புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2013


வலி.வடக்கில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்!- பதற்றம் தொடர்கிறது
வலிகாமம் வடக்கு இராணுவத்தினுடைய உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுடைய பகுதிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குள் சற்று முன்னர் புகுந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அங்கு பரிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து சற்றும் தளறாமல் உறுதியுடன் போராட்டத்தைத் தொடந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, தமிழ்வின் 
வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் தம்மை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேற்படி போராட்டத்திற்கு தேசிய ரீதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஆதரவினை வழங்கியுள்ளதுடன் அப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் இன்று காலை 8 :00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் கலந்து கொண்டிருந்தார்.
வடமாகாணத்தில் என்றும் நடைபெற்றிராத அளவு மக்கள் அங்கு கூடியிருந்து போராட்டத்தினை நடத்தியிருந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
இதன் போது அங்கு வந்த 6 பேர் பொது மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டும் பாணியில் அறிவுறுத்தியுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தினை குழப்பும் வகையில் செயற்பட்ட அவர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் தலையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அவர்களில் ஒருவரை மட்டும் பொலிஸார் கடமைக்கு கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். மற்றையவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் இராணுவத்தினருடைய வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கேட்ட மானிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நடு வீதியில் வைத்து இராணுவத்தினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குழப்பம் விளைவித்தவர்களை தாக்கியவர்களிடம் சென்று இராணுவத்தினர், உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
யாழ். உண்ணாவிரதப் போராட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உரையின் பின்னர் தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இன்று காலை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அவ்விடத்தை விட்டு சென்றதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் உதயன் பத்திரிகையின் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரது கமெராவையும் இனந்தெரியாத நபர்கள் பறித்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
3ம் இணைப்பு
உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் அட்டகாசம்!  ஊடகவியலாளர்களின் கமராவும் உடைப்பு
வலி.வடக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் இராணுவத்தினர் நுழைந்து ஊடகவியலாளர்களின்  கமராக்களை அடித்து நொருக்கியதுடன் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் சில மணித்தியாலங்களில் அவர் வெளியேறியதும் போராட்ட இடத்தில் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள் கலந்து கொண்டிருந்த மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு தாக்கியுள்ளனர்.  மக்கள் குறித்த நபர்களைப் பிடித்து காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
எனினும் அவர்கள் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டதனையடுத்து இராணுவத்தினர் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
அதனையடுத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவ சீருடையுடன் நுழைந்தவர்கள்  உதயன் ஊடகவியலாளர்களின் கமராவினை அடித்து நொருக்கியதுடன் அதனையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தினையடுத்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இராணுவம் மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தினை மேற்கொண்டுள்ளார்.
இராணுவத்தினரால் அடித்து உடைக்கப்பட்டு பறித்துச் செல்லப்பட்ட உதயன் ஊடகவியலாளர்களின் கமரா 'மெமறிக் காட்' கழற்றி எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும்  இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad