புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2013



           பிரபல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கருணாநிதியின் மீது பாய்ந்த அபாயகரமான சட்டப்பிரிவுகள் மருத்துவ வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துச் சொன்னதற்காக -nakkeeran இந்த தண்டனையா? என்பதே மருத்துவ உலகின் கேள்வி.

"செருப்புக்கு ஜெயில் தண்டனை! ஜெ. ஆர்டர்' என்று கடந்த இதழில் நாம் சொல்லியிருந்த கடைசி நேர செய்தியின் முழு வடிவம்தான் இங்கே...

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தன். கடந்த 27-ந்தேதி மதியம் ஜெயலலிதா அவரைப் பார்த்துவிட்டு குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து பின் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். மறுநாள் 28-ந்தேதி சிவந்தியாரை மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்து வந்த அவரின் பர்சனல் டாக்டர் பேராசிரியர் கருணாநிதியை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவசர அவசரமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையிலும் அடைத்து விட்டனர்.

"என்னை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியதோடு சட்டையையும் பிடித்து டாக்டர் கருணாநிதி இழுத்து தள்ளினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேனாம்பேட்டை எஸ்.ஐ. ஆசைத்தம்பி கொடுத்த புகாரையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறது போலீஸ் வட்டாரம்.

சம்பவம் பற்றி அப்பல்லோ வட்டாரத்தில் விசாரித்தோம்.

""ஆஸ்பிட்டலோட சீஃப் செக்யூரிட்டி இன்சார்ஜா "சிங்' சார் இருக்காரு. 27-ந்தேதி சி.எம்.  இங்க வர்றாங்க. கொஞ்சம் அலர்ட்டா இருங்க. பேஷன்ட்ஸ்சோட மூவ்மெண்ட்டை சரியா வாட்ச் பண்ணுங்கன்னு கூப்பிட்டு சொல்லிட்டாரு. சி.எம்.மும் வந்துட்டு போயிட்டாங்க. ரொம்ப லேட்டாதான் எங்களுக்கு ஆஸ்பிட்டல்ல ஏதோ பிரச்சினை ஆயிடுச்சுன்னு தெரிஞ்சது. டாக்டர் கருணாநிதியை அரெஸ்ட் பண்ணி ரிமாண்ட் பண்ணிட்டாங்கன்னு கேள்விப்பட்டோம். அவரு இங்க (அப்பல்லோ) விசிட் டிங் டாக்டரா வருவார். சிவந்தியாருக்கு மட்டும் பர்சனல் டாக் டர் அவர்...'' என்கின்றனர். இரண்டு மகன் கள் மருத்துவர்கள், ஒரு மகள் சட்டக் கல்லூரி பேராசிரியர். சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவராக 25 ஆண்டுகளும், பேராசிரியராக 5 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள டாக்டர் கருணாநிதி, சென்னை சேத்துப்பட்டில் "சாய்நாத் மருத்துவமனை'யை சொந்தமாக நடத்தி வருகிறார். ஆரம்பகாலங்களில் சென்னை எழும்பூர், புதுப்பேட்டையில் அதிகளவில் இலவச வைத்தியம் பார்த்ததினால் உள்ளூர் வாசிகள் "ஓசி டாக்டர்' என்ற பெயரையே செல்லமாக சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.



டாக்டர் கருணாநிதியிடம் ஓசி வைத்தியம் பார்த்த அந்தக் கால மலரும் நினைவுகளை நம்மிடம் அசைபோட்டனர். வள்ளியம்மாள்-தாமோதரன் தம்பதியினர். 

""அப்போ கொள்ளை நோயின்னு ஒரு நோயி... மெட்ராசுல ரொம்பப் பேரை காவு வாங்கிக்கிச்சு. எல்லா ஆஸ்பிட்டல்லயும் லைன்னு நிக்கும். ஜனங்கள்லாம் அங்கியே தான் கிடப்பாங்க. இதான் சாக்குன்னு டாக்டருங்க பீஸு, மருந்து, மாத்திரை, ஊசின்னு எல்லாத்துக்கும் விலையை ஏத்தி வுட்டுட்டாங்க. மவராசன் கருணாநிதி டாக்டருதான் இந்த புதுப்பேட்டை வூருக்கு புண்ணியம் கட்டிக்கினாரு. துட்டே வாங்காம ஊட்டுக்கு ஊடு வந்து வைத்தியம் பார்த்தாரு. ஆமா, அவரைப் பத்தி இப்ப இன்னாத்துக்கு விசாரிக்கிறீங்க? எதுன்னா ஆயிடுச்சா அவுருக்கு?'' என்று கேட்டவர் களுக்கு "ஒன்றுமில்லே... சும்மாதான்' என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்.

இப்படி மதிப்பான பின்னணி கொண் டிருக்கும் டாக்டர் கருணாநிதியை ஏன் போலீசார் அவசர அவசரமாக கைது செய்தனர்? 

டாக்டர் கருணாநிதியின் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

""முதல்வர் ஜெ.விடம், " "ஷூ கவர்' மாட்டிக்கிட்டு உள்ளே போங்க. இது ஐ.சி.யு. வார்டு. ப்ளீஸ் ஒத்துழைப்பு கொடுங்க'ன்னு டாக்டர் கருணாநிதி சொன்னதை அவங்களால ஏத்துக்க முடியலே. இதான் பிரச்சினையே. 

வார்டோட என்ட்ரன்ஸ் "மிரர் கேட்'லயே சி.எம். மோட "ரூட்' ஆபீசர்ஸ் டி.எஸ்.பி. லெவலில இருக்கற மூணு பேரு நின்னுக்கிட்டிருக்காங்க. எஸ்.ஐ. லெவல் ஆபீசர்ஸ் ஆஸ்பிட்டலோட மெயின் கேட்ல கொஞ்சபேரும், அதுக்கு உள்ளே கொஞ்ச பேரும் "ரோப்' மூலமா பப்ளிக்கை மூவ் பண்ண விடாம பாத்துக்கிட்டிருந்தாங்க. இந்த "ரோப்' மெயின்டெய்ன் லிஸ்ட்ல இருக்கற எஸ்.ஐ. ஆசைத்தம்பி யுடன் ஐ.சி.யு.ல கூடவே இருந்து சிவந்தியாரை பார்த்துக்கற டாக்டர் கருணாநிதி மோதிக்கறதுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லே... 

உயிரை காப்பாத்தறதுலயிருந்து செத்தா போஸ்ட் மார்ட்டம் பண்றது வரைக்கும் மக்களோடு மக்களா இருக்கற மருத்துவத்துறைக்கு இந்த நாள் மறக்க முடியாத நாள்...'' என்று குமுறித் தள்ளிவிட்டனர். இந்த வாதங்களை அப்படியே முன்வைத்து போலீஸ் தரப்பில் மீண்டும் பேசினோம்.

""கம்ப்ளைண்ட்ல "ஷூ' கால் மேட்டரைப் பத்தியெல்லாம் ஒண்ணுமே இல்லியே'' என்று இழுத்தனர். டாக்டர் கருணாநிதி என்னதான் சொல்கிறார்? அவரை லைனில் பிடித்தோம்.

நாம் சம்பவம் பற்றி பேசத் தொடங்கியதுமே, "வேண்டாமே ஸார்... தயவு செஞ்சு வேண்டாமே ஸார். நான் எதுவும் சொல்ற மனநிலையில் இல்லை' என்று உருக்கமும், பதற்றமும் நிறைந்த குரலில் வேண்டுகோள் வைத்தவர் மேலும் பேசுவதை தவிர்த்தார்.

டாக்டர் கருணாநிதி கைது எப்படி நடந்தது? 


சேத்துப்பட்டில் இருக்கும் டாக்டர் கருணாநிதியின் சாய்நாத் மருத்துவமனையில் இருந்துதான் 28-ந்தேதி காலை அவரை போலீசார் அழைத்துச் சென்றதாக ஒரு தகவல் கிடைக்கவே, "சாய்நாத்' ஏரியாவில் விசாரித்தோம்.

""ஆஸ்பிட்டல்ல பேஷன்டுகளை பார்த்துக்கிட்டிருந்த டாக்டரை திடீர்னு மதியத்துக்கு மேலே காணோம். கிளீனிங் செய்யற லேடிதான் "போலீஸ் வந்து கூட்டிக்கிட்டுப் போனாங்க'ன்னு ஒரு தகவலை குடுத் தாங்க. உடனே என்ட்ரன்ஸ்ல இருக்கற சி.சி.டி.வி. காமிராவுல இருந்த பதிவுகளை பார்த்தோம். ஆஸ்பிட்டலுக்கு அடிக்கடி செக்கப்புக்கு வர்ற சேத்துப்பட்டு போலீஸ் ஒருத்தரும், கூட அடையாளம் தெரியாத வேற இடத்து போலீஸ் நாலஞ்சு பேரும் இருந்தாங்க. உடனே அவங்க டாட்டருக்கு தகவல் கொடுத்தோம். 


அவங்களும் வந்தாங்க. எந்த போலீசும்,  அரெஸ்ட் பத்தி இன்ஃபார்ம் பண்ணவே இல்லை. ப்ரண்ட்ஸுங்க மூலமா தகவல் கிடைச்சு தேனாம் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்க போன சில நிமிடங்கள்லயே டாக்டரை ரிமாண்ட் பண்ணிட்ட தகவல் கிடைச்சுடுச்சு. ஏன்தான் இப்படி அநியாயம் பண்றாங்களோன்னு தெரியலே'' என்று பொரிந்து தள்ளிவிட்டனர்.

இந்த சூழ்நிலையில்தான் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தலைமையில், நடந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுத் தனர் சங்கத்தினர். ஆனால், மனு வைப் பெறாமலேயே ஆர்ப்பாட் டத்துக்கு அனுமதி மறுத்ததோடு, "பேசித் தீர்த்துக் கொள்ள வேண் டிய விவகாரம் இது... பிரச்சினை யை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று காவல் உயரதிகாரிகள் சொன்னதாக ஒரு தகவல் வெளி யானது. இதுபற்றி டாக்டர் ரவீந்திரநாத்திடமே கேட்டோம்.

""டாக்டர் கருணாநிதி ஒரு பொது மருத்துவர். மருத்துவப் பேராசிரியராக ஆண்டொன்றுக்கு ஆயிரம் மாணவர்கள் என்ற கணக்கில் ஐந்தாண்டு காலத்தில் ஐயாயிரம் மருத்துவர்களை தயாரித்து மக்கள் பணியாற்ற அனுப்பி வைத்தவர். அவர் மீது இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டில் வேகமான நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஷூ கால்களுடன்  ஐ.சி.யு.வில் நுழைய எந்த மனிதருக்கும் மருத்துவ ரீதியாக அனுமதி தரப்படுவ தில்லை. இது சாதாரண ஃபார்மாலிட்டிஸ் அல்ல. உயிர் காக்கும் நடவடிக்கை. இதைக் கண்டிக்காமல் விடுவதுதான் பொறுப்பற்றத்தனம் எனலாம். டாக்டர் மீது பொய்ப்புகார் கொடுத்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை, மருத்துவத் துறைக்கு பாதுகாப்பு, டாக்டர் மீதான வழக்கை நிபந்தனையின்றி வாபஸ் பெறுவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 6 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பது உறுதி'' என்றார் உறுதியான குரலில்.

இண்டியன் மெடிக்கல் அசோசியேஷனின் தமிழ்நாடு தலைவரான டாக்டர் ஜெயபால், ""தலைக்கு கவர் கேப், முகத்துக்கு மாஸ்க், காலுக்கு ஷூ கவர் என்ற செட்டப்போடுதான் ஐ.சி.யு. உள்ளே செல்ல வேண்டும். இதை சுத்திகரிக்கப் பட்ட ஆடை என்றுதான் சொல்வோம். டாக்டர் கருணாநிதி கைது என்பது மிகவும் வருத்தமான ஒன்று. கண்டிக்கத்தக்கதும் கூட...'' என்கிறார்.

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டின் வக்கீல்கள் சங்க முன்னாள் பிரசிடெண்ட் ஜெ.தூயமணி தலைமையில் 15 வக்கீல்கள், போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விரிவான ஒரு கடிதத்தை கடந்த 30-ந் தேதி நேரில் கொடுத்துள்ளனர். 

வக்கீல் தூயமணியிடம் பேசினோம், ""டி.ஜி.பி. ஒன்றுமே தெரியாததுபோல நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். "எந்த வழக்கிலும் அரெஸ்ட் என்பது கம்பல்ஷன் கிடையாதே சார்... ஏன் இப்படி உங்க துறையினர் வேகம் காட்டுகிறார்கள்?' என்று கேட்டோம். மௌனமாயிருந் தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். 70 வயது முதியவரான ஒரு டாக்டர் தள்ளிவிட்டதில் இளமையான எஸ்.ஐ. ஆசைத்தம்பி கீழே விழுந்துவிட்டார் என்று சொல்வது காவல்துறையின் பலகீனமான செலக்ஷனையே காட்டுகிறது'' என்றார் நுணுக்கமாக.

டாக்டர் கருணாநிதி பற்றி நன்கு அறிந்தவரும், சைதாப் பேட்டை கோர்ட் வக்கீல்கள் சங்க முன்னாள் செயலாளருமான வாசுதேவன், ""வக்கீல்கள், டாக்டர்கள் என ஒட்டுமொத்த சமூகநலத்துறைக்கும் விடப்பட்டிருக்கும் மறைமுக அச்சுறுத்தலாகவே இதைப் பார்க்கிறோம்'' என்றார்.

யார் பர்மிஷனும் இல்லாமல், எந்த இடத்திலும் விசாரணை என்கிற பெயரில் போலீஸ் பூட்ஸ் கால்களுடன் நுழைய முடியும்... ஐ.சி.யு. தவிர. அதை போலீஸ் மறந்துவிட்டதா? அல்லது நடந்து முடிந்துவிட்ட ஒரு சம்பவத்தை மூடிமறைக்க துணை நிற்கிறதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

ad

ad