புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எவரும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தல் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் எம்.எஸ்.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற சமுர்த்திப் பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும்
வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுபான்மைச் சமூகங்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை இன்று நாட்டின் பெரும்பான்மைச் சமூகங்களும் பலன்களை அனுபவிக்கும் வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
மறைந்த தலைவர் மர்ஹும் எம். எச்.எம்.அஷ்ரப் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் தனக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் சமூக நலனுக்காக உயிரைப் பணயம் வைத்து அந்த தேர்தலில் போட்டியிட்டார். அப்போது எமது கட்சி வட, கிழக்கு மாகாணத்தில் 17 ஆசனங்களைப் பெற்றதுடன் நில்லாது எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டது.
அண்மையில் அமைச்சர் அதாவுல்லா அரசியலமைப்பில் புதிய சீர்த்திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முயற்சித்தார். அதனை எதிர்த்த ஒரேயொரு முதுகெலும்புள்ள மனிதர் எமது தலைவர் றவூப் ஹக்கீம் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மக்களால் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற்ற உறுப்பினர் வெற்றி பெற்றதன் பின்னர் தனது மனச்சாட்சிப்படி வாக்களிக்க முடியும் என்றிருந்தால் அது ஒரு ஏமாற்று வார்த்தையாகும். எனவே தான் அமைச்சர் அத்தாவுல்லா திருத்தத்தைக் குப்பையில் வீச வேண்டும் என்று எமது தலைவர் கூறியிருக்கிறார்.
பதின்மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரம் இருந்தும் எமது மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யும் போது கூட பல்வேறு பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காணி, பொலிஸ் அதிகாரம் ஒழிக்கப்பட்டால் அல்லது நீக்கப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
அதிகாரம் கையிலிருக்கும் போது கூட அதனைப் பிரயோகிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாம் அந்த அதிகாரம் கைவிட்டுப் போன பின்னர் எதனைச் சாதிக்க முடியும் என்றார்.

ad

ad