புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2013


அமைச்சர் கெஹலிய போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கக்கூடாது: சரவணபவன் எம்.பி
அரசாங்கத்தில் ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிழையான செய்திகளை வழங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், தனது உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் பத்திரிகை வழமை போன்று வெளியாகுவதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்திருந்தமை பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது வெப் ஓப் செட் அச்சு இயந்திரம் முற்று முழுதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், சீட் ஸ்பிரட் அச்சியந்திரத்தைப் பயன்படுத்தியே அச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை விநியோகம் சீராக இடம்பெற்று வருகின்ற போதிலும் முப்பத்திரெண்டு பக்கங்களாக வெளிவரும் தமது பத்திரிகை, தற்போது 12 பக்கங்களைக் கொண்டதாகவே வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உதயன் மீதான தாக்குதலுக்கு உள் விவகாரமே காரணமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷமன் ஹலுகல்ல தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரும் இதே முடிவுக்கு வந்து விசாரணையை விரைவாக முடித்ததாக சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்
சம்பவம் அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்றதாகவும் காலை 10 மணியளவில் பொலிஸார் விசாரணையை முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தன்னை சூழ்ந்திருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாகவும், ஜனாதிபதியும் தன்னைச் சூழ தவறான நபர்களை வைத்திருப்பதாகவும் இத்தகைய சூழலில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நற்பெயருக்கு சிலர் களங்கம் ஏற்படுத்த முயல்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், இத்தகைய கருத்தினையே 200ம் ஆண்டு உதயன் தாக்கப்பட்ட போதும் அரசாங்கம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிர்வாகம் இராணுவம் மற்றும் தமிழ் அரசியல் கட்சியொன்றின் கையிலேயே இருப்பதாகவும், அங்கு அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் இராணுவம் தொடர்புபட்டுள்ளதாகவும், மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அரசியல் வாதியொருவரைப்போல செயற்படுவதாகவும் சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ad

ad