கருணை மனு மீது குடி யரசுத் தலைவர் எடுக்கும் காலதாம தத்தை காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மூவரின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கலைஞர், பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மரண தண்டணைக்கு எதிரான அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டபோது அதனை ஆயுள் தண்டனையாக குறைக்கும் வகையில் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அதனை அனுப்பி வைத்து தண்டனையை குறைத்தது தி.மு.க.அரசு. அதேபோல ""ஜெயலலிதாவும் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைஞர்.
தூக்குத் தண்டனை பெற்றவர்கள் அனுப்பும் கருணை மனுக்களை குடியரசு தலைவரும் அது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமும் நிராகரித்து விடுகிற நிலையில், தூக்குத் தண்டனை பெற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்கிற கேள்வி கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து ஆராய்ந்தோம்.
தமிழக சட்டமன்றத்தில் 29.8.2011-ல் அறிக்கை வாசித்த ஜெயலலிதா, ""கருணை மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப் பட்டபிறகு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். எனினும் மறுநாளே சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார். அப்போது அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற குரல்கள் எழுந்த போதும் அதற்கு எந்த பதிலையும் ஜெயலலிதா சொல்லவில்லை.
தமிழக அரசின் நிலைப்பாடு இப்படியாக இருக்கும் நிலையில், சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அதே குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது. இந்நிலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் விவாதித்த போது,’’""கருணை மனு தொடர்பாக மாநில அரசுக்குரிய அதிகாரம் பற்றி அரசியலமைப்பு சட்ட விதி 161 கூறுகிறது. ஆனால் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்த விதி 161-யை பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என 257(1) கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி "அதனால் தனக்கு அதிகாரம் இல்லை' என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 257(1)வது பிரிவு என்பது மத்திய அரசின் நிர்வாக வரம்புகளில் மாநில அரசு தலையிடக்கூடாது என்றுதான் சொல்லியிருக் கிறது.
மேலும், ""தடா சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களையும் சாதாரண வழக்குகளில் தண்டனை பெற்றவர்களையும் ஒப்பிடக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்பது போல குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்களுக்கு முன்பும் எல்லோரும் சமம் தான். அதனால் கருணை மனு விவகாரத்தில் சாதாரண குற்றம் பயங்கரவாத குற்றம் என பேதங்களுக்கு இடமளிக்கக் கூடாது.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கினை தடா சட்டத்தின் படி விசாரித்ததே தவறு என்று இதே நீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படி சொன்ன நீதிமன்றம் அதே சட்டத்தின்படிதான் தூக்கு தண்டனையையும் விதித்தது. இது முரண்பாடானது மட்டுமல்ல, நீதியை கொலை செய்ததற்கு சமம். அதனால் புல்லரின் மனு மீதான தீர்ப்பினை பேரறிவாளன் விஷயத்தில் ஒற்றுமைப் படுத்தக் கூடாது''’’என்கிறார் கண்ணதாசன்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிமான் சந்துரு அவர்களிடம் கேட்டபோது, ’""உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது. இந்த நிலையில் தமிழக மக்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வலிமை பெறும்போது தான் கருணை மனு விவகாரத்தில் புதிய சூழல் உருவாகும். அது, மத்திய-மாநில அரசு கள் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வழிவகுக்கலாம்'' என்கிறார். அரசு தரப்பு வட் டாரங்களில் விசாரித்த போது நளினிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்து கலைஞர் தீர்மானம் நிறைவேற்றிய போது ஜெயலலிதா கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதனால், இப் போது அமைச்சரவை கூடி முடிவெடுக்க ஜெயலலிதா தயங்குவதாகவே சொல்கிறார்கள்.