புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் காட்டம்
2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது சட்டவிரோதமாகும் என அரசியல் கைதியான கந்தசாமி விஜயகுமாரின் சிரேஸ்ட சட்டத்தரணியான கே.வி தவராசா நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த சந்தேக நபரான கந்தசாமி விஜயகுமார் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி வவுனியா ஓமந்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் 1988ம் ஆண்டு சுயவிருப்பத்தில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றதுடன் வன்னியில் எல்.டி.டி ஈ.இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளராக கடமையாற்றியதுடன் கெப்பிற்றி கொல்லாவ பிரசேத்தின் பல கிராமங்களில் பல சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை கொலை புரிந்துள்ளதாக போதிய சான்றுள்ளதாக பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் இந்தக் கைதியின் விசாரணைகளை முடித்து வழக்குத் தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் உண்டா என்பதைத் தீர்மானிப்பதற்காக சட்டமா அதிபரிடம் தமது விசாரணை அறிக்கைகளை கையளித்திருந்தனர்.
பொலிசாரினால் வழங்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த சட்டமா அதிபர், இந்த சந்தேக நபரான கந்தசாமி விஜயகுமாருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய போதிய சான்றுகள் இல்லாமையினால் விடுதலை செய்யும்படி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவுப்பிரிவின் அத்தியட்சகருக்கும் எழுத்தமூலமாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய பயங்கரவாதத் தடைப்பிரிவின் பொலிஸ் பரிசோதகரான அதிகாரி, நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தது யாதெனில்,
பயங்கரவாதத் தடைப்பிரிவின் பொறுப்பதிகாரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிடர் ஜெனரல் சுகந்த கம்லத்தை தொடர்பு கொண்டு இந்தக் கைதியின் விடுதலைக்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் எனவே சட்டமா அதிபரின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கைதியை விடுதலை செய்ய வேண்டாமெனவும் நீதவானிடம் தெரிவித்தார்.
அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா பொலிசாரின் விண்ணப்பத்திற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமது வாதத்தில்
இந்தக் கைதி கடந்த 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிசாரின் விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 7இன் கீழ் இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 7இன் கீழ் வழக்கு விசாரணை முடிவடையும் வரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரிவு 7உப பிரிவு (1)வின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது மட்டுமின்றி வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் வழக்கு முடிவடைவதற்கு முன்னரும் நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை எந்த நேரத்திலும் விடுதலை செய்யும் அதிகாரம் சட்டப்படி சட்டமா அதிபருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் விடுதலை செய்ய எடுக்கப்படும் தீர்மானங்களை இந்த நீதிமன்றம் மட்டுமின்றி எந்த நீதிமன்றிலும் கேள்விக்குட்படுத்த முடியாது. சட்டத்தின்படி பொலிசாருக்கு விசாரணை செய்யும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் சம்மதத்துடன் விடுதலை செய்யும் அதிகாரம் இந்த நீதிமன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் விடுதலை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னர் கைதியை தொடர்ந்து தடுத்து வைப்பது சட்ட விரோதமான தடுத்து வைப்பு மாத்திரமின்றி மிக மோசமான மனித உரிமை மீறலுமாகும்.
சட்டரீதியற்ற முறையில் பொலிசார் இவ்வாறான விண்ணப்பத்தை இந்த நீதிமன்றில் முன் வைப்பது சட்டத்தை மீறும் செயல் மட்டுமின்றி சட்டமா அதிபரின் தீர்மானத்தையும் கேள்விக்கு உட்படுத்துவதாக அமைகிறது.
எனவே இந்த நீதிமன்றம் பொலிசாரின் வேண்டுகோளை நிராகரித்து கைதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தமது வாதத்தை முன்வைத்தார். பொலிசாரினதும் எதிரியின் சட்டத்தரணியினதும் வாத பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி டி சில்வா 16ம் திகதிக்கு தனது தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ad

ad