புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2013


வெடிகுண்டைப் பற்றியே அறிந்த யாழ். இராணுவத் தளபதிக்கு மக்களின் சந்தோசம் பற்றித் தெரியுமா?- சுரேஸ் பிறேமச்சந்திரன்
வலி. வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதென கூறியிருக்கும் யாழ். இராணுவத் தளபதியின் கருத்து, வடமாகாண சிவில் நிர்வாகத்தில் அதீத இராணுவத் தலையீடு இருப்பதை காட்டுவதாகவும் இதனை த.தே.கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பலாலி படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பொதுமக்களுடைய நிலத்தை மக்களிடம் மீளவும் கையளிக்க முடியாதென படைத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மக்கள் இங்கு சந்தோசமாக இருப்பதாக இராணுவத் தளபதி கூறியிருக்கின்றார். நிலங்களை பறித்து விட்டு, வீடுகளை விட்டு துரத்திவிட்டு மக்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கின்றார்கள் என கூறுவது கடைந்தெடுக்கப்பட்ட முட்டாள்தனமான பொய். மக்கள் சந்தோசமாக இருக்கிறார்களா, துக்கமாக இருக்கிறார்களா என்பது பற்றி இராணுவத் தளபதி தெரிவிக்க முடியாது.
இராணுவத் தளபதிக்கு துப்பாக்கிகளை பற்றியும் வெடிகுண்டுகளை பற்றியுமே தெரியும். மக்களைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஒருவேளை இராணுவத் தளபதியை வீட்டை விட்டு வெளியேற்றினால் அவரால் சந்தோசமாக இருக்க முடியுமா என்பதை அவர் முதலில் கூறவேண்டும். எனவே இராணுவ விடயங்களை பேசுவதற்கு குறித்தொதுக்கப்பட்ட இராணுவப் பேச்சாளர் உள்ளார்.
எனவே அரசியல்வாதிகளைப்போல் பேசுவதை இராணுவத் தளபதி முதலில் நிறுத்தவேண்டும்.
காணி அமைச்சர் கூறுகின்றார் 2014ம் ஆண்டு வடக்கில் இராணுவத்தினரின் முகாம்கள் அமைந்துள்ள பொதுமக்களின் நிலங்கள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றார். ஆனால் இராணுவத் தளபதி மக்களுடைய நிலத்தை வழங்க முடியாதென கூறியிருக்கின்றார் .
எனவே நாம் எதை நம்புவது? எனவே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால், இராணுவம் தன்டைய வேலையை பார்க்கவேண்டும். காணிகளை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களும், பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளுமே தவிர இராணுவத் தளபதி அல்ல. இந்த வகையில் மீண்டும், மீண்டும் மக்களுக்கு நிலத்தை வழங்க முடியாதென இராணுவத் தளபதி கூறும் கருத்துக்கள், வட மாகாண நிர்வாகத்திலும், சிவில் விடயங்களிலும் அதீதமான இராணுவத்தின் தலையீடுகள் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
எனவே இராணுவத் தளபதியின் கூற்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. மக்களுடைய நிலத்தில் இருந்து கொண்டு அதைக் கொடுக்க மாட்டோம் என முட்டாள்தனமாக இராணுவத் தளபதி பேச முடியாது என தெரிவித்துள்ளார்.

ad

ad