9 ஜூலை, 2013

இளவரசன் சாவு - நீதி விசாரணை - ஒட்டுமொத்த​ப் பின்னணிகளை​யும் விசாரிக்க வேண்டும்! - திருமாவளவன் கோரிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இளவரசன் சாவு குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர்
சிங்காரவேலு அவர்களின் தலைமையில் நீதி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த வேண்டுகோளை ஏற்கும் வகையில் தமிழக அரசு இவ்வாறு ஆணையிட்டிருப்பதை வரவேற்கிறோம். இளவரசனின் சாவில் பல்வேறு ஐயங்கள் இருப்பதாக இளவரசனின் பெற்றோர் கூறியுள்ளனர்.  மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிற இளவரசன் குடும்பத்தினரின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.  ஆகவே, இளவரசன் கொலை செய்யப்பட்டானா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியதும் உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் பொறுப்பாக உள்ளது. அத்தகைய பொறுப்பை உணர்ந்து, உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில்  தமிழக அரசு நீதிவிசாரணைக்கு ஆணையிட்டிருப்பது மிகப்பெரும் அளவில் ஆறுதலை அளிக்கிறது. 

அதேவேளையில், விசாரணையின் எல்லையானது இளவரசனின் சாவு என்பதாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது.  திவ்யா - இளவரசன் காதல் மற்றும் திருமணத்தைத் தொடர்ந்து தருமபுரி அருகே நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி கிராமங்களில் நடந்த வன்முறைகள் திவ்யாவின் தந்தை நாகராஜனின் சாவு, அதன் பின்னர் திவ்யாவையும் இளவரசனையும் திட்டமிட்டுப் பிரித்த சதி நடவடிக்கைகள், சாதியின் பெயரால் திவ்யா குடும்பத்தினருக்குச் செய்த அச்சுறுத்தல்கள் மற்றும் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து வடமாவட்டங்களில் நடந்த தீ வைப்புகள், படுகொலைகள், மரக்காணம் வன்முறைகள் என நீதிவிசாரணையின் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

நாகராஜன் மற்றும் இளவரசன் சாவுகளின் பின்னணியில் உள்ள சாதியவாதிகளின் சதிகளை அறியாமல், அநாகரிகமான மனித உரிமை மீறல்களை, சாதிய வன்கொடுமைகளை, பொதுமக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கட்டுப்படுத்த இயலாது. எனவே, தமிழக அரசு திவ்யா - இளவரசன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து இளவரசன் இரயில்வே பாதையில் பிணமாகக் கிடந்தது வரையில் நடந்த அனைத்து வன்முறைகளையும், அதற்கான பின்னணிகளையும் முழுமையாக விசாரித்திட வேண்டும்.  
தற்போது நீதிவிசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் சிங்காரவேலு அவர்களைப் பற்றி சிலர் அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். விசாரணை தொடங்குவதற்கு முன்பே நீதியரசர் மீது இத்தகைய மாறுபட்ட கருத்து வெளியாகியிருப்பது விசாரணையைப் பாதிக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இளவரசனின் குடும்பத்தினர் நம்பத்தகுந்த வகையிலும், மனநிறைவு அடையும் வகையிலும் வேறு ஒரு நீதியரசரின் தலைமையில் நீதிவிசாரணை நடத்த ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், இளவரசன் சாவு தொடர்பான குற்றப் புலனாய்வு விசாரணைக்கு பயன்தரும் வகையில் தடய அறிவியல் வல்லுநர் ஒருவரின் தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய ஆய்வுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.  
இவ்வாறு கூறியுள்ளார்.