19 ஏப்., 2013         சாமுவேலுவை திருமணம் செய்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு  பஞ்சம் பிழைக்க சேலம் வந்த 27 வயது பெண் லட்சுமி. பெயரில் மட்டுமே லட்சுமி இருக்க வாழ்க்கையோ நேரெதிர்.

வயிற்றை திங்கும் வறுமை எனும் கோர பசிக்கு ஏழ்மையை  தருவதை தவிர வேறொன்றும் இல்லாத குடும்பம்..

""இவங்க இங்கயேதான் இருப்பாங்க....5 வயசு வெங்கடேஷ்,2 வயசு நவீன்னு ரெண்டு பசங்க. கிடைக்குற  வேலைய செய்றது, வர்ற கூலில வாழ்க்கையை உருட்டுறது மதிய உணவுக்கு பக்கத்துலயே இருக்குற கோட்டை மாரியம்மன் கோயில் அன்னதானம், இரவு தூங்குறதுக்கு இங்கேயே பிளாட்பாரம். இப்படிதான் லட்சுமி வாழ்க்கைய ஓட்டுறாங்க'' என்கின்றனர் சேலம் பழைய பேருந்துநிலையத்தில் உள்ள பாத்திமாவும், வணிக வளாகவாசிகளும்.

அவருக்கு என்ன ஆனது?நடந்ததை விவரிக்கிறார் பண்ணாரி. 

""நானும் இங்க பிளாட்பார்ம் வாசி தாங்கண்ணு.சித்திரை ஒன்னுங்கிறதால நல்ல சாப்பாடு கிடைக்கும்னு இங்க கோயிலாண்ட வந்துட்டோம்..காலையில 4 மணி இருக்கும், "அய்யோ அம்மா முடியல'ன்னு புள்ள பிரசவ வலில துடிச்சுச்சு. என்ன பண்றதுனே தெரியலை ஆட்டோவுக்கு கூட  காசில்லாத நாங்கல்லாம் எங்க போகமுடியும்? பக்கத்துல எட்டுன தூரத்துலதான் அரசாங்க ஆஸ்பத்திரி இருக்குன்னு அங்க நடந்தே கூட்டி போனேன். பாவம் புள்ளையால நடக்க முடியல  மூச்சு வாங்குனுச்சு.  கால் மைல் தூரத்தையே ரெண்டு மணி நேரமா நடந்தோம். ஆஸ்பத்திரிக்கு போனதும் பிரசவ வார்டுல சேத்துக்கிட்டாங்க. ஆனா கொஞ்ச நேரத்துல என்கிட்டே வந்த   ரெண்டு  நர்சம்மாங்க "1000 ரூபா பணம் கொடுங்க'ன்னு கேட்டாங்க. அம்மா நாங்கல்லாம் நாதியத்தவங்க அவ்ளோ பணத்துக்கு எங்கம்மா போறதுன்னு சொன்னேன் 'காசில்லைனா பிரசவம் பார்க்க முடியாது'னு சொல்லி புள்ளைய பெட்டுல இருந்து இறக்கி விட்டுட்டாங்க...வேற வழி தெரியாம வந்த வழியே திரும்பினோம். புள்ளதாச்சி உடம்புல தெம்பில்லாம நடக்க முடியல. ஆனாலும் தட்டு தடுமாறி மெதுவா புள்ளைய கூட்டி வர 10 மணி ஆச்சுங்க'' என்றார் கண்ணீர் மல்க....


உச்சிவெயில் கொளுத்த, மீண் டும் பிரசவ வலி யெடுக்க லட்சுமியை வணிக வளா கம் மாநக ராட்சி கழிப் பிடம் பக் கத்திலேயே ரோட்டோரமா  அமர வைக்கிறார் பண்ணாரி...

வலி தாங்க முடியாத அலறல் கேட்டு ஓடி வந்த பாதசாரிகள்  "ஏ! ஏதாவது துணி இருந்தா மறைங்கடி' என அவரை மறைக்க, ""ஒண்ணுமில்லடா தங்கம் ஒண்ணுமில்ல மெதுவா மெதுவா மூச்சு விடு' என்றபடியே பண்ணாரி, லட்சுமியின் வயிற்றை அழுத்தி அழுத்தி பிடிக்கிறார். லட்சுமி, ஆழ மூச்சிழுத்து முக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட  அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14  அன்று ஒடுக்கப்பட்ட  தாயின் கருவறை உலகத்திலிருந்து மெல்ல மெல்ல வெளி வந்து இந்த புதிய பூமியை பார்க்க தொடங்கினான் லட்சுமியின் 3-வது  மகன். அருகி லேயே இருந்த கழிப்பிடத்திற்கு சென்று ஒரு ப்ளேடை வாங்கி வந்து பதமாக தொப்புள்கொடியை அறுத்து பையனை தூக்கிய பண்ணாரி 'ஏண்டி லட்சுமி அழகா செவ செவன்னு  சிங்கக்குட்டி பிறந்துருக்காண்டி'என லட்சுமியிடம் காட்ட பரவசத்தோடு மகனின் உச்சி முகர்ந்த  அபலைத் தாய்... அப்படியே அரை மயக்க நிலைக்கு போக அருகில் நிழலுக்கு தூக்கி சென்றனர்.

குழந்தை பிறந்ததால் ரத்த போக்கு நிற்கவில்லை.. "பிரசவ நேரத்துல உக்கரமா (புழுக்கம்) இருக்க கூடாது பிறந்த கொழந்தைக்கு உடனே தடுப்பூசி போடணும். அத விட தாய்க்கும் தடுப்பூசி போடணும். மேலும்  கொஞ்சமாவது ஓய்வு வேணும். இத்தனை பேர் சுத்தி இருந்தா அந்த தாய்க்கு எவ்ளோ அசூசையா இருக்கும் சொல்லுங்க. ஆனா என்ன பண்ண சாதாரண சனங்க வாழ்க்கை எப்பவுமே கஷ்டத்துல தானே கழியுது -வேதனைப் பட்டனர் சுற்றியிருந்த தாயுள்ளங்கள். லட்சுமியின் நிலை கருதி 

பத்திரிகையாளர்களும், பொது மக்களும் 108க்கு போன் செய்ய 200 மீட்டர் தொலைவே  உள்ள ஜி.எச்சில் இருந்து வெகு வேகமாக  அரை மணி நேரத்தில் வந்து (இதுதானா உங்க அவசர சேவை?) லட்சுமியையும், குழந்தையையும் ஜி.எச் பிரசவ வார்டில் சேர்த்தனர்.

பிரசவ வார்டு செவிலியர்களிடம் பேசினோம். ""இந்த லட்சுமியை இப்போதான் நாங்க முதன்முதலா பார்க்கிறோம்'' என்றனர் ஒரே போடாக.. அங்கு  வந்த டீன் வள்ளிநாயகம் ""லஞ்சம் கேட்கும் முறை இங்க இல்லை இருந்தாலும் விசாரிக்கிறேன்'' என்றார் வழக்கம் போல.

""இருக்குறவங்க தனியார் ஆஸ்பத்திரிக்கு போவாங்க இல்லாதவங்க அரசாங்க ஆஸ் பத்திரிக்கு வராங்க. ஆனா இங்கேயே பணம் கேட்டா எப்படி? ஏழைங்க வாழவே கூடாதா? காலையில பணம் கேட்டு அப்படி அலைய வச்சவங்க இப்போ என்னடி ப்ரெஸ்ச கூப்பிட்டு மிரட்டுறியா?னு இந்த நிலை மையிலும் லட்சுமிய உள்ள மிரட்டுறாங்க'' -பயந்தார் கணவர் சாமுவேல்.

""இங்க அரசாங்கம் எங்க ளுக்கான மருத்துவ உபகரணங்கள் எதையுமே விரைவா தருவதில்லை பல மருந்துகள் இங்கே இல்லை அதை வெளியே வாங்கதான் நாங்கள் பணம் கேட்கிறோம்''  என்றனர் பெயர் கூறாத சில செவிலியர்கள்.

நாம் தமிழக  சுகாதார இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம்  முறையிட்டோம்.

""மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உப கரணங்கள் தடையில்லாமல் வழங்கியே வருகிறோம். லட்சுமியின் நிலை வருந்தத்தக்கது. 1000 ரூபாய் பணம் கேட்டது என்ற புகாரை மருத்துவர்கள் குழு அமைத்து விசாரிக்கும் படி சொல்லியுள்ளேன் உண்மை என தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை உண்டு..'' என்றார் பொறுப்போடு.

இல்லாதவர்கள் இதயமாக இருக்க வேண்டிய அரசு மருத் துவமனையே அவர்களிடம் அபகரிக்க முயல எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடமையை செய்த பண்ணாரியும் பொது சனங்களுமே தொழ வேண்டிய நிஜ தெய்வங்கள்..