-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

11 ஜன., 2013

""ஹலோ தலைவரே...…ஒரு எதிர்க்கட்சி யோட அறிவிப்பு தமிழக அரசியலில் இந்த அளவுக்கு பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிடிச்சே...'' 

""வாய்ப்பிருந்தால் கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை முன்மொழி வேன்னு கலைஞர் சொன்னதைத்தானே சொல்றே.. தேசிய அளவிலான ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து மாநில அளவிலான தமிழ் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் இது சம்பந்தமான செய்திகள்தான்.. அவங்கவங்க பார்வை இருக்கட்டும். கட்சியிலும் கலைஞர் குடும்பத்திலும் எப்படிப் பார்க்குறாங்கன்னு சொல்லுப்பா... ...''nakkeeran

""கலைஞரோட பேட்டி வெளியானபிறகு தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் இருவரும் இதை வரவேற்று கருத்து சொன்னாங்க. முன்னாள் அமைச்சர் பொன்முடி, மாணவரணி செயலாளர் புகழேந்தி ஆகியோரும் மீடியாக்களில் வரவேற்றுப் பேசினாங்க. இளைஞரணியினர், தொண்டர்கள்னு பெரும்பாலோர் மனநிலை இதுதான்...''

""அப்படின்னா தி.மு.க.வின் ஒட்டுமொத்த உணர்வும் இதுதானா?''

""அப்படி சொல்லிடமுடியாதுங்க தலைவரே.. .. தலைவர் பதவிக்கு நானும் போட்டி போடுவேன்னு ஏற்கனவே சொன்னவரு மு.க.அழகிரி. அவரோட ஆதர வாளரான மதுரை புறநகர் மா.செ.மூர்த்தி சென்னையில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் கலைஞர்கிட்டே செமையா வாங்கிக்கட்டிக்கிட்டதை போனமுறையே நாம பேசியிருந்தோம். தனக்குப் பிறகு ஸ்டாலின் பார்த்துக்குவார்னு பா.ம.க.வினர் தி.மு.க.வில் இணைந்த விழாவில் கலைஞர் சொன்னதற்கு, தி.மு.க மடம் இல்லைன்னு அழகிரி கொடுத்த  பேட்டிக்காகத்தான் மூர்த்திக்கு பாட்டு விழுந்திச்சி.'' 


""மதுரையில் அதோட எஃபெக்ட் என்னவாம்?''

""மா.செ.க்கள் கூட்டத்தில் பாட்டு விழுந்ததை அழகிரிகிட்டே மூர்த்தி சொல்ல, அழகிரி  செம டென்ஷ னாகி, அங்கே ஒழுங்கா பதில் சொல்லாம, இங்கே வந்து வௌக்கமா சொல்லிக்கிட்டிருக்கியான்னு மூர்த்தியை சத்தம் போட்டிருக்காரு. அதற்கப்புறம் அங்கிருந்த தன் ஆதரவாளர்கள்கிட்டே, நான் ஒண்ணும் ஸ்டாலினுக்கு எதிரா அரசியல் செய்யலை. கலைஞர் இருக்கிற வரைக்கும் அவர்தான் எல்லாமும்னு சொல்றேன். அவருக்குப் போட்டியா யாராவது கட்சியோட தலைவர் தேர்தலில் நின்றால் நானும் போட்டிபோடுவேன்னுதான் சொன்னேன். கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்ங்கிறதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதைப் புரிஞ் சுக்காம மறுபடி மறுபடி என் ஆதரவாளர்களான உங்க மேலே பாய்ஞ்சா என்ன அர்த்தம்னு கேட்டிருக்காரு.'' 

""அழகிரியோட ஆதரவாளர்கள் என்ன சொன் னாங்களாம்?''

""வரும் 30-ந் தேதி அழகிரிக்குப் பிறந்தநாள் வருது. அதற்கு கலைஞர் வரணும்.. வருவார்ங்கிற எதிர்பார்ப்பு அழகிரிக்கும் அவரோட ஆதரவாளர் களுக்கும் இருக்குது. இந்த நேரத்தில், கலைஞர் கோபப்படுற மாதிரி தொடர்ந்து நடந்துக்க வேணாம்னு அழகிரியோட ஆதரவாளர்கள் நினைக்கிறாங்க. கலைஞரோட சப்போர்ட் அவசியம்னு அவங்க சொல்லியிருக்காங்க.'' 

""அதுக்கு அழகிரி என்ன சொன்னாராம்?''

""தன்னால எந்த நெருக்கடியும் கலைஞ ருக்கு ஏற்படக்கூடாதுன்னு சொன்னவரு, ஸ்டாலின் பெயரை கலைஞர் அறிவிச்சதால எனக்கு எந்த  வருத்தமுமில்லை. நான் எந் தப் பிரச்சினையும் கொடுக்கமாட்டேன். என்ன நெருக்கடியோ கலைஞர் சரியா சாப்பிடக்கூட இல்லையாம். இந்த நேரத் துல நான் நெருக்கடி தரமாட்டேன்னு சொல்லியிருக்காரு. அவரோட பேச்சைக் கேட்ட ஆதரவாளர்களுக்கு இப்பவும் நம்பிக்கை இருக்குதாம்.''

""என்ன நம்பிக்கை?''


""அழகிரியண்ணனை கலைஞர் ஒருபோதும் விட்டுடமாட்டாரு. கோபம் குறைஞ்சதும் தலைவரோட அணுகுமுறை யில் மாற்றம் வரும். பிறந்தநாளுக்காக மதுரை வந்தாருன்னா, அதற்கப்புறம் அழகிரியண்ணனோட கை மறுபடியும் ஓங்கும்னு சொல்றவங்க, அதற்கு ஒரு  கால்குலேஷனையும் சொல்றாங்க. என்ன தான் ஸ்டாலின் பெயரை கலைஞர் சொன்னாலும், எல்லாரும் அவரை ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஸ்டாலினே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குரூப்பை வளர்த்துவிட்டு, இன்னொரு குரூப்பை ஒதுக்கி வச்சிருக்காரு. அவங்களை எதிரி போலவே ட்ரீட் பண்ணுறாரு. அதிருப்தியில் இருக்கிற அந்த குரூப் எல்லாம் நம்ம பக்கம்தான் வரும்ங்கிறது தான் அழகிரி தரப்பின் கால்குலேஷன்.''

""வழக்கமாக மதுரையிலிருந்து ஃப்ளைட்டில் சென்னைக்கு வரும் அழகிரி இந்த முறை தன் மகனோடு காரில் வந்துட் டாராமே…?''

""ஃப்ளைட்டில் வந்தால் ஏர்போர்ட் டில் மீடியாக்கள் மைக்கை நீட்டுது. எதையாவது சொல்ல வேண்டியிருக்கு. அது சிக்கலாயிடுதுன்னுதான், இந்த முறை காரில் வந்துட்டாராம். கலைஞர்கிட்டே மீடியாக் காரங்க, உங்களைப் பார்க்க அழகிரி வர்றாராமேன்னு கேட்க, அப்பாவை மகன் பார்க்க வருவதில் என்ன அதிசயம்னு கேட்டிருக்காரு. கலைஞரின்  கோபம் சரியாயிடும்ங்கிறதில் அழகிரி நம்பிக்கை யோடு இருக்காரு.'' 

""தி.மு.க.வோட ராஜ்யசபா எம்.பியும் கட்சியின் கலை இலக்கிய பகுத்தறிவு அணிக்குப்பொறுப்பு வகிப்பவருமான கனிமொழியோட ரியாக்ஷன் என்னவாம்?''

""அவரோட கவனமெல்லாம் இப்ப டெல்லியில்தான் இருக்குது. அதாவது, 2ஜி கேஸிலிருந்து தன்னை விடுவிக்கணும்னு டெல்லி ஹைகோர்ட்டில் அவர் போட்ட பெட்டிஷனுக்கு  சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ தரப்பு எதிரா வாதாடி ஸ்டே வாங்கிடிச்சி. அந்த ஸ்டேயை உடைச்சி, ஹைகோர்ட் பெட்டிஷனில் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கிற அளவுக்கு சட்டரீதியா எப்படியெல்லாம் வாதங்களை வைக்கலாம்ங்கிறது பற்றித்தான் வக்கீல்களோடு கனிமொழி ஆலோசனை நடத்திக்கிட்டிருக்காரு. அதனால, ஸ்டாலின் பெயரை  கலைஞர் அறிவிச்சது பற்றி கட்சிக்காரங்க கேட்டப்பகூட, அது தலைவரோட முடிவு. அவர் அறிவித்தால் சரியானது தானேன்னு சொல்லியிருக்காரு.''

""தயாநிதி மாறனும் தன் மீதான 2ஜி கேஸ் சீரியஸாகிவிடக் கூடாதுங்கிறதில்தான் தீவிரமா இருக்காராமே…?''

""ஆமாங்க தலைவரே.. .. அவர் மேலே புதுசா எஃப்.ஐ.ஆர் போடணும்னு ஒருத்தர் கேஸ் போட்டிருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஏற் கனவே தயாநிதி மேலே எஃப்.ஐ.ஆர் இருக்குது. அதில் விசாரணையைத் தொடரணும்னும் புது எஃப்.ஐ.ஆர். தேவையில்லைன்னும் உத்தரவிட்டிருக்கு. இப்படி 2ஜி நெருக்கடி சீரியஸாவதால எப்படியாவது இதிலிருந்து விடுபடணும்ங்கிறதில் தயாநிதி தீவிரமா இருக்காரு. அதற்காக கனிமொழியும் தயாநிதியும் ஜாயிண்ட் ஆபரேஷனை டெல்லியில் முடுக்கி விட்டிருக்காங்களாம்.''

""கனிமொழி பர்த்டே அன்னைக்குக்கூட தயாநிதி மாறன் நேரில் வாழ்த்தி கை கொடுத்திருக்காரே...''…


""அந்த பர்த்டேவுக்காக விளம்பரம், போஸ்டர், ஃப்ளெக்ஸ் பேனர்னு அசத்துன கனிமொழியோட ஆதர வாளர்கள்தான், கலைஞரோட அறிவிப்பால ரொம்ப அப்செட்டாகியிருக்காங்க. அதுவும் பர்த்டேவுக்கு மறுநாளே கலைஞர் இப்படி அறிவிப்பாருன்னு அவங்க எதிர்பார்க்கலை. ஸ்டாலின் பெயரை கலைஞர் அறிவித்த தை தவிர்த்திருக்கணும். நம்ம கட்சியை வழிநடத்த வேறு யாரும் இல்லைன்னு தலைவர் நினைக்கிறாரா? அடுத்தது யாருங்கிறதை தலைவருக்குப் பிறகுதான் கட்சி முடிவு செய்யணும்னு அவங்க பேசிக்கிட்டிருப்பது கனிமொழிக் குத் தெரியுமா தெரியாதான்னு நமக்குத் தெரியல.''

""கலைஞரோட அறிவிப்புக்குப் பிறகு மு.க.ஸ்டா லின் சைடில் என்ன மூவ்?''

""வாய்ப்பு அமைந்தால்  ஸ்டாலின் பெயரை நான் முன்மொழிவேன்னு கலைஞர் சொன்னாரு. ஸ்டாலினோ கலைஞரோட இந்த அறிவிப்பையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கிட்டு, அடுத்தடுத்த மூவ்களுக்கு ஒரு பிடிமானம் கிடைச்சிட்டதாக நினைத்து செயல்படுறாரு. இப்பவே பல மா.செ.க்களும் ஒ.செ.க்களும் அவரோட கட்டுப்பாட்டிலே தான் இருக்காங்க. இன்னும் முழுசா தன் னோட கண்ட்ரோலில் கட்சியைக் கொண்டு வரணும்னு ப்ளான் பண்ணியிருக்காராம். கட்சியின் நிலைப்பாடு பற்றி கலைஞர்- பேரா சிரியரைத் தவிர வேற யாரும் மீடியாக்கள் கிட்டே கருத்து சொல்லக்கூடாதுங்கிறதில் ஸ்டாலின் ரொம்ப வேகமா இருக்காரு.''

""புரியுதுப்பா...'' …

""அதே நேரத்தில், தனக்குப் பிறகு ஸ்டாலின்னு தெளிவுபடுத்தி, கட்சிக்காரர்களின் குழப்ப மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த கலைஞர், அந்த அறிவிப்புக்கப்புறம் முன்பைவிடவும் வேகமா எல்லா வேலை களையும் செஞ்சிக்கிட்டிருக்காரு. வழக்கம் போல அதிகாலையிலேயே பேப்பர்களை படிச்சி, ஆளுங்கட்சியோட செயல்பாடு களுக்கு சுடச்சுட பதில் எழுதுறது, உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுறது, அப்புறம் அது அச்சுக்குப் போறதுக்கு முன்னாடி வரிக்கு வரி திருத்துறதுன்னு எழுத்துப்பணியோடு, கலைஞர் டி.வி. புரோக்ராம்களையும் பார்த்து அதிலும் மாற்றங்கள் சொல்றாராம். அப்புறம் அறிவாலயத்தில் கட்சி வேலை, நிதி வசூல், தொண்டர்கள் வீட்டுத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்னு எல்லாமே ஸ்பீடாகத்தான் இருக்குன்னு கோபாலபுரம் வட்டாரம் சொல்லுது.''

""குமரி முனையில் உள்ள 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையை ஜெ.அரசு பராமரிக்காமல் சிதிலமடையச் செய்வதைக் கண்டித்து, பேராசிரி யர் தலைமையில் போராட்டம்னுதான் மா.செ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் போட்டாங்க. அப்புறம், கலை ஞர் தலைமையில் போராட்டம்னு அறிவிப்பு வந் தது. கடைசியில் பொதுக்கூட்டமா மாறியிருக்குதே?''

""அதனாலதாங்க தலைவரே, முன்பைவிட இப்ப கலைஞர்  ரொம்ப ஸ்பீடு ஆயிட்டாருன்னு சொன்னேன். தான் நிறுவிய சிலை, சுனாமியையே தாங்கிடிச்சி. ஆனா ஜெ. அரசின் அலட்சியத்தால் உப்புக்காற்றில் சிதையுது. அதற்கானப் போராட்டத் தை, தானே முன்னின்று நடத்தணும்னு கலைஞர் முடிவு செஞ்சிட்டாராம். திருவனந்தபுரத்துக்கு ஃப்ளைட்டில் போய் அங்கிருந்து காரில் கன்னியாகுமரிக்குப் போகணும். அது சரியா இருக்குமான்னு யோசிச்சதால, ட்ரெயினிலேயே கன்னியாகுமரி போறதுன்னு முடிவானது. சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பினால் மறுநாள் காலையில் 10 மணிக்குத்தான் ட்ரெய்ன் போகும். ஆனாலும், போய்த்தான் தீருவேன்னு கலைஞர் உறுதியாவும் ஸ்பீடாவும் இருந்திருக்காரு. இந்த நிலைமையில், சிலை பராமரிப்புக்காக டெண்டர் விளம்பரம் வந்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் இப்ப பொதுக்கூட்டமா மாறியிருக்கு. இதுவும் மாறுமான்னு தெரியாதுங்கிறாங்க.''

""அப்படின்னா, எம்.பி. எலெக்சன் தொடர்பான வேலைகளும் ஸ்பீடாகத்தானே இருக்கும்?

""அதில் ரொம்ப ஸ்பீடு இல்லை.. வியூகம் வகுக்கும் வேலைகள்தான் நடந்துக்கிட்டிருக்குது. மா.செ.க்கள் கூட்டத்தில் தென்சென்னை ஜெ.அன் பழகன் பேசுறப்ப தே.மு.தி.க.வைத் தேடி நாம போக வேணாம்.. அவங்களை ஜெ. கழட்டிவிட்டுட்டதால அவங்களா நம்மகிட்டே  வரட்டும்னு சொன்னதை நம்ம நக்கீரனில் போட்டிருந்தாங்களே.. அதுபற்றி பண்ருட்டி ராமச்சந்திரன்கிட்டே விஜயகாந்த் ஆலோசனை பண்ணியிருக்காரு.''

""பண்ருட்டியாரு என்ன சொன்னாராம்?''

""தி.மு.க. அப்படித்தான் நினைக்கும்னு சொன்ன பண்ருட்டி, கூட்டணியில் சேர்த்து அதிக சீட் கொ டுத்து ஜெயிக்க வச்சி, நாளைக்கு எம்.பி., மந்திரின்னு தே.மு.தி.க.வை ஏன் வளர்த்துவிடணும்னுதான் நினைக்கும். பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. எதுவா இருந்தாலும் அதோட கணக்கு இதுதான். அ.தி.மு.க தனிச்சி நிற்கும்னு ஜெ. அறிவிச்சிட்டாரு. பா.ம.க ராமதாஸ் அதற்கு முன்னாடியே அறிவிச் சிட்டாரு. கூட்டணி வைக்க ம.தி.மு.க ஆசைப்பட்டா லும் தனித்து நிற்கிற நிலைமைதான் ஏற்படும். நமக்கும் இப்ப கூட்டணி இல்லை. இப்படி எல்லாரும் தனித்து நிற்கிறப்ப, தி.மு.க மட்டும் தன்னோட பார்ட்னர் களான காங்கிரசையும் விடுதலை  சிறுத்தைகளையும் சேர்த்துக்கிட்டு வழக்கம்போல சீட்டுகளைப் பங் கிட்டுக்கொண்டு தேர்தலில் நிற்பதுதான் லாபம்னு நினைக்கும். ஜெ. ஆட்சி மேலே மக்களுக்கு அதிருப்தி இருக்குது. அது எதிர்ப்பு ஓட்டா மாறும்போது, ஜெயிக் கிற வாய்ப்புள்ள கட்சிக்குத்தானே மக்கள் ஓட்டுப் போடுவாங்க. அப்படிப் பார்த்தால் தி.மு.க.தானே அடுத்த நிலையில் உள்ள கட்சி. அதனால மக்கள் ஓட்டு தி.மு.க.வுக்குத் தான் விழும்னு கணக்குப்போட்டு காய் நகர்த்துவாரு. நாமும் கவனமா ஸ்டெப் வைக்கணும்னு விஜயகாந்த்கிட்டே பண்ருட்டியார் சொல்லியிருக்காரு.''

""கலைஞர், பேராசிரியருக்குப் பிறகு அரசியலில் ஆக்டிவ்வா இருக்கிற திராவிட இயக்க சீனியர் தலைவராச்சே பண்ருட்டியார்.. பாம்பின் கால் பாம்பறியும்ப்பா.. அடுத்த தகவல்?''

""நான் சொல்றேன்... ... சென்னைக்குப் பக்கத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனம் போன ஆட்சியில் முறையா அனுமதி வாங்கி ஆரம்பிச்ச தனியார் துறைமுகப் பணிகளுக்கு ஜெ. ஆட்சியில், பலவித எதிர்பார்ப்புகளோடு நெருக்கடி களும் இழுத்தடிப்புகளும் கொடுத்ததைப் பற்றி ஏற்கனவே நக்கீரன்தான் சொல்லி யிருந்தது. எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் எல் அண்ட் டி நிறுவனம் நிறை வேற்றுவதில்லை. அதனால்தான் இந்த இழுத்தடிப்பு. இந்த நிலையில், பிரதமரை வைத்து வீடியோ கான்பரன்ஸிங் முறையில் துறைமுகம் திறப்புன்னு அறிவிப்பு வந்ததில் ஜெ. அரசு டென்ஷனா இருக்குது. ஜெ.வையும் அந்த நிறுவனம் இன்வைட் பண்ணுனப்ப ரெஸ்பான்ஸ் இல்லையாம்.''

 லாஸ்ட் புல்லட்!

புத்தாண்டு பரிசாக இந்திய மக்களுக்கு ரயில் கட்டண உயர்வை அளித்திருக்கிறது மத்திய அரசு. 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணத்தை உயர்த்தி 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு கட்டணம் முதல் அனைத்துக் கட்டணங்களும் ஜனவரி 21 முதல் உயர்வதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது உறவுக்கார தி.மு.க.வினர் மீது ஜெ. அரசின் காவல்துறை போட்ட குண்டர் சட்டத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. போலீஸ் கமிஷனர் மாகாளி அவசரஅவசரமாகவும் இயந்திரத்தனமாகவும் செயல்பட்டிருப்பதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தவறான முறையில் குண்டர் சட்டத்தைப் போட்ட கமிஷனர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையை தி.மு.க. மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் ஜெ.அரசின் பழிவாங்கும் வழக்குகளிலிருந்து தி.மு.க.வினர் தப்பிக்க முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரான மறைந்த ஏ.எம்.கோபுவின் உருவச்சிலையை அறிவாலயத்தில் நடந்த விழாவில் கலைஞர் திறந்துவைத்தார். அவருக்கும் கோபுவுக்கும் கட்சிகடந்த நட்பு உண்டு. அதனால், கோபுவின் மகள் ஜான்சிராணி லட்சுமி முயற்சியில் உருவாக்கப்பட்ட சிலையை கலைஞர் திறந்தார். இந்த சிலை, சேலம் மாவட்டத்தில் உள்ள கோபு குடும்பத்தினரின் சொந்த கிராமத்தில் நிறுவப்படுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தரப்பிலோ, இந்த சிலை திறப்பில் நாம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்றும் கோபு குடும்பத்தினர் ஏன் கலைஞரை வைத்து திறந்தனர்  என்றும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

விளம்பரம்