புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2013

சிறிலங்கா அரசின் அறிவிப்பை நிராகரித்தார் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா
வரும் நொவம்பர் மாதம் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பிலேயே நடைபெறும் என்று தான் உறுதிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா நிராகரித்துள்ளார். 

இதுதொடர்பாக கொமன்வெல்த் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், சில ஊடகங்களில் வெளியானது போன்று, சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது குறித்த எந்த செய்திக்குறிப்பையும் கமலேஸ் சர்மா வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், செயலணிக்குழுக்களின் தலைவர்களுடன் கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா தலைமையிலான குழு நடத்திய பேச்சுக்களின் போது, கொழும்பில் மாநாடு நடைபெறும் என்று கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்திருந்தார்.

இன்றைய கொழும்பு சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இதனையே தலைப்புச்செய்தியாக வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

அவர் நாளை தனது பயணத்தின் முடிவிலேயே அறிக்கை வெளியிடுவார் என்றும் கொமன்வெல்த் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்துவதா இல்லையா என்பது குறித்து ஆராய கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை கூட்டுமாறு கனடா கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad