபமும் சேர்ந்து தடைகொடுக்க வைத்துள்ளது'' என்று அரசியல் ரீதியாக விவரிக்கின்றனர்.
தனது ஒவ்வொரு படத்திலும் எத்தனையோ க்ளைமாக்ஸ்களை வைத்து வெற்றிப் பெற்ற கமல், விஸ்வரூபத்தில் க்ளைமாக்ஸை எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
-இரா.த.சக்திவேல் & இளையசெல்வன்
மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில், மத்திய அரசின் நிலை என்ன என்ற கேள்வி இஸ்லாமிய அமைப்பினர்களிடமும் விஸ்வரூபம் படக் குழுவிடமும் உள்ளது. இந்நிலையில் மத்திய தகவல்- ஒளிபரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி, ""சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்ட ஒரு படத்திற்கு மாநில அரசு தடைவிதிப்பது என்பது பொருத்தமல்ல. இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறுவதாக அமைந்துவிடக்கூடாது'' என எச்சரிக்கை கலந்த குரலில் சொல்லியிருக்கிறார். |
28-ந்தேதி நிஜ க்ளைமாக்ஸ்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கமல் தரப்பில் சீனியர் அட்வகேட் பி.எஸ்.ராமன், இஸ்லாமியர்கள் அமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர்.
""பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒரே சமயத்தில் நாளை (25-ந்தேதி) 500 தியேட்டர்களில் படம் ரிலீஸாகவுள்ளது. மலேசியாவில் இன்றும், சிங்கப்பூரில் நாளையும் ரிலீசாகிறது. உள்துறை செயலாளரிடம் மனுதாரர்கள் தரப்பில் மாநிலம் முழுவதும் தடைகோரி மனு கொடுத்து ஆர்டரும் பெற்றுள்ளனர். இதில் உள்நோக்கசா இருக்கிறது. ஒருநாள் படத்தை தடைசெய்தாலும் அது தற்கொலைக்கு சமமானது'' என்று வாதிட்டார் பி.எஸ்.ராமன். அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனோ, ""இந்தப்படம் வெளியிடப்பட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் அபாயம் உள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் 15 நாட்களுக்கு ரிலீஸ் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது'' என்றார். அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமன், "படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் உள்ளதாக யார் சொன்னது?' என்று கேள்வியெழுப்பினார். அட்வகேட் ஜெனரல், ""சர்ச்சைக்குரிய படம் என்று புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. படம் முழுக்க இப்படியேதான் உள்ளது'' என்றபோது குறுக்கிட்ட நீதிபதி, "இப்படி பேசக்கூடாது படத்தை நீங்கள் பார்த்தீர்களா?' என்றவர், வழக்கறிஞர் சங்கரசுப்புவைப் பார்த்து ""படம் வரட்டும். மூன்று நாட்கள் ரிலீஸ் செய்யலாம். திங்கட்கிழமை வாருங்கள். அதுவரை உங்களால் ஏதும் அசம்பாவிதம் நடக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா?'' என்று கேட்க, சங்கரசுப்பு "அப்படி தரமுடியாது' என்று மறுத்துவிட்டார். கமல் ரசிகரும் வக்கீலுமான ராஜசேகரன், ""விஸ்வரூபம் படத்துக்கு எந்த சாயமும் பூச வேண்டாம். படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்து ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் செய்யுங்கள்'' என்று வாதிட்டார். இன்னொரு வக்கீலான ஸ்டாலின், ""ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டனர். முன்பதிவு எல்லாம் முடிந்த நிலையில் விஸ்வரூபத்துக்கு தடை போடக் கூடாது'' என்றார். இறுதியாக நீதிபதி வெங்கட்ராமன், "இந்தப் படத்தை 26-ந்தேதி பார்த்த பின்னர் 28-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன்'' என்றார். விஸ்வரூபம் படத்தை நீதிபதி வெங்கட்ராமன், ""அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், விஸ்வரூபம் படத்தயாரிப்புக் குழு சார்பில் இருவர், வழக்கு தொடுத்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இருவர், இருதரப்பு வழக்கறிஞர்கள் வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு பார்த்த பின்னர்தான் அடுத்த கட்டம் நோக்கி விஸ்வரூபம் நகருமா, நகராதா என தெரியவரும்'' என்கிறார்கள் கோர்ட் வட்டாரத்தில். |